காற்றில் கலந்த கூண்டுப் பறவை!



கூண்டுப் பறவை அதன் குறுகிய கூண்டுக்குள் உலவுகிறது
வெட்டப்பட்ட சிறகுகளுடன், கட்டப்பட்ட கால்களுடன் பாடுவதற்கு வாயைத் திறக்கிறது
கூண்டுப் பறவை தான் காணாத விஷயங்களைப் பற்றி நடுக்கத்துடன் பாடுகிறது
அதனுடைய குரல் தூரத்து மலைகளில் எதிரொலிக்கிறது
ஏனென்றால், அது விடுதலையைப் பற்றிப் பாடுகிறது!

மாயா ஏஞ்சலோ

இந்த வலிமையான வலி நிறைந்த எழுத்துக்குச் சொந்தக்காரர் மாயா ஏஞ்சலோ. கவிஞராகவும் எழுத்தாளராகவும் உலகம் முழுவதும் அறியப்பட்ட மாயா, கடந்த கால வரலாற்றின்
சாட்சியாக என்றென்றும் கம்பீரமாக நின்று கொண்டிருப்பார்! 1928 ஏப்ரல் 4 அன்று பிறந்தார் மாயா. இயற்பெயர் மார்குரைட் ஆன் ஜான்சன். அன்றைய காலகட்டத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஏற்பட்ட அத்தனை துன்பங்களையும் ஒடுக்கு முறைகளையும் மாயாவின் குடும்பமும் சந்தித்தது. சிறுவயதிலேயே பெற்றோர் பிரிந்துவிட, இங்கும் அங்குமாக அவரது வாழ்க்கை அலைக்கழிந்தது. 8 வயதில் அம்மா வீட்டில் தங்கியிருந்தபோது, அம்மாவின் நண்பரால் பாலியல் வன்முறைக்கு ஆளானார் மாயா.

அதற்குப் பிறகு 5 ஆண்டுகள் வரை இறுக்கமான மனநிலையிலேயே இருந்தார். அப்போதுதான் அவருடைய கவனம் படிப்பிலும் எழுத்திலும் திரும்பியது. உறவினர் உதவியுடன் சார்லஸ் டிக்கன்ஸ், ஷேக்ஸ்பியர் போன்றவர்களின் படைப்புகளைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு டிராம் வண்டி ஓட்டுநராக வேலை செய்தார். 17 வயதில் ஓர் அமெரிக்கர் மூலம் தாயானார். அந்த மனிதர், குழந்தைக்குத் தகப்பனாக வேறோர் ஆளைக் காட்டி ஏமாற்றிவிட்டு ஓடினார். வறுமையில் குழந்தையைக் காப்பாற்றுவது கஷ்டமாக இருந்தது. உணவகத்தில் சமையல் வேலை செய்தார். மெக்கானிக் பட்டறை யில் வேலை செய்தார். இரவு விடுதி களில் நடனமாடினார். கார்களுக்கு பெயின்ட் அடித்தார். பாலியல் தொழிலாளியாகவும் பணி புரிந்தார்.
இதன் பிறகுதான், டாஷ் ஏஞ்சலோ அறிமுகம் கிடைத்தது.

அவரைத் திருமணம் செய்துகொண்டார். நடனத்தையும் இசையையும் கற்றுத் தேர்ந்தார். இசை ஆல்பம் வெளியிட்டார். அமெரிக்கர்களுக்கு இணையாக சம உரிமை கேட்டு, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் போராட்டம் நடத்தினர். அப்போராட்டங்களில் தீவிரமாகக் கலந்து கொண்டார் மாயா. மார்டின் லூதர் கிங் மற்றும் மால்கம் எக்ஸ் ஆகியோரிடம் நட்பு கொண்டிருந்தார். 1968ம் ஆண்டு மாயாவின் பிறந்த நாள் அன்று மார்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அன்றிலிருந்து பிறந்த நாள் கொண்டாடுவதையே விட்டுவிட்டார் மாயா.1969ம் ஆண்டு, ‘கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்’ என்ற பெயரில் சுயசரிதையை வெளியிட்டார். இது அவருடைய 17 வயது வரையி லான வாழ்க்கையை ஆவணமாக்கியது. பெண்ணின் அவலத்தையும் ஆப்பிரிக்க அமெரிக்கரின் நிலையையும் நெஞ்சை உலுக்கும் விதத்தில் எடுத்துச் சொன்னது இந்தப் புத்தகம். நாடு முழுவதும் பரவலான வரவேற்பு... பிரமாதமான விற்பனையும் கூட.7 சுயசரிதைகள், கட்டுரை, கவிதைத் தொகுப்புகள் உள்பட ஏராளமான படைப்புகள் மாயா ஏஞ்சலோவிடமிருந்து கிடைத்திருக்கின்றன. இவற்றோடு, திரைப்படங்களுக்கும் கதை எழுதினார். திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரித்தார். இயக்குனராகவும் செயல்பட்டார். நடித்தார்.

இசைத்துறையில் சாதிப்பவர்களுக்கான மிக உயரிய ‘கிராமி’ விருது பெற்றார். ‘பிரசிடென்டல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ என்கிற உயர் விருது அமெரிக்க அதிபர் ஒபாமாவால் 2011ம் ஆண்டு  மாயாவுக்கு வழங்கப்பட்டது. எந்த அளவு துன்பத்தை அனுபவித்தாரோ அதே அளவுக்கு தன் திறமை மூலம் உச்சம் தொட்டார் மாயா ஏஞ்சலோ. அமெரிக்க  அதிபர்கள் தொடங்கி, எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரைத்துறையினர், இசைத்துறையினர், உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்கள் கொண்டாடும் மிகச் சிறந்த ஆளுமையாக வலம் வந்த மாயா ஏஞ்சலோ, 2014 மே 28 அன்று, 86 வயதில் காற்றில் கலந்துவிட்டார்!        *

மாயா மொழிகள்

*நீங்கள் சொன்னதை மக்கள் மறந்துவிடுவார்கள், நீங்கள் செய்ததை மக்கள் மறந்துவிடுவார்கள். நீங்கள் அவர்களை எப்படி உணர வைத்தீர்கள் என்பதை மட்டும் என்றுமே மறக்க மாட்டார்கள்!

*ஒரு புன்னகை மூலம் ஏராளமான அன்பைப் பெற்றுவிட முடியும்!4நாம் வண்ணத்துப் பூச்சி யின் அழகைக் கண்டு மகிழ்கிறோம். அந்த அழகைப் பெற, அது கடந்து வந்த பாதையைப் பார்க்க மறந்துவிடுகிறோம்! 4நடக்கும் எல்லாவற்றையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். அதற்காக நம் முயற்சியைக் குறைத்துக்கொள்ளக் கூடாது! 4மற்றவர்களின் மேகத்தில் வானவில்லாக இருக்க முயற்சி செய்யுங்கள்!

சஹானா - மாயா கவிதா