டேஸ்ட்டி சிப்ஸ்!



வகை வகையான காய்கறிகள், விதம் விதமான கீரைகள் என எல்லாம் இருந்தாலும், சாப்பிட அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு கொஞ்சம் சிப்ஸை கண்ணில் காட்டினால் போதும்... இரண்டு வாய் உணவு கூடுதலாகவே இறங்கும். தினமும் கடைகளில் வாங்குகிற சிப்ஸின் தரம், தயாராகிற முறை என எல்லாம் அம்மாக்களுக்குப் பயத்தைக் கிளப்புவதால், பல வீடுகளிலும் சிப்ஸுக்கு தடை.

‘‘கடைகள்ல சிப்ஸ் வாங்கத் தயங்கறவங்க வீட்லயே தரமான, சுத்தமான முறையில விதம் விதமான சிப்ஸ் தயாரிச்சு உபயோகிக்கலாம். சரியா சுத்தம் செய்யாத கிழங்கு, காய்கறி, திரும்பத் திரும்ப உபயோகிக்கிற எண்ணெய்னு கடைகள்ல விற்கற சிப்ஸ்ல சுத்தத்தையோ, தரத்தையோ எதிர்பார்க்க முடியாது. அதுவே வீட்ல தயாரிக்கிற போது, அப்பப்ப நமக்குத் தேவையான அளவை ஃப்ரெஷ்ஷாகவும் சுத்தமாகவும் தயாரிச்சுக்கலாம்.

தரமான சிப்ஸ் வேணும்னு விரும்பறவங்களுக்கு விற்பனை செய்து, பெரிய அளவுல லாபமும் பார்க்கலாம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா. உருளைக்கிழங்கு, வாழைக்காய், நேந்திரங்காய், பாகற்காய், சேனைக்கிழங்கு, ஃப்ரெஞ்ச் ஃப்ரை என விதம் விதமான சிப்ஸ் தயாரிப்பதில் நிபுணி. திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு சிப்ஸ் ஆர்டர் எடுத்துச் செய்கிற அளவுக்கு இதில் பிஸி.

‘‘வீட்டு உபயோகத்துக்காக பண்ண ஆரம்பிச்சதுதான், இன்னிக்கு பிசினஸா பண்ற அளவுக்கு வளர்த்திருக்கு. கடைகள்ல செயற்கையான கலர், தரமில்லாத எண்ணெய் உபயோகிச்சு செய்யறதால ஆரோக்கியத்துக்குக் கொஞ்சமும் உத்தரவாதமில்லை.

சிப்ஸுக்கு தேவையான கிழங்கு தொடங்கி, மளிகை சாமான்கள், பேக்கிங் கவர், எடை மெஷின், சீலிங் மெஷின்... எல்லாத்துக்கும் சேர்த்து 3 ஆயிரம் முதலீடு இருந்தா இந்தத் தொழில்ல துணிஞ்சு இறங்கலாம். 100 கிராம் சிப்ஸை 30 ரூபாய்க்கு விற்கலாம். கிலோ கணக்குல மொத்தமா பண்ணி வச்சிட்டு, விற்கறதுக்குப் பதில், அப்பப்ப ஆர்டருக்கு ஏத்தபடி அளவா தயாரிச்சுக் கொடுக்க வேண்டியது முக்கியம். 50 சதவிகித லாபம் நிச்சயம்’’ என்கிறவரிடம், 500 ரூபாய் கட்டணத்தில் ஒரே நாள் பயிற்சியில் 6 வகையான சிப்ஸ் செய்யக் கற்றுக் கொள்ளலாம்.

(97907 50573)
படம்: ஆர்.கோபால்

‘‘உருளைக்கிழங்கு, வாழைக்காய், நேந்திரங்காய், பாகற்காய், சேனைக்கிழங்கு, ஃப்ரெஞ்ச் ஃப்ரை என விதம் விதமாக சிப்ஸ் தயாரிக்கலாம்!’’

ஹெல்த்தி சூப்!

இருமலுக்கு சித்தரத்தை... ஜலதோஷத்துக்கு கண்டதிப்பிலி... அஜீரணத்துக்கு சுக்கு... இப்படி நம் வீட்டு சமையலறையே ஒரு குட்டி மருத்துவமனைதான். ஆனாலும், கைகளுக்கு எட்டிய இடத்தில் இருக்கும் இந்த மருந்துப் பொருட்களின் மகத்துவம் தெரியாமல், தும்மலுக்கும் தலைவலிக்கும் கூட மருத்துவரைத் தேடிப் போய் மொய் எழுதினால்தான் பலருக்கும் திருப்தியே.

‘‘மூலிகைகளை மருந்தா நினைச்சு சாப்பிடறது தான் சிரமம். அதையே சுவையான ஒரு உணவா சாப்பிட்டுப் பழகிட்டா, ஆரோக்கியத்தைத் தக்க வச்சுக்கிறது சுலபம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஷியாமளா. மாற்று மருத்துவரான இவரது வீட்டில் மூலிகை சூப்புடன்தான் தினசரி பொழுதே விடியுமாம்! ‘‘ஒரு டாக்டரா நான் மத்தவங்களுக்குச் சொல்ற விஷயங்களை முதல்ல நான் பின்பற்றணும். ‘தினம் சாப்பாட்டுல இஞ்சி யும் ஓமமும் சேர்த்துக்கோங்க’னு சொல்றது சுலபம். செய்யறது கஷ்டம். கஷாயமாகவோ, பொடிச்சோ சாப்பிடறது எல்லாருக்கும் சரியா வராது. அதையே சூப் வடிவத்துல எடுத்துக்கிறதுன்னா விரும்புவாங்க. எங்க வீட்ல மூலிகைத் தோட்டம் போட்டிருக்கேன். துளசி, சித்தரத்தை, கண்டதிப்பிலி, ஓமவல்லி, மஞ்சள், இஞ்சி,

வல்லாரை, கரிசலாங்கண்ணினு எல்லா செடிகளும் இருக்கு. காலையில காபி, டீக்கு பதிலா தினம் ஒரு மூலிகையில தயாராகிற சூப்தான் குடிப்போம். இந்த வயசுலயும் என்னால 20 வயசுக்கான உற்சாகத்தோட ஓடியாடி வேலை செய்ய முடியுதுன்னா இந்த உணவுப் பழக்கம்தான் காரணம்...” என்கிற ஷியாமளா, மூலிகை சூப் தயாரிப்பதை பகுதி நேர பிசினஸாகவும் செய்கிறார்.
‘‘பத்துக்கும் மேலான மூலிகை சூப் வகைகள் செய்யலாம்.

 காய்ச்சலுக்கு, இருமலுக்கு, நோய் எதிர்ப்பு சக்திக்கு, நீரிழிவுக்கு, எடைக் குறைப்புக்கு, மூட்டுவலிக்கு, சரும அழகுக்கு, கல்லீரல் ஆரோக்கியத்துக்கு... இப்படி நிறைய இருக்கு. மூலிகைகளை வீட்லயே வளர்த்து உபயோகிக்கலாம். முடியாதவங்க நாட்டு மருந்துக் கடைகள்ல வாங்கிக்கலாம். மூலிகை சூப் தயாரிக்கிறதை முழு நேர பிசினஸா செய்ய நினைக்கிற வங்க ஆரம்பத்துல 1,000 ரூபாய் முதலீடு போட்டா போதும்.

தேவையான மூலிகைகள், மற்ற மளிகைப் பொருட்கள், கப் உள்ளிட்ட எல்லாம் இதுல அடக்கம். ஒரு கப் சூப்பை 20 ரூபாய்க்கு விற்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம்” என்கிற ஷியாமளாவிடம், ஒரே நாள் பயிற்சியில் 10 வகை மூலிகை சூப்புகளை 750 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம். எந்தெந்த சூப், யாருக்கு உதவும் என்கிற கூடுதல் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறார். (ணூ98409 18039) ‘‘காய்ச்சலுக்கு, இருமலுக்கு, நோய் எதிர்ப்பு சக்திக்கு, நீரிழிவுக்கு, எடை குறைப்புக்கு, மூட்டுவலிக்கு, சரும அழகுக்கு, கல்லீரல் ஆரோக்கியத்துக்கு... இப்படி எல்லாவற்றுக்கும் மூலிகை சூப் இருக்கு...’’

பியூட்டி ஊஞ்சல்!

ஊஞ்சல் அழகு...
பொம்மைகளும் அழகு...
ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடும் பொம்மைகள் அழகோ அழகு!

ஜூலா எனப்படுகிற இந்த பொம்மை ஊஞ்சல்கள், சமீப காலமாக நகரத்து மக்களின் வீடுகளை அலங்கரிக்கத் தொடங்கியிருக்கின்றன. வாஸ்துப்படி அது வீட்டுக்கு நல்லது என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. சென்னையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, விதம் விதமான பொம்மை ஊஞ்சல்கள் செய்து அசத்துகிறார். ‘‘பி.டெக் படிச்சிட்டு ஒரு காலேஜ்ல லெக்சரரா வேலை பார்த்திட்டிருந்தேன். குழந்தை பிறந்ததும் வேலையை விட வேண்டிய கட்டாயம். ஏதாவது பிசினஸ் பண்ணணுங்கிற எண்ணம் இருந்தது.

கிளாஸ் பெயின்ட்டிங், பானை ஓவியம், ஃபேஷன் ஜுவல்ஸ், பேப்பர் ஜுவல்ஸ் பண்றது, குவில்லிங்னு பல கலைகள் தெரியும். பொம்மை ஊஞ்சல் கத்துக்கிட்டு, நானே செய்து வீட்ல மாட்டி வச்சிருந்தேன். நிறைய பேர் அதைப் பார்த்துட்டு, ‘ரொம்ப அழகா இருக்கே... எந்த ஊர்ல வாங்கினீங்க... எங்களுக்கும் வேணுமே’னு கேட்டாங்க. நானே பண்ணினதுனு சொன்னதும், ஆர்வமாகி ஆர்டர் கொடுத்தாங்க. கேட்கறவங்களுக்கு மட்டும் பொழுதுபோக்கா பண்ணிக் கொடுத்திட்டிருந்தேன். அது அப்படியே வாய்வழி விளம்பரமாகி, பிசினஸா பண்ற அளவுக்கு என்னை பிஸியாக்கியிருக்கு...” என்கிறார் ராஜேஸ்வரி.

மேக்ரமி ஒயர், ஊஞ்சலுக்கான குச்சிகள், மணிகள், சலங்கை உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் என ஒரு ஊஞ்சலுக்கான முதலீடு 250 ரூபாய். பின்னல் கைவந்து விட்டால் ஒரே நாளில் ஒரு
ஊஞ்சல் செய்து முடிக்கலாம்.‘‘அடிப்படையான பின்னல் ஒண்ணுதான். பின்னலோட அளவு, இடையில நாம சேர்க்கிற மணிகள், ஊஞ்சலோட நீள, அகலம்னு மத்த விஷயங்கள்லதான் வேறுபாடு காட்ட முடியும். பொம்மையோட கேட்கறவங்களும் இருக்காங்க. ஊஞ்சலோட கலர் காம்பினேஷனுக்கு ஏத்தபடி பொம்மையை செலக்ட் பண்ணலாம்.

பொம்மையும் செய்யத் தெரிஞ்சவங்களுக்கு இன்னும் வசதி. பொம்மையில்லாத ஒரு ஊஞ்சலை 500 ரூபாய்க்கு விற்கலாம். பிறந்த நாள், கிரகப்பிரவேசம்னு எல்லா
விசேஷங்களுக்கும் அன்பளிப்பா கொடுக்கலாம்” என்கிற ராஜேஸ்வரி, ஒரே நாள் பயிற்சியில் 750 ரூபாய் கட்டணத்தில் பொம்மை ஊஞ்சல் செய்யக் கற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கிறார். (ணூ80127 04731) ‘‘கேட்கறவங்களுக்கு மட்டும் பொழுதுபோக்கா பண்ணிக் கொடுத்திட்டிருந்தேன். அது அப்படியே வாய்வழி விளம்பரமாகி பிசினஸா பண்ற அளவுக்கு என்னை பிஸியாக்கி யிருக்கு...’’