இனிது இனிது வாழ்தல் இனிது!



‘உனக்குப் புரியாத   ஒன்றைப் பற்றி விமர்சனம் செய்யாதே...’ என்கிறது ஒரு ஆங்கிலப் பொன்மொழி.உண்மையில் பெரும்பாலான விமர்சனங்கள் விமர்சிக்கப்படுகிற பொருளையோ, நபரையோ பற்றித் தெரியாமல் வீசப்படுகிற அஸ்திரங்களே... இந்தக் கூத்து கணவன் - மனைவி உறவுக்குள் மிகவும் சகஜம். ‘என் மனைவிக்கு என் மேல அன்பே இல்லை... ஏதோ பேருக்கு சமைக்கிறதும், பிள்ளைங்களைப் பார்த்துக்கிறதுமா இருக்கா...’ எனக் கணவர்களும்- ‘அவரில்லாம ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாதுனு நினைச்ச காலம் மாறி, இப்ப அவர் இல்லாத நேரமே சந்தோஷம்னு நினைக்க வச்சிட்டார்’ என மனைவிகளும் முறையிடுவதை தினம் தினம் பார்க்கிறேன். இந்த இரண்டின் பின்னணியுமே விமர்சனம்...

 கடுமையாக ஒருவர் மீது ஒருவர் வைக்கிற விமர்சனம். காதலிக்கிற போது பல விஷயங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. அப்போது காதல் மயக்கத்தில் கண்கள் மூடியிருக்கும். கல்யாணத்துக்குப் பிறகு அத்தனையும் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்படும். காதலிக்கிறவர்களுக்கு நான் அடிக்கடி சொல்கிற ஒரு விஷயம் என்ன தெரியுமா? கண்களை நன்கு திறந்து வைத்துக்கொண்டு, போதுமான அளவு காதலியுங்கள். குறைந்தது 2 வருடங்களாவது காதலிப்பது நலம். கல்யாணத்துக்குப் பிறகு ஒரு கண்ணை மூடிக் கொண்டு வாழப் பழகுங்கள்...

அடுத்தவரை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்கிற இந்தக் குணத்தை நாம் அனைவரும் மிக இள வயதிலிருந்தே கற்றுக் கொள்கிறோம். தவறுகளைக் கண்டுபிடிக்கிற நிபுணர்களாகவே வளர்க்கப்படுகிறோம். 90 சதவிகித மதிப்பெண்கள் வாங்கியிருக்கிற குழந்தையைப் பாராட்டும் ஆசிரியர்களைவிட, ஏன் 99 சதவிகிதம் வாங்கவில்லை எனக் கண்டிக்கிறவர்களே அதிகம். எல்லா இடங்களிலும் இப்படியே பழகுகிற பிள்ளைகள், மற்றவரைக் கடுமையாக விமர்சிக்கிறவர்களாகவே வளர்கிறார்கள்.

அலுவலகத்தில் மேனேஜர், பணியாளர்களை விமர்சிப்பார். மாமியார், மருமகளைக் கண்டபடி விமர்சிப்பார். கணவன், மனைவியை கன்னாபின்னாவென விமர்சிப்பார். விமர்சனம் என்கிற பெயரில் கிண்டல், கேலி செய்வதை ஒரு பொழுதுபோக்காகவே வைத்திருக்கிறவர்களும் நிறைய இருக்கிறார்கள்.சதா சர்வகாலமும் அடுத்தவரை விமர்சித்தே பழகியவர்களை சொர்க்கத்திலேயே கொண்டு போய் விட்டாலும், அங்கேயும் குற்றம், குறைகளைக் கண்டுபிடித்து விமர்சிப்பார்கள். அவர்களது இந்தக் குணம் எதிராளியின் சுய மரியாதையையே நாசமாக்கி விடும்.

‘ஒரு காபி கூட ஒழுங்கா போடத் தெரியலை... உன்னை இப்படித்தான் வளர்த்தாங்களா’ என மனைவியை விமர்சிக்கிற கணவருக்கு நல்ல காபி போடத் தெரிந்திருக்காது!
தனக்கு ஒரு விஷயம் தெரியாவிட்டாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்தவர் அதே விஷயத்தைச் செய்கிற போது அநாகரிகமாக விமர்சனம் செய்கிற இந்த மனோபாவம் கணவன்-மனைவிக்குள் அளவுக்கு மீறிக் காணப்படுகிறது.

மற்றவரைக் குறை சொல்கிற, விமர்சிக்கிற, மட்டம் தட்டிப் பேசுகிற மனோபாவம், வயதாக ஆக மனப்பக்குவத்தின் காரணமாக மட்டுப்படுவதுதான் இயல்பு. மாமியார் - மருமகள் விஷயத்தில் பார்த்தாலோ, வயதான மாமியார்தான் மேலே சொன்ன அத்தனை விஷயங்களையும் மருமகளிடம் செயல்படுத்துகிறார். தான் சந்தித்த பிரச்னைகளை தனது மருமகளும் சந்திக்கக் கூடாது என்கிற பரந்த மனது அவருக்கு அந்த வயதில் இல்லாமல் போகிறது. ‘நான் அந்தக் காலத்துல கஷ்டப்பட்டேன்’ என்கிற சுயநலப் பேச்சுதான் மேலோங்கி நிற்கும்.

அலுவலகத்தில் வேலையாட்களை மிரட்டி, உருட்டி, விமர்சித்தே வேலை வாங்கியிருப்பார் கணவர். ரிட்டயர்மென்ட்டுக்கு பிறகும் அவரால் அந்த மனநிலையில் இருந்து வெளியே வர முடியாது. வீட்டுக்குள் என்ன செய்வதெனத் தெரியாமல், மனைவியை விரட்டிக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும் இருப்பார்.விமர்சனம் செய்கிறவர்கள் பல நேரங்களில் தனது பிரச்னைகளுக்குத் தன் விதியையோ, ஜாதக அமைப்பையோ, நேரத்தையோ காரணமென நம்பிக் கொண்டு புலம்பித் தள்ளுவார்கள்.

கணவனோ, மனைவியோ தன் சாதனைகளைப் பற்றிப் பேசும் போது பெருமையாகவும், அதுவே அடுத்தவரது சாதனைகளைக் கேட்கும் போது கிண்டலாகவும் எதிர்கொள்வதுண்டு. இந்த மனப்பாங்கின் காரணமாக, ஒரு பிரச்னை ஏற்படும் போது, அதைத் தொடர்ந்த புதிய வாய்ப்புகளைப் பற்றிக்கூட கவனிக்காமல் விடுவார்கள். கணவருக்கு வேலை போய் விட்டது என வைத்துக் கொள்வோம். அதைவிட சிறப்பான வேறொரு வேலை அவருக்கு முன்பு காத்திருக்கும். ஆனால், அவரது விமர்சனப் பார்வையின் காரணமாக அதைக் கவனிக்கத் தவறுவார். ‘எனக்கு எப்போதும் வாழ்க்கையில பிரச்னைகள்தான்’ என்றும் அத்தனையும் தீர்வுகளற்ற பிரச்னைகள் என்றும் நொந்து கொள்வார்கள்.

விமர்சனம் செய்வதென்பது அடுத்தவரை குறை சொல்வதற்குச் சமமானதுதான். அப்படிச் சொல்லச் சொல்ல கணவன்-மனைவி உறவுக்குள் விரிசல் விழும். கள்ளக்காதல், விவாகரத்து, விவாகரத்து இல்லாமலே பிரிந்து வாழ்வது போன்ற பலதுக்கும் இதுவே காரணம். ‘உனக்கு எதையும் செய்யத் துப்பில்லை...’ என சர்வசாதாரணமாக நாம் முன் வைக்கிற விமர்சனம் பல நேரங்களில் குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை. ‘சரியா படிக்கிறதில்லை... மார்க் எடுக்கலை...’ என்றே சொல்லிச் சொல்லிக் குழந்தைகளைச் சுற்றி ஒரு நம்பிக்கையற்ற உலகத்தை உருவாக்குகிறோம். தான் உதவாக்கரை என்றும் தனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் உணர ஆரம்பிக்கிற அந்தக் குழந்தை, வாழ்க்கையின் மீது பிடிப்பை இழக்கிறது.

குறைகளை மட்டுமே பார்க்கப் பழகினால், வாழ்க்கையில் நல்ல விஷயங்களே நம் கண்களுக்குத் தெரியாமல் போகும். மனைவி அவரது வேலையிடத்தில் திறமையானவர் எனப் பெயர் எடுத்திருப்பார். வீட்டில் சரியாக சமைக்கத் தெரியாத காரணத்தினால், அவரது மற்ற தகுதிகளை ஒதுக்கித் தள்ளி விட்டு, நெகட்டிவ்விஷயத்தை மட்டுமே அடிக்கோடிட்டு விமர்சனம் செய்து கொண்டிருப்பார் கணவர். நல்லதைப் பிரித்துப் பார்க்கவோ, பாராட்டவோ தெரியாது. மனைவி என்றால் விமர்சனத்துக்குட்பட்டவள் என்ற எண்ணத்தில் அதையே தொடர்வார். அது அன்யோன்யத்தைக் குலைக்கும்.

எப்போதும், எங்கிருந்தாவது விமர்சனங்களை எதிர்கொள்கிற நிலையில் இருப்பவரா நீங்கள்? கீழ்க்கண்ட விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்... - உங்களைப் பற்றி விமர்சனம் செய்கிறவரிடம் கவனமாகவே இருங்கள்.- உங்களை விமர்சிக்கிற உரிமையை நீங்கள் யாருக்குக் கொடுக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உதாரணத்துக்கு... உங்கள் நலனில் அக்கறை கொண்ட ஒருத்தர் உங்களைப் பற்றி விமர்சிப்பதில் தவறான நோக்கம் இருக்க வாய்ப்பில்லை. அதுவே மட்டம் தட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில், தகுதியே இல்லாத ஒருவர் உங்களைப் பற்றி முன் வைக்கிற விமர்சனங்கள் தொடர்ந்தால், அந்த நபரை விட்டு விலகியிருக்கப் பழகுவதே நலம்.

 உங்களைப் பற்றிக் கிளம்புகிற விமர்சனங்கள், ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டும். மாறாக உங்களைத் தாழ்வு மனப்பான்மையில் தள்ளி, தன்னம்பிக்கையைச் சிதைக்கிற மாதிரி இருந்தால், அந்த இடத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். - காந்தி போன்ற மகான்கள் எப்போதும் எந்த இடத்திலும் மற்றவரைக் குறை சொல்லியோ, மோசமாக விமர்சித்தோ பேசியதில்லை. அதையே நாமும் பின்பற்றலாம். அடுத்தவரிடம் உள்ள கெட்டதைத் தவிர்த்து நல்ல விஷயங்களைக் கவனித்துப் பாராட்டக் கற்றுக் கொண்டால் நம் சுய மரியாதையையும் இழக்காமலிருப்போம்.
உங்களுடைய விமர்சனப் பார்வையை மாற்றிக் கொள்ள என்ன செய்யலாம்?- உங்களிடமுள்ள தவறுகளை நீங்கள் சுலபமாக மன்னித்து விடுவீர்கள்தானே... அதே போல அடுத்தவரையும் பார்க்கப் பழகுங்கள்.

மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.- மற்றவர்களை அவர்களது நிறை, குறைகளுடன் அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களைத் திருத்துகிறேன் பேர்வழி என விமர்சனத்தில் இறங்கும் போதுதான் பிரச்னை.- கடவுளிடம் கூட வேண்டுதல் என்கிற பெயரில் பலரும் புகார்களையே முன் வைக்கிறோம். ‘அது சரியில்லை... இதை மாத்திக் கொடு’ என்றுதான் கேட்கிறோமே தவிர, ‘என்னை மாற்றிக்கொள்ள வழிகாட்டு’ என்று எப்போதும் கேட்பதில்லை.

‘மற்றவர் என்னைப் புரிந்து கொள்வதற்குப் பதில், நான் மற்றவரைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை எனக்குக் கொடு...’‘மற்றவர் எனக்குக் கொடுப்பதைத் தவிர்த்து, நான் மற்றவர்க்குக் கொடுக்கும் நிலையைத் தா...’‘மற்றவரது குறைகளையும் குற்றங்களையும் சகித்துக் கொள்கிற மன வலிமையை எனக்குக் கொடு...’ என வேண்டிக் கொண்டவர் அன்னை தெரசா. அனைவரிடமும் அப்படி இருக்க முடியாது என்றாலும், வாழ்க்கைத்துணையிடம் மட்டுமாவது இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்தால் காலமெல்லாம் காதல் வாழும்!

(வாழ்வோம்!)

விமர்சனம் செய்வதென்பது
அடுத்தவரை குறை
சொல்வதற்குச்
சமமானதுதான். அப்படிச்
சொல்லச் சொல்ல
கணவன் - மனைவி
உறவுக்குள் விரிசல் விழும்.

குறைகளை மட்டுமே பார்க்கப் பழகினால், வாழ்க்கையில் நல்ல விஷயங்களே நம் கண்களுக்குத் தெரியாமல் போகும்.

எழுத்து வடிவம்: மனஸ்வினி
மாடல்: பாடகர் பிரசன்னா - பாரதி
படங்கள்: ஆர்.கோபால்