பெண்ணாகப் பிறந்ததற்குப் பெருமை!



மனம் திறந்து, வெளிப்படையாகப் பேசுவது எப்போதும் எல்லோராலும் முடிவதில்லை. குறிப்பாக நடிகைகளுக்கு அது சாத்தியமே இல்லாத நிகழ்வு. சமீபத்தில் சென்னையில் நடந்த ‘கேணி சந்திப்பு’ கூட்டத்தில் நடிகையும் இயக்குநருமான ரோகிணிக்கு அது சாத்தியமாகி இருக்கிறது. இரண்டரை மணி நேர நிகழ்வில் ரோகிணி பேசியவற்றில் சில சுவாரஸ்ய துளிகள்...

* ஒரு இடத்துக்குப் பேசப் போனபோது, ‘என்கிட்ட ஏதாவது கேக்க விரும்பறீங்களா’ன்னு கேட்டுட்டேன். ‘ஆசை அதிகம் வச்சு... பாட்டுக்கு  டான்ஸ் பண்ணிக் காட்ட முடியுமா’ன்னு கேட்டாங்க. 8 மணி நேரம் டிராவல் பண்ணி அந்த இடத்துக்குப் போயிருந்தேன். அது பல வருடங்களுக்கு முன்னால சினிமாவுல நான் ஆடின டான்ஸ். அந்த டான்ஸ்தான் அவங்க விருப்பம்னு தெரிஞ்சிருந்தா அதுக்கான தயாரிப்போட போயிருந்திருப்பேன். சில பேருக்கு ரோகிணின்னா அந்த டான்ஸ்தான் ஞாபகத்துக்கு வருது... என்ன பண்றது?!

* வாழ்க்கையில ரெண்டு விஷயம் தற்செயலா நடக்குதுன்னு நினைக்கிறேன். ஒண்ணு, நாம ஆணாகவோ, பெண்ணாகவோ, மூன்றாம் பாலினமாகவோ பிறக்கறது. ரெண்டாவது, நாம எங்கே பிறக்கிறோம் அப்படிங்கிறது. இவைதான் நம்ம வாழ்க்கையை நிர்ணயிக்குது. அந்த ரெண்டும் எனக்கு நடந்திருக்கு. நான் பெண்ணாகப் பிறந்தது. ரெண்டாவது, நான் பிறந்த இடம்... நான் நடிகையானதுக்குக் காரணமான தற்செயல். இதுக்காக நான்வருத்தப்பட்டதும் உண்டு.

* குழந்தை நட்சத்திரமா இருக்கும்போது நிறைய சாக்லெட் வாங்கிக் குடுப்பாங்க. அழற சீனா இருந்தா சந்தோஷப்படுவேன். டபுளாசாக்லெட், ஐஸ்க்ரீம் கிடைக்கும்!

* 14-15 வயசுல திரும்பவும் நடிக்க வேண்டிய சூழ்நிலை. ‘எந்த ஆணும் உன்னைத் தொடக்கூடாது. அப்படி தொடற சூழல் ஏற்பட்டா உன்னை தற்காத்துக்கணும்’னு சொல்ற காலம். என்னைவிட 20 வயசு அதிகம் இருக்கற ஹீரோவோட நடிக்க சொன்னாங்க. நடிப்புன்னா அதுவரை, அழற காட்சியா இருந்தாலுமே எனக்கு சந்தோஷமான விஷயமா இருந்தது. ஆனா, இதை என்னால புரிஞ்சுக்க முடியலை. விகாரங்கள் ஒரு பக்கம்... அதோடு, திட்டு வேற வாங்கணும்.

ஒரு டான்ஸ் மாஸ்டர், ‘சினிமா இண்டஸ்ட்ரியில இதுக்கு மேல நீ ஒரு படம் பண்ணினேன்னா நான் என் தொழிலை விட்டுட்டே போயிடறேன்’னெல்லாம் சொன்னார். 15 வயசுல, ஹீரோவோட சேர்ந்து காதல் காட்சியில அந்த அளவுக்கு ஈடுகொடுத்து நெருக்கமா நடிக்க முடியாததுதான் காரணம். அதுக்கப்புறம் காதலை வெளிப்படுத்தறதையும் கத்துகிட்டு, கவர்ச்சியா உடை அணிஞ்சும் நடிச்சேன்.

* இந்த உலகத்தை நான் புரிஞ்சுகிட்டது பத்திரிகைகள் மூலமாதான். எந்த போட்டோவை போடுறாங்க, அதுக்கு என்ன கேப்ஷன் எழுதுறாங்கன்னு பார்ப்பேன். ‘கவர்ச்சிக்கன்னி’, ‘ரோகிணி மோகினியா?’ன்னு என்னென்னவோ எழுதியிருக்கும். எனக்கு ஒண்ணும் புரியலை. ‘நடிப்பு என் தொழில்... அதை இவங்க வேற என்னவோ மாதிரி வெளிப்படுத்தறாங்களே’ன்னு நினைச்சேன். ‘நாம ஒரு துறையில இருக்கோம், மத்தவங்க நம்மை எப்படிப் பார்க்கறாங்க’ன்னு யோசிச்சப்போ, என்னை தற்காத்துக் கொள்கிற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டேன்.

* இங்கே பெண் என்றாலே இரண்டாம் குடிமகள்தான். அதிலும் நடிகைன்னா மிகவும் தரம் குறைந்த நிலை. ரொம்ப அறிவார்ந்த மனிதர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் இருக்கும் சமூகத்திலும் அந்த மாதிரியான பிரச்னைகளை நான் எதிர் கொண்டேன். ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்துக்காக பாட்டு ஒண்ணு எழுதியிருந்தேன். பரவலா அது போய் சேர்ந்திருந்த நேரம் அது. அப்போ ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன்.

புத்தகத்தை ஒரு பிரபல எழுத்தாளர் வெளியிட்டார். நான் பெற்றுக் கொண்டேன். அவர் என்கிட்ட ‘தமிழ் படிக்கத் தெரியுமா’ன்னு கேட்டார். ‘தெரியும் சார்’னு சொன்னேன்!     ஸ்டீரியோ டைப்பான, பழக்கப்பட்டுப்போன சமூகம் நம்மளோடது. ஒருத்தர் இப்படித்தான் இருப்பாங்க... அவங்க துறை, செய்யற தொழில் இதுன்னா அவங்க பேச்சு, நடவடிக்கை இப்படித்தான் இருக்கும்கிறது எத்தனை பண்பட்ட, கல்வி பெற்ற மனுஷராக இருந்தாலும் இப்படித்தான் யோசிக்கறாங்கஅப்படிங்கறதுக்கு இது ஓர் உதாரணம்.

* ஒரு நடிகையைப் பத்திப் பேசும்போது மட்டும் தரக்குறைவான தொனியோடதான் எல்லாரும் பேசறாங்க... எழுதறாங்க. இது தவிர்க்கப்பட வேண்டும். ஆரம்பத்துல எனக்கு நடந்த ரெண்டு தற்செயலான விஷயங்களுக்காக வருத்தப்பட்டேன் இல்லையா? பிறகுதான் முடிவெடுத்தேன். கூச்சமோ, வருத்தமோ படப் போவதில்லை. மாறாக, ஒரு பெண்ணாகப் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்... அதிலும் நடிகையாக இருப்பதற்கு!

* நான் 1வதுலருந்து 5ம் கிளாஸ் வரை ஸ்கூலுக்குப் போகலை. நாங்க தெலுங்கு பேசறவங்க. தமிழ் பேசத் தெரியாது. தேவரைப் பார்த்து சான்ஸ் கேக்கறதுக்கு அப்பா என்னை கூட்டிட்டுப் போனாங்க. அவர்கிட்ட பேசறதுக்கு நாலஞ்சு வாக்கியங்களை சொல்லிக் கொடுத்தாங்க. ‘என் பேரு ரோகிணி...’ - இப்படி. அப்போ லைவ் சவுண்ட் இருந்தது... டப்பிங் கிடையாது. அது ‘முருகன் அடிமை’ன்னு ஒரு படம். அப்போ நான் தெலுங்குல ஒரு படத்துல கிருஷ்ணர் வேஷத்துல நடிச்சிருந்தேன். அதை பார்த்திருந்தாரு. அதே மாதிரி முருகனோட வேஷத்துல நடிக்கறதுக்கு என் முகம் சரியா இருக்கும்னு நினைச்சிருந்தார்.

3 மாசத்துல ஷூட்டிங். அதுல நான் தமிழ் பேசணுங்கறதுக்காக ஒரு மாஸ்டரை தமிழ் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு பண்ணினாங்க. அவரே எல்லா பாடங்களையும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சார். அவருக்கு தமிழ் மேல ரொம்ப ஆர்வம் இருந்தது. அவர் மூலமா எனக்கும் தமிழ் மேல ஈடுபாடும் காதலும் உண்டானது. படிக்கப் படிக்க எத்தனையோ விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லைங்கறதை வாசிப்பு எனக்கு உணர்த்த ஆரம்பிச்சுது.

அப்பா என்னை சுதந்திரமா வெளியே போக அனுமதிச்சாரு. அதனாலதான் வெளியூர்களுக்கு சாதாரணமா பேருந்துல போயிட்டு வர்ற பழக்கம் எனக்கு ஏற்பட்டுச்சு. வாழ்க்கையோட ஒன்றிப் போகிற ஒரு தன்மையை எங்கப்பா எனக்கு சொல்லிக் கொடுத்திருந்தாரு.

(அடுத்த இதழிலும் தொடர்கிறது ரோகிணியின் பேச்சு!)

சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லைங்கறதை வாசிப்பு எனக்கு உணர்த்த ஆரம்பிச்சுது.

நடிகை
இயக்குநர் ரோகிணி

தொகுப்பு: பாலு சத்யா
படங்கள்: பரணி