என் ஜன்னல்!ஆர்த்தி வேந்தன்
ஆசிரியர்/ஆராய்ச்சியாளர்

இணையம் ஓரினம்

எல்லா பால், பாலடையாளம், பாலீர்ப்பு கொண்டவர்களுக்கும் தங்கு தடையின்றி மனித உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டுமென்பது இதன் இலக்கு. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களைப் பற்றிய விழிப்புணர்வை கொண்டு வருவதும், அவர்கள் மேல் காட்டப்படும் வெறுப்பையும் வேற்றுமைப்படுத்துதலையும் களைவதும் இதன் குறிக்கோள்.

ஓரினச்சேர்க்கை பற்றிப் பேசுவதைக் கூட அநாகரிகம் என்று கருதும் நம் சமூகத்தில் நங்கை, நம்பி, ஈரர், திருனர் என்று நம்மில் அனைவரது தளமாகவும், அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினரும் பகிர்ந்துகொள்ளும் தளமாகவும் உள்ளது. லிநிஙிஜி சமூகத்தின் பொதுவான கருத்துகளை பதிவு செய்வது மட்டுமின்றி மருத்துவம், சட்டம், சமயம், பணியிடம், ஊடகங்கள் என்று எல்லா தரப்பின் உண்மைகளையும் முன் வைக்கிறது.

இத்தனை ஆண்டுகளாக சமூகத்துக்குப் பயந்து, தங்களின் உணர்வுகளை மறைத்து வாழ்ந்து வந்த நம் நண்பர்களும் தோழிகளும் தங்களின் அனுபவங்களையும் உணர்வு
களையும் இந்தத் தளத்தின் மூலமாகவே முதன்முதலில் பதிவு செய்தார்கள் என்பதும் தனிச்சிறப்பு. தமிழகத்தில் இயங்கும் மிக முக்கியமான ஒரு மக்கள் இயக்கமாக இருக்கிறது இத்தளம். 
‘எல்லா மனிதர்களும் எல்லா உரிமைகளும் பெறும் நாள் தொலைவில் இல்லை’ எனும் நம்பிக்கையின் அடையாளம் ஓரினம்... அதே நேரம் அதற்காக நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் இந்த வலைத்தளம் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை!

orinam.net/ta

சினிமா

நீண்ட நெடிய கலாசாரத்தின் தொன்மைகளை பேசிப் பேசி பெருமை கொள்ளும் ஒரு மிகப்பெரும் ஜனநாயகத்தில் இன்றளவும் மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு வரும் 4 ஆயிரம் ஆண்டு ஒடுக்கு
முறைகளின் பதிவே ‘ஜெய்பீம் காம்ரேட்’. இந்திய அரசின் அதிகார மையமும் இந்துத்துவமும் ஒன்று சேர்ந்து கூட்டாக மும்பை நகரத்தின் ராமாபாய் குடியிருப்புப் பகுதியில் தலித் மக்களுக்கு எதிராக நடத்திய வன்முறையின் ரத்தச் சிதறல்களில் நடந்தேறிய அரசுக் கொலைகளால் வெதும்பி மரணிக்கும் விலாஸ் கோக்ரே எனும் போராளிப் பாடகரின் மரணத்தில் ஆரம்பிக்கும் படம், 4 ஆயிரம் வருடத்தைய அடக்குமுறை முழுவதையும் 200 நிமிடங்களில் ஆவணப்படுத்துகிறது.

1997 தொடங்கி தொடர்ந்து 14 ஆண்டுகள் துயரின் நிழலில் பயணம் செய்யும் ஆனந்த் பட்வர்த்தனின் கேமரா தன் நெடும் பயணத்தை  2011ல் முடிக்கிறது. இந்தப் பயணம் நெடுக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகளும், அடக்குமுறைகளும், சுரண்டல்களும் நிரம்பி வழிகின்றன. அதே நேரம் வர்ணாசிரமத்தால் ஒடுக்கப்பட்ட, இன்றும் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான குரல் அவர்களின் பாடல்களின் வழியே மிக ஆழமாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தலித் மக்களின் ஓட்டுக்காக மட்டுமே அவர்களிடம் உறவு கொள்ளும் இந்திய அரசியலின் கோர முகத்தையும் கிழித்தெரிகிறது.

ராமாபாய் குடியிருப்பின் அருகில் இருக்கும் குப்பைக்கிடங்கில் பணியாற்றும் மனிதர்களும் அவர்கள் வாழ்வும் பதியப்பட்டிருக்கும் காட்சிகளை கடந்து வர வறட்டுத்தனமான தைரியம் இருக்க வேண்டும் என்றே சொல்வேன். இன்று வரை என்னை விட்டு நீங்காத காட்சிகள் அவை, அரசுகள் நம்மிடம் சொல்லும் வளர்ச்சி எனும் மாயையின் உண்மை முகம். இந்தியாவில் வெளிவந்திருக்கும் ஆவணப்படங்களில் மிகவும் முக்கியமான ஒன்று ‘ஜெய்பீம் காம்ரேட்’. ஒவ்வொரு மனசாட்சியையும் உலுக்கும் மிக ஆழமான பதிவு.

இடம் தொலைந்து போதலே பயணம்!

பயணங்கள் அலாதியானது. ஒரு மனிதனை மீண்டும் புதிய ஒருவராக பிறப்பிக்கச் செய்யக்கூடியது பயணம். ஏதோ ஓர் எதிர்பாரா பயணத்தில் சந்திக்கும் ஒருவர் நம் வாழ்வின் மிக முக்கியமானவராக மாறிவிடும் அனுபவத்தை நாம் எல்லோரும் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறோம்.

பெற்றோர் தவிர மற்ற அத்தனை உறவுகளும் வாழ்க்கைப் பயணத்தின் திடீர் சந்திப்புகளே. வாழ்வுடன் ஒன்றாகச் சங்கமித்து தொலைந்து போதலே பயணம் என்று முழுமையாக நம்புபவள் நான். மானுட வாழ்வே இலக்கற்ற பயணம்தானே? இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ பயணங்களை கடந்து வந்திருந்தாலும், பெண்களுக்கான அத்தனை கட்டுப்பாடுகளும் நிறைந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒருத்தி, முதல் முதலாக தனிமையில் பயணம் செய்த மாமல்லபுரமே எப்போதும் முதலில் நினைவுக்கு வரும்.

கலாசாரப் பிம்பங்களை குப்பைத்தொட்டியில் வீசி விட்டு ஏதோ சாதித்த மகிழ்ச்சியில் வங்கக்கடலின் காற்று முகத்தில் சரசரத்தவாறே சந்தித்த பெயர் தெரியா மனிதர்கள், எனக்காக ஓவியம் வரைந்து தந்த சிற்பக்கலைஞர் முருகன், யாரென்று தெரியாத என்னிடம் தன் குடும்பக் கதைகளை ஒரு மணி நேரம் பேசிய அந்த அக்கா, மௌனமாக கதை பேசிய பல்லவர்களின் சிற்பங்கள், தான் தொழிலாகச் செய்யும் தன் கலை மீதான மரியாதை காரணமாக ஒரு ரூபாய் கூட வாங்காமல் எனக்கு சிற்பக்கலையை கற்றுத்தர முன் வந்த அந்த முதியவர் என எல்லாமே இந்தப் பயணத்தில்தான். அந்த ஒற்றைப் பயணம் என்னுள் பல நம்பிக்கைகளை, புரிதலைக் கொடுத்தது. என்னுடைய இன்னொரு என்னை எனக்கு அறிமுகம் செய்தது.

நூல் பெண்களின் முதல் குரல்

‘ஒரு பெண் பெண்ணாக பிறப்பதில்லை... பெண்ணாக ஆக்கப்படுகிறாள்’ என்று 65 ஆண்டுகளுக்கு முன் எழுதிய அந்த வரிகளின் பொருள், இன்றளவிலும் அப்படியானதாகவே இருக்கிறது. 1949ல் வெளிவந்த சிமொன் தே போவியாவின் (Simone de Beauvoir) இரண்டாம் பாலினம் (The Second Sex) பெண் விடுதலைக்கான அடிப்படை சாசனமாக இன்றும் இருக்கிறது. அவர் வெளிச்சமாக்கிய பிரச்னைகளை எதிர்த்துதான் இன்றைக்கும் பெண்கள் போராடி கொண்டிருக்கின்றனர்.

பெண் விடுதலை, பெண் உடல், மனித இனத்தில் சரி பாதி பெண் எனும் நிஜத்தைத் தாண்டி, ஆண்கள் எப்படிப் பெண்களை சமுகத்தில் இரண்டாம் நிலையில் வலுக்கட்டாயமாக வைத்திருக்கிறார்கள்? அடிமைப் போர்வைக்குள் இன்னும் ஏன் பெண்கள் சிக்கிக்கொண்டு இருக்கின்றனர்? இந்தக் கேள்விகளோடு, முழு மனிதனாக வாழ்வதைக் காட்டிலும் பொம்மைகளாக வாழும் பெண்கள் நிலையும், கீழ் படிந்து போவதால் மட்டுமே கிடைக்கின்ற அன்பை, பாதுகாப்பை, அங்கீகாரத்தையும் வெகு தீவிரமாக பேசுகிறது.

பெண்களும் ஆண்களும் சமம், எல்லா  பால்களும் மனிதன் எனும் ஒரே பால்தான் என்று அழுத்தமாகப் பேசும் உண்மைகளுக்கு ஆதாரமாக சமூகவியல், தொல்லியல், உயிரியல், பொருளாதாரம், உளவியல், தத்துவம், நாட்டுப்புறவியல் என்று பல்வேறு வகை தகவல்களை முன்வைக்கும் சிமோன், புத்தகம் நெடுகிலும் வரலாறு எப்படிப் பெண்களை அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்பதையும் ஆண்கள் ஏன் பெண்களை தங்களுக்குக் கீழான பாலினமாகவே பார்க்க விரும்புகிறார்கள் என்பதையும் விரிவாக பேசுகிறார்.

பெண்மை, தாய்மை எனும் விஷயங்களை மட்டுமல்லாது, ஆண்கள் பெண்களிடம் உரிமை கொண்டாடும் தங்களின் கலாசார, ஒழுக்க மதிப்பீட்டு வக்கிரங்களை முழுமையாக செலுத்தும் பெண்களின் பாலியல் குறித்தும், பாலியல் உறுப்பு குறித்தும், அதன் மீதான பெண்களின் முழு உரிமைகள் பற்றியும் மிகத் தீவிரமாகச் சொல்கிறார். பின்னாளில் வந்த பல்வேறு பெண்கள் விடுதலைக்கான, பால்விடுதலைக்கான பிரதிகளின் அடிப்படையே சிமொன் தே போவியாவின் ‘இரண்டாம் பாலினம்’.