உலகை உலுக்கிய ஒற்றை மரணம்!



‘ஒற்றை நபரின் மரணம் என்பது ஒரு துயரம்; ஒரு மில்லியன் மக்களின் மரணம் என்பது வெறும் புள்ளிவிவரம்’ - ரஷ்யாவை இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த ஜோசப் ஸ்டாலினின் இந்த வாசகம் அழியாப் புகழ்பெற்றது. சிரியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் மூன்று லட்சம் பேர் இறந்தது வெறும் புள்ளிவிவரமாக மட்டுமே பதிவாகி இருந்தது.

அந்த நரகத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் கடலில் மூழ்கி இறந்த ஐலன் குர்தி என்ற மூன்று வயது சிறுவனின் ஒற்றை மரணம், உலகின் மனசாட்சியை உலுக்கியெடுத்திருக்கிறது. கம்பி வேலிகள் கட்டி அகதிகளைத் தடுத்த பல நாடுகள், தங்கள் வேலிகளை உடைத்து பாலங்கள் கட்டி அவர்களை இப்போது வரவேற்கின்றன.

இன்றைய தேதியில் உலகெங்கும் சுமார் ஆறு கோடி மக்கள் அகதிகளாக இருக்கிறார்கள். ‘அகதி’ என்பது துயரம் தோய்ந்த ஒரு வார்த்தை. சொந்த நாட்டில் உயிர் பிழைத்திருக்க முடியாத ஒரு சூழலில், வேரோடு பிடுங்கப்படும் ஒரு செடி தனக்கான மண் கிடைக்காமல் அல்லாடுவது போல விதியின் திசையில் விரைந்தோடும் ஒரு ஜீவன்.

தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த மண்ணை விட்டு, வளமும் வசதியும் தந்த எல்லா சொத்துக்களையும் துறந்து, உறவுகளிடமிருந்து விடுபட்டு, அடுத்த நாள் விடியலில் உண்பதற்கு உணவு கிடைக்குமா? அதை உண்ணும்வரை பிழைத்திருப்போமா? வெயிலும் மழையும் தாக்காத ஒரு கூடாரமாவது சாத்தியமாகுமா? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் ஓர் இரவில் பயணிக்கும் பலர் அடுத்த நாள் விடியலைக் காண்பதில்லை. ஐலன் குர்திக்கும் அதுவே நேர்ந்தது.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் அரச படைகளுக்கும் இராக்கிலும் சிரியாவிலும் தீவிர போர் நடந்து வருகிறது. இதனிடையே வேறு சில குழுக்களும் ஆயுதங்களோடு சுற்றித் திரிகின்றன. ஈவு இரக்கமற்ற, யார் எதிரி - யார் நண்பன் எனத் தெரியாத போர். சவூதி அரேபியா, இரான் போன்ற சில அரபு தேசங்கள் ஒவ்வொரு குழுவுக்கும் ஆதரவாக நின்று ஆயுதங்களும் ஆட்களும் சப்ளை செய்து இந்தப் போர் முடிந்து விடாமல் பார்த்துக்கொள்கின்றன. எந்த நாட்டில் எத்தனை பேர் இறந்தார்கள், உயிர் பிழைத்திருப்பவர்கள் எப்படி ஜீவிக்கிறார்கள் என்பதுகூட யாருக்கும் தெரியாத சூழல்.

சிரியாவில் மட்டும் மூன்று லட்சம் பேர் இறந்திருப்பார்கள் என்றும், சுமார் 40 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறிவிட்டார்கள் எனவும் ஐ.நா. புள்ளிவிவரம் சொல்கிறது. ஒரு காலத்தில் சுமார் ஐந்தே கால் லட்சம் பாலஸ்தீன அகதிகளை வரவேற்று, அவர்களுக்கு உணவும் உறைவிடமும் கல்வியும் கொடுத்த வளமையான தேசம் சிரியா. வாழ்ந்துகெட்ட குடும்பம் தலைகுனிந்து யாசிப்பது போன்ற சூழல் இப்போது!

சிரியாவிலும் இராக்கிலும் தவிப்பவர்கள் எப்படியாவது எல்லை தாண்டி துருக்கி நாட்டுக்குள் நுழையப் பார்க்கிறார்கள். அங்கு வந்துவிட்டால் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லை. அகதிகளால் நிரம்பி வழிகிறது அந்த தேசம். இலங்கையிலிருந்து வந்த அகதிகளுக்கு தமிழகத்தில் தீப்பெட்டி சைஸில் வீடு கட்டிக் கொடுத்து அவர்களைக் கைதிகள் போல வைத்திருக்கிறோமே, அதேபோல அங்கே இரண்டாம்தரக் குடிமக்களாக இருக்கலாம். அதை ஏற்காமல்தான் ஈழத் தமிழர்கள் பலரும் உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியா செல்லத் துணிகிறார்கள். அப்படித்தான் இவர்களும் ஐரோப்பாவுக்குப் போகும் ரிஸ்க்கை எடுக்கிறார்கள்.

ஐலன் குர்தியின் குடும்பமும் இப்படித்தான் வந்தது. மூன்றே வயதில் ஐலன் பல துயரங்களைப் பார்த்துவிட்டான். ஊரில் தன் உறவினர்கள் பலர் சுடப்பட்டு சாவதைப் பார்த்தான்; கழுத்து அறுக்கப்பட்டு பலரைக் கொல்வதைப் பார்த்தான். மரணத்தின் நிழல் தங்களைத் துரத்துவது அறிந்ததும் அந்தக் குடும்பம் துருக்கிக்கு தப்பி வந்தது. துருக்கியில் வெறுமனே உயிர் வாழலாம். குழந்தைகளைப் படிக்க வைக்க, ஏதாவது வேலைக்குச் சென்று குடும்பத்தை முன்னேற்ற, பெண் குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்த்து திருமணம் செய்து வைக்க, ஒரு கர்ப்பிணிக்கு முறையாகப் பிரசவம் பார்க்க... எதற்குமே வாய்ப்பு இல்லை. வெந்ததையும் வேகாததையும் தின்று, விதி வந்தால் மடிந்து போகலாம்... அவ்வளவுதான்!

இப்படியான வாழ்க்கையிலிருந்து விடுபட நினைக்கும் பலரும் ஐரோப்பாவுக்கு செல்லத் துடிக்கிறார்கள். ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஏதோ ஒரு நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அகதி ஆகிவிட்டால், வாழ்க்கையே மாறிவிடும். மத்திய தரைக்கடலைத் தாண்டி அந்தப் பக்கம் போய்விட்டால் போதும்! இதற்காக துருக்கியில் நிறைய ஆள் கடத்தல் ஏஜென்டுகள் இருக்கிறார்கள்.

சரக்குகளைக் கொண்டு செல்லும் மூடிய லாரிகளில் மூச்சடைக்க அகதிகளைக் கடற்கரைக்குக் கூட்டிச் சென்று, பத்து பேர் மட்டுமே போக முடிகிற மிதவைப் படகுகளில் 50 பேரை ஏற்றி அனுப்புவார்கள். அலைகளின் சீற்றம் கடுமையாக இருந்து கடலில் மூழ்கினால் உயிர் பிழைப்பது கடினம். இந்த ஆண்டில் மட்டும் இப்படி 2000 பேர் இறந்திருக்கிறார்கள் - ஐலனையும் சேர்த்து!

அவர்கள் சென்ற படகு கவிழ்ந்ததுமே ஐலனின் அம்மா கடலில் மூழ்கிவிட்டார். ஐலனையும் அவனது ஐந்து வயது அண்ணன் காலிப்பையும் இரண்டு கைகளில் உயரே தூக்கிப் பிடித்தபடி தத்தளித்த தந்தை அப்துல்லா, ஒரு கட்டத்தில் தனது மூத்த மகன் இறந்ததை உணர்ந்தார். ‘‘அப்பா, நீங்க சாகாதீங்கப்பா!’’ என்பது ஐலன் பேசிய கடைசி வார்த்தைகள். அதன்பின் அலையின் சீற்றத்தில் தந்தையிடமிருந்து அவன் பிரிந்துவிட்டான். சிவப்பு சட்டையும் நீல டிரௌசரும் அணிந்த அழகிய பொம்மை போல கரை ஒதுங்கியது அவனது உயிரற்ற உடல்.

90களில் ஆப்ரிக்க நாடுகளில் தலைவிரித்தாடிய பஞ்சத்தை ஒற்றை புகைப்படத்தின் மூலம் உணர்த்தினார் கெவின் கார்ட்டர். பட்டினிச் சாவின் விளிம்பில் சுருண்டு கிடப்பாள் ஒரு சூடான் சிறுமி. பின்னணியில் ஒரு பிணந்தின்னிக் கழுகு அவளின் மரணத்துக்காகக் காத்திருக்கும். ஐலனின் மரணத்தை உணர்த்தும் புகைப்படம், அப்படி ஒரு படமாக ஆகிப் போனது. ஜெர்மனி உள்ளிட்ட அத்தனை ஐரோப்பிய நாடுகளும் இப்போது அகதிகளை ஏற்பதாக அறிவித்திருக்கின்றன. இத்தாலியிலும் கிரீஸிலும் கம்பி வேலிகளுக்குப் பின்னால் குற்றுயிராகத் தவித்த அகதிகள் பலரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

எனினும் சில விஷயங்கள் முள்ளாக உறுத்துகின்றன. பாலஸ்தீனப் பிரச்னை தவிர அமைதியாகவே இருந்த வளைகுடாவை போர் பூமியாக மாற்றியது அமெரிக்காதான். 2003ம் ஆண்டில் இராக் மீது போர் தொடுத்து சதாமை தூக்கில் போட்டு, அதன்பின் அரபு நாடுகளில் நிகழ்ந்த கிளர்ச்சிகளை ஆதரித்து, இத்தனை பிரச்னைகளுக்கும், இத்தனை மரணங்களுக்கும், இத்தனை அவலங்களுக்கும் காரணமான அந்த நாடு இதுவரை அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை.

கத்தார், அரபு எமிரேட்ஸ், ஓமன் போன்ற வளம் கொழிக்கும் அரபு நாடுகளும் தங்கள் எல்லைகளை இறுக்கமாக மூடிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன.
பக்கத்து வீட்டில் சகோதரர்கள் எழுப்பும் மரண ஓலத்தில்கூட இவர்களால் எப்படி இயல்பாக வாழ முடிகிறது!

இத்தனை பிரச்னைகளுக்கும்,இத்தனை மரணங்களுக்கும்,இத்தனை அவலங்களுக்கும் காரணமான அமெரிக்காஇதுவரை அகதிகளுக்கு
உதவிக்கரம் நீட்டவில்லை!

- அகஸ்டஸ்