டிஜிட்டல் பென்சில்... குரலால் சேனல் மாற்றும் டி.வி !



ஆப்பிளின் ஆல் நியூ ரிலீஸ்

ஒரு சந்தானத்துக்கு இருக்கும் சுதந்திரம் கூட ரஜினிக்கு இருப்பதில்லை. ‘என்ன இருந்தாலும் அந்த தாடி வச்சது தப்பு’ என நண்டு சிண்டுகள் எல்லாம் கருத்து சொல்லும். அப்படித்தான் ஆப்பிள் ஐ போனின் நிலைமையும். மலை போலக் குவிந்துவிடும் அத்தனை எதிர்பார்ப்புகளையும் தாண்டி சக்சஸ் தருவதுதான் சவாலே. செப்டம்பர் 9ம் தேதி ஆப்பிள் நடத்திய Product Launch திருவிழா, இந்த எதிர்பார்ப்புக்கு தீனி போட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

*ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ்

அளவிலும் வடிவத்திலும் முந்தைய மாடல்களிலிருந்து எந்த மாற்றமும் இல்லை. ஆனால் முக்கியமான அப்கிரேடு இதன் கேமரா. 4எஸ் பதிப்பில் இருந்து 8 மெகாபிக்சலாக மட்டுமே இருந்து வந்த ஐபோன், இப்போது 12 மெகா பிக்சலோடு வந்திருக்கிறது. விளைவு, ஹெச்.டி தரத்தை விட நான்கு மடங்கு உயர்ந்த 4K வீடியோக்களை இதன் மூலம் எடுக்க முடியும்.

தியேட்டர்களில் ஸ்கிரீன் செய்யக் கூடிய தரம் அது. ஜீன்ஸ் பாக்கெட்டில் போட்டால் ஆப்பிள் 6 வளைகிறது என்றார்களே, அதைத் தடுக்கும் விதமாக புதுவித அலுமினியத்தால் இந்த போன் வார்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இது ஆப்பிள் நிறுவனமே உருவாக்கிய புத்தம் புது அலாய் உலோகமாம். மார்க்கெட்டில் இருக்கும் சில பல போன்களை விட இது பல மடங்கு உறுதியாக இருக்கும் என்கிறார்கள்.

*ஐபேட் ப்ரோ

10 இன்ச் அளவிலேயே இருந்து வந்த ஐ பேட் இம்முறை வளர்ந்து 12.9 இன்ச்சை எட்டியிருக்கிறது. நான்கு ஸ்பீக்கர்கள் கொண்ட இந்த டேப்லட்டுக்கு 10 மணி நேரம் பேட்டரி லைஃப் உண்டு. ‘‘புத்தம் புதிய ஏ9 வகை ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டிருப்பதால் முந்தைய ஐ பேட் பதிப்பை விட 1.8 மடங்கு அதிக செயல் திறன் வாய்ந்ததாக இது இருக்கும்!’’ என்கிறார் ஆப்பிள் தலைவர் டிம் குக். இதே ப்ராசஸர்தான் ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ்ஸிலும் உள்ளதால் அவற்றுக்கும் இந்த செயல்திறன் பொருந்தும்.

*ஆப்பிள் டி.வி

தொடு உணர்வால் டி.வியை கட்டுப்படுத்தக் கூடிய ஸ்மார்ட் ரிமோட், கேமிங்குக்காகவே வடிவமைக்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்... இவைதான் புத்தம் புதிய ஆப்பிள் டி.வியின் ஸ்பெஷல். இது தவிர, குரல் மூலமே டி.வியில் சேனல்களை மாற்றவும், வேண்டிய நிகழ்ச்சியைக் கேட்டுப் பெறவும் முடியும்.
 
*டெக் அதிசயங்கள்

இந்த வெளியீட்டில் டெக் பிரியர்களுக்கு தீனி போட்ட அம்சங்கள் இரண்டு. ஒன்று, ஐ போன்கள் மற்றும் ஐ பேடில் தரப்பட்டிருக்கும் ‘3டி டச்’ வசதி. இனி ஆப்பிள் போன்களால் நமது விரல்களின் தொடு உணர்வை மட்டுமல்ல, அதன் அழுத்தத்தையும் உணர முடியும். ஒரு ஐகானை கொஞ்சம் பலமாக அழுத்தினால் அதிலிருந்து புதியதோர் மெனு வெளியாகி ஷார்ட் கட் ஆப்ஷன்களை நமக்குக் காட்டும்.

உதாரணத்துக்கு கேமரா பட்டனை லேசாகத் தொட்டால் நார்மலாகத் திறக்கும். அதுவே அழுத்தம் கொடுத்தால், செல்ஃபி எடுக்க வேண்டுமா, 4K வீடியோ எடுக்கணுமா என ஓர் மெனு கேட்டு நம் வேலையை சுலபமாக்கும். இந்த புதிய டச் தொழில்நுட்பம் ஸ்மார்ட் போனோடு நாம் தொடர்பு கொள்ளும் விதத்தையே மாற்றும் என்கிறார்கள். இந்த வசதிக்கு ஏற்றபடி தங்கள் ஆப்களில் மாற்றங்கள் செய்ய வாட்ஸப், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களை ஆப்பிள் கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த அதிசயம் ஆப்பிள் பென்சில். டிஜிட்டல் பென்சிலான இது கிட்டத்தட்ட ஓவியர்களுக்கானது. நாம் கொடுக்கும் அழுத்தத்தை உணர்ந்து அதற்கேற்றபடி கோடுகளை மெல்லியதாகவும் தடிமனாகவும் அமைக்கக் கூடிய ஸ்கிரீன் வந்துவிட்டதால், அதற்கேற்ற பென்சிலை உருவாக்கியிருக்கிறார்கள். ஐ போன் மூலமாகவே சார்ஜ் ஏற்றிக்கொள்ளக் கூடிய இந்தக் கருவியை பென்சிலாகவும் பெயின்ட் பிரஷ்ஷாகவும், ரப்பராகவும், ஸ்ப்ரேயராகவும் கூட பயன்படுத்த முடியும். வேண்டிய கலர்களைத் தொட்டுத் தொட்டு வரையலாம்.

- நவநீதன்