பாராட்டு



பல வருடங்கள் கழித்து ஜானகியைப் பார்க்க அவள் மாமா, மாமி வந்திருந்தார்கள். அவர்கள் முன்னால் தன் மகள் நித்யா தலை காட்டாமல் இருக்க வேண்டுமே என்றுதான் கவலை ஜானகிக்கு. வீட்டில் ஒரு வேலை செய்யவோ பெரியவர்களை மதிக்கவோ நித்யாவுக்குத் தெரியாது. அத்தனை செல்லம்.

வந்தவர்களுக்கு ஜானகி டிபன், காபி தந்து கொண்டிருந்தபோதே நித்யா வந்தாள். அதிசயமாய் அவள் பெரியவர்களை வணங்கி, அவர்களின் நலம் விசாரித்ததில் ஜானகிக்கு பெரும் ஆச்சரியம். அது மட்டுமா? சாப்பிட்ட தட்டை எடுத்து, இடத்தை சுத்தம் செய்து... அன்று எல்லா வேலைகளும் செய்தாள் நித்யா.

‘‘என்னடி திடீர்னு? அவங்க உன்னைப் பாராட்டுவாங்கன்னு இப்படி வேலை செய்யறியா?’’ - மெல்லிய குரலில் மகளைக் கேட்டாள் ஜானகி. நித்யா அப்போது பதில் சொல்லவில்லை. மாமி புறப்படும் முன், ‘‘பெண்ணை ரொம்ப நல்லா வளர்த்திருக்கே ஜானகி. இந்தக் காலத்து சிறுசுகளுக்கு செல்லம் கொடுத்து சோம்பேறியாக்கிடுற அம்மாக்களுக்கு மத்தியில உன்னை நினச்சா எனக்குப் பெருமையா இருக்கு!’’  எனப் பாராட்டிவிட்டுச் சென்றாள். அவர்கள் போனதும், நித்யா சொன்னாள்...‘‘இப்போ  புரியுதா? நான் என்னைப் பாராட்டுவாங்கன்னு  வேலை செய்யலை. உன்னைப் பாராட்டுவாங்கன்னுதான்!’’  

வி.சிவாஜி