புலிப் பாய்ச்சல்
ரொம்ப நாளாய் எங்கள் மனதிற்குள் இடம் பிடிக்க முடியாமல் திணறிய நமீதா 18 கிலோ இளைத்து ‘சிக்’கென மாறி ‘நச்’சென்று ஒட்டிக் கொண்டார் இதயத்தில்! - ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
ஓவியர் செல்லம் குறித்த கட்டுரை நெகிழ்ச்சி. அவர் வரைந்த ‘பொம்மி’ சித்திரக் கதையினை பல தடவை படித்து ரசித்திருக்கிறேன். அஞ்சலிக் கட்டுரை அவரது பெருமைகளை நினைவில் நிறுத்தியது. - சிவமைந்தன், சென்னை-78.
பார்வையிழந்தவர்களின் நம்பிக்கை, வெற்றிகளை நோக்கிய அழைப்பை மட்டுமே மையப்படுத்தியிருந்தாலும், ‘அல்காரிதம்ஸ்’ திரைப்படம் பார்வையற்றவர்களுக்கு மட்டுமான படமல்ல. அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் ஊக்கப்படுத்தும் படமாகும். - எஸ்.ஜானகி, உடுமலைப்பேட்டை.
லட்சுமிப்ரியாவின் கமல் கெட்டப் ஆல்பம் தத்ரூபமாக இருந்தது. அதிலும் அந்த ‘விருமாண்டி கெட்டப் சூப்பர். - எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.
ஒளிப்பதிவாளர் நட்ராஜ் ‘புலி’ பட சம்பவங்களைச் சொல்லும்போதே விறுவிறுப்பாக இருந்தது. இளைய தளபதியின் தன்னடக்கத்தைப் பற்றிப் படித்து வியந்தோம். கண்டிப்பாக ‘புலி’ படம் அன்பு மக்களின் மனங்களில் ‘பாயும்’. - டி.வி.ரேவதி, விழுப்புரம்.
1980ல் இண்டஸ்ட்ரியைக் கலக்கிய நட்சத்திரப் பட்டாளம் இந்த வருடம் சிவப்பு ஆடைகளை அணிந்து ஒன்றாக போஸ் கொடுத்திருந்த படங்களைப் பார்க்கும்போது பரவசம் அடைந்தோம். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சூப்பர் ஸ்டார் இந்த ‘சிவப்பு ஆடை’ விழாவில் கலந்து கொள்ளமுடியவில்லை என்பது எங்களுக்கு சிறிய ஏமாற்றமே! - ரஜினிப்ரியன், திருச்சி.
விஞ்ஞான வளர்ச்சியில் தொலைக்காட்சி சேனல் என்று இல்லை, சகலவிதமான அத்துமீறல்களையும் சகித்தே வாழ வேண்டியுள்ளது என்கிற நாஞ்சில் நாடனின் வேதனை உண்மை. தகவல்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி சாதகத்தைப் போலவே பாதகத்திலும் வேகம் காட்டுவது வேதனையே! - கே.எஸ்.குமார், விழுப்புரம்.
போக்குவரத்து நேரத்தைக் குறைக்கத்தான் மெட்ரோ ரயில் திட்டம் வந்தது. ஆனால் அந்தத் திட்டம் நிறைவேறவே பல ஆண்டுகள் ஆகும் என்பதை நினைக்கும்போது வேதனை ஏற்பட்டது. ‘மேக் இன் இந்தியா’ என கூச்சல் போடுவது மட்டும் போதாது. செயலிலும் வேகம் வேண்டும். - சுரேஷ், திருச்சிற்றம்பலம்.
|