அஜித் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடம்!



சிலிர்க்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் சந்தித்தபோது, சார் போனில் பிஸி! ‘‘ ‘தனி ஒருவன்’ படம் பார்த்தேன். ரொம்ப நல்ல அருமையான ஸ்கிரிப்ட்! நான் படம் பார்க்கப் போன அன்னிக்கு தியேட்டர் ஹவுஸ்ஃபுல். தியேட்டர்ல இவ்வளவு கூட்டத்தைப் பார்க்குறது சந்தோஷமா இருந்துச்சு’’

என இயக்குநர் மோகன் ராஜாவை பாராட்டு மழையில் நனைய வைத்துக்கொண்டிருந்தார். செம கலராக, முகத்தில் தேஜஸ் கூடி, ஹேர் ஸ்டைலை மாற்றி, இன்னும் இளமையாக இருக்கிறார் சிவா.

‘‘என் படம் ரிலீஸ் ஆனால் யாருமே போன் பண்ணி வாழ்த்தினதில்ல சார். நான் எதிர்பார்த்திருக்கேன். அதனாலதான் நான் பார்க்குற படங்கள் பிடிச்சிருந்தா, அன்னிக்கே பாராட்டிடுவேன். பாசத்திலும் பாராட்டுறதிலும் மிச்சம் வைக்கறதில்லை’’ என நெகிழ்கிறார். ‘‘எப்படி இருக்கும் ‘ரஜினி முருகன்’?’’‘‘எல்லாரும் சிரிக்கிற, ரசிக்கிற மாதிரியான ஒரு படம். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ டீமோடு மறுபடியும் சேர்ந்திருக்கேன். ஃபேமிலியா ஒரு ஃபெஸ்டிவல் டைமை கொண்டாடுற படமா இது இருக்கும். ‘ரஜினிமுருகன்’னு டைட்டிலைக் கேட்டதும் ஹேப்பியாகிட்டேன்.

அதே டைம்ல பயமும் ஜாஸ்தியாகிடுச்சு. ‘ரஜினிமுருகன், ரஜினிகணேஷ், ரஜினிகுமார்னு எல்லா ஊர்கள்லேயும் இருக்கற ஒரு பெயர்தான். பயப்பட வேணாம்’னு டைரக்டர் பொன்ராம் தைரியம் கொடுத்தார். டைட்டில் பத்தி ரஜினி சார்கிட்ட லிங்குசாமி சார் பேசினார். ‘சூப்பர்... அந்த டீம் நல்லாத்தான் பண்ணுவாங்க. நோ ப்ராப்ளம் லிங்குசாமி’ன்னு கதை எதுவும் கேட்காமலேயே ரஜினி சார் ஓகே சொன்னாங்க.

‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்துல வேலைக்கே போகக்கூடாதுன்னு நினைக்கற பையன்; ‘ரஜினி முருகன்’ல வேலைக்குப் போகணும்னு நினைக்கற பையன் நான். ராஜ்
கிரண் சார், சமுத்திரக்கனி சார்னு ஒவ்வொருத்தருக்குமே இதுல ஒரு கதை இருக்கு. பொன்ராம்கிட்ட நேட்டிவிட்டி டீட்டெயில் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும். அவரோட நல்ல புரிதல் இருக்கு. ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ பாட்டு ஏற்கனவே ஹிட். இமான் அண்ணன், பின்னணி இசையிலும் பட்டையைக் கிளப்பி
யிருக்கார். அதே மாதிரி சூரி அண்ணனோட கெமிஸ்ட்ரி நல்லாவே இதிலும் வொர்க் அவுட் ஆகியிருக்கு.’’

‘‘ஒரு பக்கம் போட்டோஷூட் போஸ்டர், இன்னொரு பக்கம் ரத்த தானம்... பிறந்த நாள் அன்னிக்கு சூரி கலக்கினார், கவனிச்சீங்களா?’’‘‘ஆமாம். மிரட்டியிருந்தாரே! எனக்கு நல்ல நண்பர், அண்ணன், ரொம்பப் பிடிச்சவர் அவர். பர்த் டே அன்னிக்கு விஷ் பண்றப்போ, ‘என்னண்ணே... பயங்கரமா இருக்கே! வேற ஏதாவது பிளானா?’னு கேட்டேன். ‘தம்ம்ம்ம்பித் தம்பி... அதெல்லாம் இல்லை தம்பி’ன்னு பாசத்துல உருகிட்டார். ‘மனம் கொத்திப்பறவை’ ஷூட்டிங்கில் முதல் நாள் அன்னிக்கு சூரியண்ணனைப் பார்த்ததுமே நாங்க லவ்வுல விழுந்துட்டோம். அந்த காதல் இன்னிக்கு வரை தொடருது. குட்டி குட்டி விஷயங்கள் அவர்கிட்ட நல்லா இருக்கும்.

ஷூட்டிங் ஸ்பாட்ல சூரி அண்ணன்தான் கீர்த்தி சுரேஷ்கூட பேசிக்கிட்டே இருப்பார்! அந்தப் பொண்ணு கேரளான்னு தெரியும். ஆனா அவங்க பேச்சுல அது தெரியாது. நாம மதுரை ஸ்லாங்ல பேசினாலும், அவங்க பதிலுக்கு பதில் பேசுவாங்க. ‘அந்தப் பொண்ணுக்கு தமிழ் நல்லாத் தெரியுதுப்பா.. பேசாம இருப்போம் சிவா’ன்னு சூரி சொல்ல, ‘அதான் நல்லா தமிழ் தெரியுதே... நல்லாவே கலாய்ப்போம்’னு சொல்லி, கலாய்ச்சோம். கீர்த்தியோட அம்மா மேனகா என்னோட பெரிய ஃபேன். ஸோ, நான் நல்லா கேஷுவலா நடிக்கறேன்னு என்னைப் பத்தி கீர்த்திகிட்ட சொல்லிட்டே இருப்பாங்க.

 டான்ஸ், காமெடி, ரியாக்‌ஷன்னு கீர்த்தி நல்லா பண்ணியிருக்காங்க!’’‘‘ஹன்சிகா, திவ்யா, கீர்த்தி சுரேஷ்னு உங்களுக்கு மட்டும் ஹீரோயின்கள் அழகழகா அமையுதே...’’‘‘சார்ர்ர்ர்ர்... அது பெரிய ப்ராசஸ் சார்! என் வொய்ஃப் கூட சொல்வாங்க. ‘உங்களுக்கு கல்யாணத்துக்கு பொண்ணு கூட ஈஸியா சொந்தத்திலேயே கிடைச்சிடுச்சு.

 நடிக்கறதுக்கு ஒரு பொண்ணு தேடுறது பெரிய விஷயமாயிருக்கே’ன்னு சொன்னாங்க! என்னோட ஒவ்வொரு படத்திலேயும் 3 மாசம், 4 மாசம்னு ஹீரோயினைத் தேடித்தேடி முடிவு பண்ணுவாங்க. இன்னொன்று -என் படங்களோட கேமராமேன்கள் அவங்களை ரொம்ப அழகா காட்டுறாங்க போல!’’‘‘சமீபத்தில் அஜித் சாரை மீட் பண்ணியிருந்தீங்க. அந்த சந்திப்பை ரகசியமாகவே வச்சிருக்கீங்களே?’’

‘‘என்னுடைய வாழ்க்கையில முக்கியமான மொமன்ட்னு அஜித் சாரை சந்திச்சுப் பேசினதைச் சொல்லலாம். எனக்கு எங்க அப்பாவோ, அண்ணனோ தட்டிக்கொடுத்து சொல்ல வேண்டிய விஷயங்களை அஜித் சார் சொன்னாங்கன்னு நம்புறேன். அதைப்பத்தி வெளியே அதிகம் பேசிக்காததுக்கு காரணம், அதை விளம்பரமா யாரும் நினைச்சுடக்கூடாதேங்கற கவலைதான். அந்த சந்திப்புல சினிமா பத்தி குறைவாதான் பேசினோம். என்னைப் பத்தி கேள்விப்பட்ட விஷயங்களை சொல்லிப் பாராட்டினார். ‘நீங்க இன்னும் பெருசா வரணும்’னு வாழ்த்தினார்.

நம்ம லைஃப்ல நாம எப்படி  இருக்கணும்னு அஜித் சார் சொன்ன விஷயங்கள் பிரமிப்பா இருந்துச்சு. ஒரு அட்வைஸா சொல்லாமல், அவரோட வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக்கிட்டார். நிச்சயம் அது எனக்கொரு பாடம்.  அவர் சொன்ன விஷயங்களை கடைப்பிடிச்சா நான் உச்ச நடிகரா ஆகுறேனோ இல்லையோ, நல்ல மனுஷனா ஆவேன். அவரை சந்திச்சபிறகு நான் வேறொரு ஆங்கிள்ல என்னையே பார்க்க ஆரம்பிச்சிட்டேன். அவர் எனக்குக் கொடுத்த கான்ஃபிடன்ட் எனக்கு ரொம்ப பெரிய விஷயம்.

இதைப் பத்தி இன்னும் விரிவா பேசக்கூடிய சந்தர்ப்பம் வரும். அவர் எனக்கு சொன்ன விஷயங்கள்ல ரெண்டை மட்டும் இன்னும் ஃபாலோ பண்ணாம இருக்கேன். அதையும் பின்பற்றின பிறகு, டீடெயிலா பேசுறேன்!’’ ‘‘பி.சி.ராம், ரசூல் பூக்குட்டி, ஹாலிவுட் மேக்கப்மேன்னு உங்க அடுத்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
இருக்கே?’’‘‘தேங்க்ஸ். பிரமாண்டமான டீம் சேர்ந்து பண்ற ஒரு அழகான படம்.

ஷங்கர் சார் படம் மாதிரி ஆக்‌ஷன், சோஷியல் மெசேஜ் எல்லாம் இல்லை. அது ஒரு லவ் காமெடி ஃபிலிம். ‘ஒரு பொண்ணு வேணும்ங்கறதுக்காக ஒரு பையன் என்னவெல்லாம் பண்ணுறான்’ங்கறதுதான் கதை. சுந்தர்.சி, அட்லிகிட்ட வொர்க் பண்ணின பாக்கியராஜ் இயக்குறார். கதை சொல்லும்போதே அதுக்குள்ள லுக் சேஞ்ச் இருந்துச்சு. நான் எப்படி அப்படி பண்றதுன்னு யோசிச்சேன். காமெடியாகத்தானே சொல்றோம்னு ரெடியாகிட்டேன். நான், பாக்கியராஜ், அனிருத்னு ஆரம்பத்திலேயே முடிவு பண்ணிட்டோம்.

படத்தை என் நண்பர் ராஜாவை தயாரிக்கச் சொன்னேன். அவர் வந்ததும் பிரமாண்ட டீமாக மாத்திட்டார். பி.சி.ஸ்ரீராம் சாரை சந்திக்கறதுக்கு அறிவுமதி சாரும், ஒளிப்பதிவாளர் பாலமுருகனும் உதவி பண்ணுனாங்க. பி.சி.ஸ்ரீராம் கதையைக் கேட்டதும் உடனே பண்ண ஒத்துக்கிட்டார்.

அவர் என்ட்ரி ஆனதும் இன்னும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுடுச்சு.  லுக் சேஞ்சுக்காகத்தான் ‘ஐ’ல வொர்க் பண்ணின வீட்டா ஒர்க்‌ஷாப்ப கமிட் பண்ணியிருக்கோம். கதையே சொல்ல வேணாம், சிச்சுவேஷன் மட்டும் சொன்னா போதும்னு பாடல்கள் போட்டுக் கொடுத்திட்டார் அனிருத். படத்துக்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் வொர்க் பெரிசா தேவைப்படுது. நான் இதுவரை பண்ணாத விஷயங்கள் இதில இருக்கும்.’’

‘‘கவுண்டமணி சாரை கமிட் பண்ணத்தான் அவரை சந்திச்சீங்களா?’’‘‘அதெல்லாம் இல்லீங்க. நான் அவரோட ரசிகன். ரொம்ப நாள் ஆசை. இப்போதான் நிறைவேறியிருக்கு. தவிரவும் அவருக்கு தீனி போடுற மாதிரி கதை அமையணும். இந்தப் படத்துல அவர் இல்லை.’’‘‘வீட்ல சுட்டிப் பொண்ணு எப்படி இருக்காங்க?’’‘‘ஆராதனாவுக்கு இப்போ ரெண்டு வயசு ஆகுது. ‘டார்லிங் டம்பக்கு’தான் அவங்களோட ஃபேவரிட். ‘பாகுபலி’ அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. தியேட்டர்லேயே ரெண்டு வாட்டி பார்த்தாங்க. ‘தமன்னா... தமன்னா...’னு கத்துவாங்க. விஜய், அஜித், ரஜினி சார்னு எல்லாரையும் தெரிஞ்சி வச்சிருக்காங்க.  ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ங்கறதை ஒவ்வொரு நாளும் அவங்க உணர்த்துறாங்க!’’

- மை.பாரதிராஜா