குங்குமம் ஜங்ஷன்




ஆத்தாடி காத்தாடி

புதுவை சுற்றுலாத் துறையும் ‘காற்றாடி வாழ்வு’ நிறுவனமும் இணைந்து சர்வதேசக் காற்றாடித் திருவிழாவை கடந்த வாரம் புதுவையில் நடத்தினார்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து காற்றாடித் தொழிலில் வல்லமை மிக்க குழுக்கள் கலந்து கொண்டன. இவர்கள் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் காற்றாடிகளை வானில் பறக்கவிட்டு அசத்தினர். பிரமாண்ட வடிவில் பறக்க விடப்பட்ட முதலை, ஆக்டோபஸ், வண்ணத்துப்பூச்சி காற்றாடிகள் மக்களைக் கவர்ந்தன.

நண்பேன்டா!

பெருந்துறை கொங்கு பல்தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சுமார் 100 பேர் கடந்த மாதம்  சோலையாறில் சந்தித்தார்கள். சாதாரண பொழுதுபோக்கு சந்திப்பாக இல்லாமல்  நிதி மேலாண்மை, சமூக சேவை, உடல் நலன் காக்க ஆலோசனைகள்  என சகல அம்சமும் கொண்ட பல  அமர்வுகள் இதில் இருந்தன. தங்களோடு படித்து அகாலமாக  இறந்து போன சக நண்பனுடைய  குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது நெகிழ்ச்சி. கூடவே அப்துல்  கலாமுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, சோலையாறு அரசு மேல்நிலைப் பள்ளி  நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்க நிதியுதவி செய்தது சிறப்பு. பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்வுகள் இப்படி ஆக்கபூர்வமாக மாறினால் நலம்!

நவீன நளாயினி

‘‘தென்னைய வெச்சா இளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீருன்னு எந்த மகராசன் எழுதினானோ தெரியாது. ஆனா அது சத்தியங்க’’ என்கிறார் கை, கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளியான ஜெகநாத். ஐதராபாத்தைச் சேர்ந்த இவருக்கு இரண்டு கைகளும், கால்களும் இல்லை.  இவரது உறவுக்காரப்  பெண் சங்கரம்மாள் பரந்த மனதுடன் இவரை மணந்து கொண்டார். கூலி வேலை செய்து கணவரைக் காப்பாற்றினார்.

மணவாழ்க்கை இவர்களுக்கு 2  மகன்கள், ஒரு மகளைத் தந்தது. ஆனால் வளர்ந்து ஆளானதும், இருவரையும் நிர்க்கதியாக விட்டு விட்டு, பிள்ளைகள் சென்று விட்டனர். வேறு வழியின்றி இருவரும்  கையேந்தி வாழ்ந்து வருகிறார்கள். கடந்த வாரம் ராமேஸ்வரம் வந்த இவர்களின் துயரம் நிறைந்த வாழ்க்கையைக் கேட்ட அனைவரும் வருந்தினர். அதே சமயம், புராணப் பெண் நளாயினியைப் போல, கட்டிய கணவனைச் சுமந்துகொண்டு கண் போலக் காப்பாற்றும் சங்கரம்மாளின் தியாகத்தைப் போற்றவும் மறக்கவில்லை.

தவிக்கவிட்ட தக்காளி

ஒரு பக்கம் வெங்காய விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து மக்கள் கண்களில் கண்ணீர் வரவைக்க, தக்காளி விலையோ சர்ரெனக் குறைந்து விவசாயிகளின் கண்களில் ரத்தம் வடிய வைத்துள்ளது. உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரில் தக்காளி பயிரிடப்பட்டிருந்தது. நல்ல மகசூல் கிடைத்து சந்தைக்கு கொண்டு வந்த விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது விலை வீழ்ச்சி.

15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி வழக்கமாக ரூ.300க்கு விற்கும். ஆனால் இப்போது அதன் விலை ரூ.40 மட்டுமே. புலம்பியபடி, கொண்டுவந்த தக்காளியை சாலையோரங்களில் கொட்டிச் செல்கிறார்கள் விவசாயிகள். விவசாயி களின் நலனைக் காக்க இப்பகுதியில் குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும்; தக்காளியில் இருந்து ஊறுகாய், ஜாம் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை!