கடற்பாசி கொடுத்த கலிபோர்னியா டூர்!



‘மீனவர்களே, கடல் வளங்களைப் பாதுகாப்பவர்கள்... அதில் மீனவப் பெண்களின் பங்கும் அளப்பரியது’ என நிரூபித்துக் காட்டியிருக்கிறார் லட்சுமி! கடல் வளத்தைக் கெடுக்காமல் கடற்பாசி தொழிலில் ஈடுபட்டு மீனவப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தியதற்காக லட்சுமிக்கு விருதுடன் பத்தாயிரம் அமெரிக்க டாலர் பரிசும் கிடைத்திருக்கிறது. கொடுப்பது, கலிபோர்னியாவில் உள்ள கடல் வள பாதுகாப்பு தொண்டு நிறுவனமான `Seacology’!

‘‘கனவு மாதிரி இருக்குங்க. அந்தக் கடலம்மா கொடுத்த பரிசுன்னுதான் இதைச் சொல்லணும். எங்க மக்களுக்காக நான் சில விஷயங்கள பண்ணிட்டு இருக்கேன். அவ்வளவுதான். மற்றபடி விருதெல்லாம் கிடைக்கும்னு நினைக்கவே இல்லைங்க!’’ - கனிவான குரலில் நெகிழ்ந்து பேசுகிறார் லட்சுமி. ‘‘எனக்கு சொந்த ஊர் பாம்பன் பக்கத்துல சின்னபாலம் கிராமம். மீனவக் குடும்பம். என் ஏழு வயசுல அப்பா கூட கடலுக்குப் போனேன்.

இப்போ, 47 வயசாகுது. கடல்தான் என் உலகம். எங்க பகுதியில நிறைய தீவுகள் இருக்கு. அதைச் சுத்தி சுண்ணாம்புப் பாறைகள் ரொம்ப இருக்கும். அங்க கடற்பாசிகள் கொத்துக் கொத்தா கிடைக்கும். தண்ணிக்குள்ள மூழ்கி மூச்சடக்கி அந்தப் பாசியை எடுக்கறதுக்குள்ள உயிரே போயிடும்தான்.

ஆனா, மீனவப் பெண்களுக்கு இதுதான் வருமானம்... வாழ்வாதாரம்... எல்லாம்! இங்குள்ள 25 கிராமங்களைச் சேர்ந்த இரண்டாயிரம் பெண்கள் இந்தத் தொழில நம்பித்தான் வாழுறாங்க. இப்போ, பிரத்யேகக் கண்ணாடியெல்லாம் போட்டுட்டு இறங்குற அளவுக்கு நாங்க முன்னேறியிருக்கோம்!’’ என்கிற லட்சுமி, ‘மன்னார் வளைகுடா பாசி சேகரிக்கும் பெண்கள் கூட்டமைப்பின்’ தலைவி. கடந்த ஆண்டுதான் இந்த அமைப்பை உருவாக்கி இருக்கிறார் இவர்.

‘‘நாங்க எல்லோருமே ராமநாதபுரம் மீன்பிடித் தொழிலாளர்கள் யூனியன்ல இருக்கோம். இருந்தும், இந்த அமைப்பை பாசி எடுக்கற பெண்களுக்காக ஆரம்பிக்க வேண்டியதாகிடுச்சு. காரணம், 2002ல் வந்த பிரச்னை... அது இப்போதான் தீர்ந்திருக்கு. அப்போ, மத்திய அரசு ராமேஸ்வரம் கடலை `மன்னார் வளைகுடா உயிர்க்கோளப் பகுதி’ன்னு அறிவிச்சாங்க. இதனால கடற்பாசி எடுக்குறதுக்கு தடை கொண்டு வந்தாங்க.

எல்லாமே வனத்துறை கன்ட்ரோலுக்குப் போயிடுச்சு. அந்த நேரத்துல, வருமானம் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம். எங்க வாழ்வாதாரத்தை முடக்கினதுக்கு எதிரா பல கட்டப் போராட்டங்கள நடத்தினோம். அப்புறம், `PAD’ தொண்டு நிறுவனம்தான் அரசாங்கத்தோட பேசி இந்தத் தடையை நீக்க உதவினாங்க. போன வருஷம் கடற்பாசி எடுக்குறவங்கன்னு எங்களுக்கு ஐ.டி கார்டு எல்லாம் கொடுத்து எங்கள அங்கீகரிச்சாங்க.

முன்னாடி வருஷம் முழுக்க கடலுக்குப் போனோம். இப்போ, இந்த அமைப்பின் வழியா எங்களுக்கு நாங்களே சில கட்டுப்பாடுகளைப் போட்டுக்கிட்டோம். அதாவது, மாசம் 12 நாட்கள்தான் பாசி எடுக்கப் போறது. அதுவும் அமாவாசை ஆரம்பிச்சு அடுத்த அஞ்சு நாளு... பௌர்ணமி ஆரம்பிச்சு அடுத்த அஞ்சு நாளு... அவ்வளவுதான். ஏன்னா, இந்நேரங்கள்ல கடல் உள்வாங்கும். ஈஸியா கடல்ல முங்கி பாசி எடுக்கலாம். மத்த நாட்கள்ல கடற்பாசியை வளர விட்டுடுவோம்!’’ என்கிற லட்சுமி, பாசி எடுக்கப் போகும் அந்த சாகசத் தொழிலை விவரிக்கிறார்...

‘‘ஒரு படகை வாடகை எடுத்துட்டு நாங்க 15 பேர் சேர்ந்து போவோம். ஒத்தாசைக்கு சில ஆண்களும் கூட வருவாங்க. காலையில ஆறு மணிக்கு போயிட்டு மதியம் 12 மணிக்குக் கரை திரும்பிடுவோம். குறிப்பிட்ட சில தீவுகளுக்குப் பக்கத்துல படகை நிறுத்தி கடல்ல குதிப்போம். ஒருத்தர் ஒரு நாளைக்கு 35 கிலோ கடல் பாசி வரை எடுக்க முடியும். ஒரு கிலோ 20 ரூபாய்க்குப் போகும். இதுல, மாசம் ஏழாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

 பாசி வளர்ற கேப்ல குழந்தைகள நல்லா கவனிச்சு ஒழுங்கா ஸ்கூலுக்கு அனுப்புற வேலையைப் பார்ப்போம். அப்புறம், தடைக் காலத்துல ரெண்டு மாசம் கடலுக்குப் போகமாட்டோம். இதனால, கடல் வளமும் கெடுறதில்ல. எங்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்குது. குடும்பமும் சூப்பரா நடக்குது!’’ என்கிறார் உற்சாகமாக!

இந்த விருதுக்கு லட்சுமியை பரிந்துரைத்த `PAD’ தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராஜேந்திர பிரசாத்தும் அதே உற்சாகம் குறையாமல் பேசுகிறார்.
‘‘நாங்க மீனவர்களுக்கு சில வேலைகள்ல சப்போர்ட் பண்ணிட்டு இருந்தோம். அப்பதான் இந்தத் தடை வந்துச்சு. இவங்க பாசி எடுக்கறதால பவளப் பாறைகள் அழியுதுன்னு வனத்துறை நினைச்சிட்டு இருந்தாங்க. ஆனா, உண்மையை அவங்களுக்குப் புரிய வச்சோம்.

 செத்த பவளப் பாறைகள்லதான் கடற்பாசி வளரும். அந்தப் பாறைகளை இவங்க சுண்ணாம்புப் பாறைன்னு சொல்வாங்க. அதிலுள்ள கடற்பாசியை எடுக்கறது பாதிப்பை ஏற்படுத்தாதுன்னு சொன்னோம். இதனால, அடையாள அட்டை கொடுத்து கடற்பாசி எடுக்க அனுமதிச்சாங்க. இதுக்காகப் போராடி எல்லாரையும் ஒண்ணு திரட்டினதுல லட்சுமியோட பங்கு பெருசு.

அதனாலதான் விருதுக்குப் பரிந்துரை செய்தோம். இதுக்கு உலகம் முழுவதுமிருந்து விண்ணப்பம் வரும். அதுல லட்சுமியை தேர்ந்தெடுத்திருக்காங்கன்னா, அவங்க கடின உழைப்புதான் காரணம். இதை வாங்க லட்சுமியை அவங்க நேர்ல கூப்பிட்டிருக்காங்க. சீக்கிரமே அவங்க கலிபோர்னியாவுக்குப் பறக்கப் போறாங்க!’’ என்கிறார் அவர் மகிழ்ச்சியாக!

‘‘அவங்க கொடுக்குற இந்த பத்தாயிரம் டாலர் நம்ம ஊரில் ஆறரை லட்சம் ரூபாயாம். அந்தப் பணத்தை மீனவக் குழந்தைகளின் படிப்புக்கும், பெண்கள் நலனுக்கும் செலவு செய்யலாம்னு இருக்கேன். எங்க ஊர்ல பள்ளிக்கூடம் வந்ததே பெரிய விஷயம். இப்ப நடுநிலை வரை இருக்கு. இன்னும் ஒரு வருஷத்துல மேல்நிலையும் வந்திடும்னு சொல்றாங்க. ஆனா, அதுக்கு இடம் தேவை. நான், பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காதவ! அதனால, பள்ளிக்கூடத்துக்கு இடம் வாங்க இந்தப் பணத்திலிருந்து கொஞ்சம் கொடுக்கலாம்னு இருக்கேன்’’ என்கிறார் லட்சுமி நிறைவாக!

இப்போது கடல் வளமும் கெடுறதில்ல. எங்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்குது. குடும்பமும் சூப்பரா நடக்குது!

- பேராச்சி கண்ணன்
படங்கள்: சத்யராஜ்