சூரிய நமஸ்காரம்



எனர்ஜி தொடர் 21

இதுவரை சூரிய நமஸ்காரத்தின் நுட்பமான அமைப்பைப் பேசினோம்; வரலாற்றைப் புரட்டினோம்; பயிற்சியினால் வளம்பெற்று வாழும் சிலரை சந்தித்தோம்; அனுபவசாலிகளான சில யோகா ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்டோம்; நூல்களிலிருந்து கருத்துகளை எடுத்துக்கொண்டோம்; முன்தயாரிப்பு பற்றி சிறிது தொட்டுக்கொண்டோம்;

செய்முறையைப் பார்த்தோம். வழக்கமான சூரிய நமஸ்காரத்தைச் செய்ய முடியாதவர்களுக்கான இரு எளிய பயிற்சிகளைப் பார்த்தோம். சூரிய நமஸ்காரத்தின் பலன்களைப் பார்த்தோம்.

இப்போது இதுவரை பேசாத ஓர் அம்சம் பற்றி பார்க்க உள்ளோம். அது, ‘வழக்கமான சூரிய நமஸ்காரப் பயிற்சியை யார் யாரெல்லாம் செய்யக்கூடாது’ என்பதாகும். என்னதான் நன்மை தருவதாக இருந்தாலும், ஏற்றதாக இல்லாத ஒன்றைத் தவிர்ப்பதுதான் சரியானது. அமிர்தமே ஆனாலும், அது ஒருவருக்கு விஷமாகிறது என்றால் அவர் அதை அருந்தக்கூடாது அல்லவா!

ஆனால் எத்தனை பேர் இப்படிப் பார்க்கிறார்கள்? இவ்வாறு பார்க்காமல் சூரிய நமஸ்காரப் பயிற்சி செய்யும் சிலருக்கு, சிறிது காலத்திற்குப் பின் அதுவே பெரிய பிரச்னையாக மாறி, இயல்பான வேலைகளைக்கூட தொடர முடியாமல் ஆவதுண்டு. சிலர் விளைவுகளைத் தெரியாமல் செய்வதும், சிலர் பிரச்னைகளை உணராமல் தொடர்வதுமே இதற்கு முக்கியக் காரணங்கள். சிலர் குழு யோகா வகுப்பில் வேறுவழியின்றி, பிறர் செய்வதையே செய்ய வேண்டிய சூழ்நிலை. அதனால் ஏற்கனவே இருக்கும் சில உபாதைகள் அதிகமாகி விடுவதுண்டு.

சிலர் ஒரே நாளில் பலன்களை அள்ளிவிடலாம் என தீவிரம் காட்டுவார்கள். 108 முறைகள், அதற்கும் மேற்பட்ட முறைகள் என்று சூரிய நமஸ்காரப் பயிற்சியை வேக வேகமாகச் செய்பவர்கள் உண்டு. மூச்சைப் பயன்படுத்தாமல் உடற்பயிற்சி போல் செய்வதில் என்ன சிறப்பு இருக்கும்? உரிய முறையில், நுணுக்கங்களுடன் 20 முதல் 25 சுற்றுகள் செய்தாலே பலன்களுக்குக் குறைவிருக்காது. தவறாக ஆயிரம் முறை செய்தாலும் எதுவும் கிடைக்காது.

‘எந்த இடத்தில் தருகிறோம், எந்த நேரத்தில் தருகிறோம், எந்த வயதினருக்குத் தருகிறோம், அவரது செயல்பாடுகள் என்ன, அவரது பலம் என்ன, என்ன எதிர்பார்ப்பில் அவர் யோகாவைச் செய்ய உள்ளார் என்பனவற்றை அறிந்து, அதன் பின்னே உரிய பயிற்சியை அளிக்க வேண்டும்’ என்கிறது ‘யோக ரகஸ்யம்’ என்ற நூல்.

காரணம், ஒவ்வொருவரின் உடல்வாகும் அமைப்பும் வேறு வேறானது. ஒரே பயிற்சியை எல்லோருக்கும் திணிக்க முடியாது; திணிக்கவும் கூடாது. அவ்வாறு செய்தால் பிரச்னைகள் வரலாம். மிக முக்கியமாக உடல் - மனப் பிரச்னை உள்ளவர்கள்; உதாரணத்திற்கு கழுத்து வலி, இடுப்பு வலி, ஒற்றைத் தலைவலி, தலைசுற்றல் உள்ளவர்கள் சூரிய நமஸ்காரம் செய்தால் அவர்களின் பிரச்னைகள் மோசமாகக் கூடும்.

தங்களுக்கு உள்ள பிரச்னைகளைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள், செய்கிற எதிலும் கவனமாக இருப்பார்கள். மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக, பிரச்னை உள்ள ஒருவர் செய்யும்போது, அவரின் பிரச்னை அதிகமாகலாம்; அல்லது வேறு புதிய பிரச்னைகள் உருவாகலாம். எந்த ஒன்றிலும் இருக்கும் எல்லா அம்சங்களையும் உற்று நோக்குவதுதான் முழுமையான பார்வை. ஒன்றை செய்வது மட்டும் போதாது; அதன் விளைவு எப்படி இருக்கும்.

அது சந்தோஷம் தருமா, சங்கடம் தருமா என யோசித்து முடிவெடுக்க வேண்டும். ‘உடல் அமைப்புரீதியில் இயல்பாய் இல்லாத சிலர் ஏன் சூரிய நமஸ்காரம் செய்யக்கூடாது’ என்பதை இப்போது பார்ப்போம். இதுபற்றி யோகா ஆசிரியர் லாரா அபிே ஷக் விரிவாகப் பேசினார்... ‘‘சிலருக்கு முதுகு மேல்நோக்கி பெரிதாக வீங்கின மாதிரி முன்பக்கம் வளைந்து இருக்கும். இதை ‘கைபோஸிஸ்’ (Kyphosis) என்பார்கள். வேறு சிலருக்கு முதுகெலும்பிலேயே கீழ் முதுகின் இடுப்புப் பகுதியில் பள்ளமாக இருக்கும். இதை ‘லோர்டோசிஸ்’ (Lordosis) என்பார்கள். இது குறிப்பாக பெண்களுக்கு அதிகம் இருக்கும் பிரச்னை.

மேற்கண்ட இரு நிலையில் உள்ளவர்களும் சூரிய நமஸ்காரம் செய்யக் கூடாது. முதல் நிலைக்காரர்களுக்கு மேல்முதுகு இறுக்கத்தால், இயல்பாகச் செய்ய வராது. அதனால் கஷ்டப்பட்டு செய்ய முனைவார்கள். இப்படி வலிந்து உடலை வருத்தும்போது பிரச்னை இன்னும் அதிக மாகிவிடும். குறிப்பாக கழுத்து வலி, ஒற்றைத் தலைவலி வரலாம். லோர்டோசிஸ் பிரச்னை உள்ளவர்கள் இந்தப் பயிற்சியைச் செய்தால், இடுப்பு வலி, முதுகு வலி என பாதிப்புகள் வரும்.

அதோடு எதிர்காலத்தில் பெரிய பிரச்னைக்கும் இது காரணமாகலாம். இவை இல்லாமல் மூன்றாம் நிலையாக ஒன்று உள்ளது. அதன் பெயர் ‘ஸ்கோலியோஸிஸ்’ (Skoliosis) என்பதாகும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு முதுகெலும்பு ஒரு பக்கமாக வளைந்த நிலையில் இருக்கும். இந்த நிலையுள்ளவர்களின் தோள் பட்டைகளில் ஏற்ற இறக்கம் இருக்கும். இவர்களும் உரிய ஆலோசனைக்குப் பின் அவர்களுக்கு ஏற்ற மாற்று ஆசனங்களைச் செய்யலாம்’’ என்கிறார் லாரா.

பொதுவாகவே முதுகெலும்பில் பிரச்னை உள்ளவர்கள், செர்விகல் - அதாவது பிடரிப் பகுதியில் பிரச்னை உள்ளவர்கள், முதுகு வலி, ஒற்றைத் தலைவலி, உடல் இறுக்கம் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், தலைசுற்றல் உள்ளவர்கள் சூரிய நமஸ்காரத்தைத் தவிர்க்க வேண்டும். இது தெரியாமல் முன்னமே சூரிய நமஸ்காரப் பயிற்சியைத் தொடங்கியவர்கள், இப்போதாவது நிறுத்தினால் எதிர்காலத்தில் நிலைமை முற்றாமல் பார்த்துக் கொள்ளலாம்.

 பயிற்சிக்குச் செல்பவர்கள் தங்கள் உடல் பிரச்னைகளை வெளிப்படையாக யோகா ஆசிரியர்களிடம் சொல்ல வேண்டும்; யோகா ஆசிரியர்களும், தங்களிடம் வரும் ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் தேவைகளும் வெவ்வேறானவை என்பதை அறிந்து, உரிய பயிற்சியைத் தர வேண்டும். சூரிய நமஸ்காரத்தை கீழ்க்காணுபவர்கள் தவிர்ப்பது நல்லது.

* நீண்ட நாள் கடும் நோய் உள்ளவர்கள்
* தீவிர இதய நோய் உள்ளவர்கள்
* அடிக்கடி மயக்கம் வரும் உடல்வாகு கொண்டவர்கள்
* உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
* கழுத்து வலி - தோள்பட்டை வலி - முதுகு வலி உள்ளவர்கள்
* ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள்
* முதுகெலும்பில் பிரச்னை உள்ளவர்கள்
* கர்ப்பிணிப் பெண்கள்
* வலிப்பு நோய் உள்ளவர்கள்
* குடல் இறக்கம் உள்ளவர்கள்
* உடலில் பெரிய அளவு வீக்கம் இருந்து அவதிப்படுபவர்கள்

இவர்கள் செய்யக்கூடாது என்று சொன்னது வழக்கமான சூரிய நமஸ்காரப் பயிற்சியை மட்டுமே! இதற்கு மாற்றாக முட்டியிட்டுச் செய்யும் சூரிய நமஸ்கார முறை உள்ளது, உட்கார்ந்து செய்யும் சூரிய நமஸ்கார முறை உள்ளது. இதில் ஏற்றதை ஆலோசனையின் பேரில் செய்யலாம். அதுவும் செய்யக்கூடாது என்றால் பிற ஆசனங்கள் உள்ளன; எளிய ஆசனங்கள் தொடங்கி பல நிலைகளில் செய்ய ஏற்ற ஆசனங்கள் உள்ளன. இவை அல்லாமல், எந்த நிலையிலும் செய்யக் கூடிய ‘யோகா சிகிச்சை’ உள்ளது. ஆகவே, யோகா செய்ய ஆர்வத்தோடு வருபவர்களுக்கு அற்புத பலன்கள் தரக்கூடிய பல அம்சங்கள் இங்கு உண்டு. 

ஏற்கனவே இருக்கும் பிரச்னைகள் சரியானதும், சிலர் வழக்கமான சூரிய நமஸ்காரத்தை செய்யலாம், தேர்ந்த ஆசிரியரின் ஆலோசனையுடன்! உடலின் அருமையை - வாழ்வின் அருமையை - தங்கள் கடமையை நன்கு உணர்ந்தவர்கள் தங்கள் உடலுக்கும் மனதுக்கும் நலம் தரும் இதற்கு மிகவும் மதிப்பு கொடுப்பார்கள். பலருக்கு நேரம் என்பது மிக முக்கியம், பல வேலைகளுக்கிடையில் இதற்கான நேரத்தைக் கண்டுபிடித்து, தங்கள் உடலை மிக ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்களின் வாழ்வு ஆனந்தமாக இருக்கிறது.

சென்னையில் இருக்கும் ஒரு மிக முக்கிய ஆளுமை ஒருவருக்கு யோகா வகுப்புகள் தரும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு நேரம் கிடைப்பது என்பது மிகவும் கடினம். இரவு இரண்டு மணிக்கு எழுந்து வேலை செய்வார். பெரும்பாலும் தாமதமாகத்தான் படுக்கச் செல்வார். ஆனாலும் வாரத்தில் ஐந்து நாட்களும் அதிகாலையில் வகுப்பில் இருப்பார். வெளியூர் பயணங்கள் இருந்தால் கூட, வெள்ளிக்கிழமை பயிற்சிக்குப் பின் போகும்படி திட்டமிட்டுக் கொள்வார். பயிற்சியில் எந்த சமரசத்துக்கும் இடம் தரமாட்டார். இந்தத் தீவிரத்தால் அவரது ஆரோக்கியமும் பணியின் சிறப்பும் பல மடங்கு உயர்ந்தது.

சூரிய நமஸ்காரத்தின் எல்லா நிலைகளையும் பார்த்து முடித்து விட்டோம். பலருக்கு இப்போது நிறைய கேள்விகள் எழுந்துள்ளன. சூரிய நமஸ்காரத்தின் வெவ்வேறு அம்சங்கள் பற்றியும் கேள்விகளைத் தொடுத்துள்ளனர். அவற்றிற்கான பதில்களோடு அடுத்த வாரம் சந்திக்கலாம்.

(உயர்வோம்...)

ஏயெம்