நியூஸ் வே



தனது லேட்டஸ்ட் கெட்டப் தாடியுடன், சமீபத்தில் ஒரு விழாவிற்கு வந்திருந்தார் ரஜினி. ‘‘என்கிட்ட பலர் இப்போ நான் நடிக்கற ‘கபாலி’ படம் ‘பாட்ஷா’வை மிஞ்சுமான்னு கேட்கறாங்க. அந்தப் படத்தை மிஞ்சும் அளவுக்கு இன்னொரு படம் வருமான்னு தெரியல. ஒரு பாட்ஷாதான்!’’ என பன்ச் அடித்தார் ரஜினி.

‘‘அஜித்தை பார்த்து ரொம்பவே வியப்பா இருக்கு. அவரோட எளிமை எனக்கு சஞ்சய் தத்தை நினைவூட்டுது. அவரும் இவரை மாதிரிதான் ஸ்கின்னுக்கு மேக்கப் போடக்கூட மாட்டார்...’’ என ஆச்சரியம் பொங்குகிறார் பாலிவுட் ஸ்டார் ராகுல் தேவ். சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தில் ராகுல்தான் மெயின் வில்லன்!

இந்தியில் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறார் அரவிந்த்சாமி. நடிப்பு, பிஸினஸ் என இரட்டைக் குதிரை சவாரி செய்யும் அரவிந்த்சாமி, அடுத்து இயக்குநர் ஆகும் ஆசையில் இருக்கிறார்.

சமீபத்தில் பெங்களூரு சென்றிருந்த கமல், ‘வாழும் கலை’   ரவிசங்கரை சந்தித்து ஆசி பெற்றுத் திரும்பியிருக்கிறார்.

கவுண்டமணி விவசாயியாக நடிக்கும் படம் ஒன்றின் ஆடியோ ஃபங்ஷன் அது. விழாவிற்கு சத்யராஜும் வந்திருந்தார். ‘‘ஏம்பா, இந்தப் படத்தில் காதலே கிடையாது. லவ் இல்லன்னா ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவாங்களா?’’ என தன் படத்தையே கவுண்டமணி கலாய்க்க, ‘‘கண்டிப்பா வருவாங்க. லவ் இல்லைங்கறதுக்காகவே வருவாங்கண்ணே!’’ என சத்யராஜ் சொல்லி சிரித்தார்.

‘தூங்காவனம்’ படத்தை தீபாவளிக்கு முன்னமே முடிக்க திட்டமிட்டிருக்கிறார் கமல். அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கிறது.

துரை.செந்தில்குமார் இயக்கும் புதுப் படத்தில் தனுஷ் அரசியல்வாதியாக நடிக்கிறார். அதற்காக தமிழகத் தலைவர்களின் மேடைப்பேச்சு கேசட்களை வாங்கி போட்டுப் பார்த்து பயிற்சி பெறுகிறாராம் தனுஷ்.

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஒரு கார் திடீரென இறக்கை முளைத்துப் பறக்கும். அந்தக் கற்பனையை நிஜமாக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறது ஒரு அமெரிக்க நிறுவனம். மாசாசூசெட்ஸில் இருக்கும் டெர்ரா ஃபியூஜியா நிறுவனம் உருவாக்கி இருக்கும் ‘ரோடபிள் பிளேன்’ என்ற இது தரையிலும் வேகமாக ஓடும், வானிலும் பறக்கும். ஒரே நிமிடத்தில் இறக்கைகளை மடக்கி காராக மாறும். சாதாரண கார் ஷெட்டில் இதை நிறுத்தி வைக்கலாம். மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ஓடும். அமெரிக்காவில் இதை வாங்க புக்கிங் ஆரம்பமாகிவிட்டது.

‘‘நான் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம். என் தகுதிக்கு என்ன தருவார்களோ அதை மட்டுமே வாங்குகிறேன்’’ என ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் காஜல் அகர்வால்.

புத்தகம் எழுதுவதில் இறங்கிவிட்டார்கள் பாலிவுட் நடிகைகள். ‘நியூ ஏஜ் ஸ்கின் டயட்’ என்ற பெயரில் டயட் + அழகு சிகிச்சை பெற்று ஸ்லிம் ஆகியிருக்கும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், ஒரு பியூட்டி டிப்ஸ் நூல் எழுதுகிறார். ‘‘வெஜிடேரியனாக மாறி, சர்க்கரையை முழுதுமாகத் துறந்து நான் பெற்ற மாற்றம் அபாரமானது. இப்போது எனக்கு வயிற்றுவலி வருவதில்லை; கண்களுக்குக் கீழே சதை தொங்குவதில்லை’’ என்கிறார் ஜாக்குலின். சீனியர் நடிகை ஷில்பா ஷெட்டி தனது ஸ்லிம் ரகசியத்தை ஒரு புத்தகமாக எழுதுகிறார். அடுத்த மாதம் அது ரிலீஸ்! 

நோக்கியா 3310 செல்போனை ஞாபகம் இருக்கிறதா? ஸ்மார்ட் போன் யுகத்தில் வழக்கொழிந்துபோன இந்த சோப்பு டப்பா போனை மீண்டும் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யத் தீர்மானித்திருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். ‘‘ஸ்மார்ட் போனில் பேட்டரி சார்ஜ் நிக்கலை’’ என புலம்பும் நபர்களுக்காக வரும் இது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 29 நாட்கள் தாங்கும் பேட்டரியுடன் அறிமுகம் ஆகிறது. விலை 2500 ரூபாய்.

நிலத்தில் போலவே கடல்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்வது பெரும் பிரச்னை ஆகியுள்ளது. வரும் 2050ம் ஆண்டுக்குள் 99 சதவீத கடல் பறவைகள் பிளாஸ்டிக்கை சுவைத்திருக்கும் என புள்ளிவிவரம் சொல்கிறார்கள்.

‘தெனாலிராமனி’ல் வடிவேலுவுடன் ஜோடியாக நடித்த மீனாட்சி தீக்‌ஷித், நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் ‘பயம் ஒரு பயணம்’ என்ற த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். இதுதவிர, பாலிவுட்டிலும் கைவசம் ஒரு படம் வைத்திருக்குது பொண்ணு!

சமீபத்தில் சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றிற்கு தன் பட புரொமோஷனுக்காக சென்றிருந்தார் விஷால். ‘நீங்க, சந்தானம்னு இப்போ எல்லாருமே பெண்களை ரொம்ப கலாய்க்கிறீங்க... ஏன் இப்படி பண்றீங்க?’’ என கேள்வி நேரத்தில் பெண்கள் விஷாலிடம் கேட்க, நெளிந்து வளைந்து, பெரிய புன்னகையை பதிலாக அளித்துவிட்டு திரும்பியிருக்கிறார் ஹீரோ!

மறுபடியும் பாரதிராஜா நடிக்கத் தொடங்கி விட்டார். முகிலன் இயக்கும் படத்தில் விதார்த் அவருக்கு மகனாக நடிக்கிறார்.

ஆன்லைன் விற்பனைத் தளமான ஸ்நாப்டீல் இதுவரை விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடி விற்பனை போன்றவற்றால் 1350 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.

‘தரமணி’ முடித்த டைரக்டர் ராம், இப்போது ‘சவரக்கத்தி’ படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். மம்முட்டி வெகுநாட்களுக்குப் பிறகு நடிக்கப் போகும் தமிழ்ப்படத்தையும் ராமே இயக்கப் போகிறார்.

பாக்யராஜின் மகன் சாந்தனு-கீர்த்தி ஜோடியை தன் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் விஜய். ‘‘எங்க லைஃப்ல மறக்கமுடியாத நாள். சூப்பர் டின்னர்’’ என நெகிழ்கிறது இந்த புதுமணத் தம்பதி!

‘நானும் ரவுடிதான்’ படம் திட்டமிட்டதைவிட முப்பது நாட்கள் நீண்டு விட்டது. கடைசி 5 நாட்கள் ஷூட்டிங் செலவை ஹீரோயின் நயன்தாரா ஏற்றுக்கொண்டு விட்டார். இப்போது பிரச்னை இல்லை.

‘இது நம்ம ஆளு’ பாடலுக்கு டேட்ஸ் கேட்டு நயன்தாராவை அணுகினார்கள். எவ்வளவோ சமாதானம் செய்தும் நயன் ‘நோ’ சொல்லிவிட்டார். அதனால் குத்துப்பாடல் இல்லாமலேயே படம் வருகிறது.

சசிகுமார் ‘தாரை தப்பட்டை’ முடித்தவுடன் உடனே ஒரு படம் ஹீரோவாக குறுகிய காலத் தயாரிப்பில் நடிக்கிறார். அதே நேரத்தில் விஜய் ஓகே சொன்ன ஸ்கிரிப்ட்டையும் தயார் செய்கிறார். அதில் அவர் நடிக்கமாட்டார்.