குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

நாட்டில் படிப்பவர்களை விட குடிப்பவர்களே அதிகமாக இருக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் அரசாங்கமே கடமை கண்ணாயிரமாய் கடுமையாக வேலை செஞ்சுக்கிட்டு இருக்கு. இந்த நேரத்துல, குடிமகன்களை குத்தம் சொல்றதே பலருக்கும் ஃபுல் டைம் பொழப்பா போச்சு. முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள் தோழமைகளே.

நம்ம நாட்டில்தான் இப்படி குடிகாரர்களின் சுதந்திரத்துக்குள் அத்துமீறி நுழைந்து, ஆக்கிரமித்து, அங்கே ஒரு குடிசை போட்டு இம்சை தருகிறோம். உண்மையை உரக்கச் சொல்லவேண்டுமென்றால், உலகத்திலே இதை கொண்டாடத்தான் செய்கிறார்கள்.

இவ்வளவு ஏன், நம்ம சிவபெருமானே சோமபானம் என... வேண்டாம், இதைச் சொன்னால் இந்த கட்சிக்காரர்கள் சண்டைக்கு வருவார்கள். அட நம்ம பண்டைய இலக்கியத்திலே கூட... அய்யய்யோ, வேணாம்! இதைச் சொன்னால் நம் கொடும்பாவியை எரிப்பார்கள். அதனால அண்ணன் மைகோவின் ஸ்டைலில், கிரேக்கம் ஏதென்ஸ் மங்கோலியா ஜிங்லிபிலியான்னே போயிடுவோம்!

ஆப்ரிக்க கவிஞர் சோமாலியா சொக்கு சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு நெஞ்சு பக்கென்று இருக்கும். ‘‘குடிக்கிறவனெல்லாம் கெட்டவன் இல்ல; சொல்லப்போனால் போதையிலதான் பலரும் உண்மையாவும் பெருந்தன்மையாவும் நல்லவனாவும் இருக்காங்க’’ என்கிறார் அவர். ‘‘தள்ளாடும் வரை குடிப்பது கூட தவறில்லை, தனியாகக் குடிப்பதுதான் தப்பு’’ என்கிற ஆளில்லாத அன்டார்க்டிகா தேசத்தில் உள்ள பழமொழி பற்றி உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

குடிப்பவர்களின் சைடுடிஷ் உரிமைக்காகக் குரல் கொடுத்த சைபீரிய தேசப் போராளி காராசேவ் குவரே, ‘‘குடிப்பது அவரவர் உரிமை. அது கண்டிக்கப்படுவதும் கண்டுக்காமல் விடப்படுவதும், குடித்த பின் அவர்கள் நடப்பதைப் பொறுத்தது’’ என சூடம் அணைத்து சத்தியம் செய்திருக்கிறார். ‘‘உனக்கு போதையேறிய பிறகு நீ குடிக்கிற கட்டிங் அடுத்தவனோடது’’ன்னு குவாட்டரை வைத்தே கம்யூனிஸம் சொல்கிறார் சுத்தி என்கிற சுந்தரேசன்.

இப்படி ரத்தமும் சதையுமாக, பேரரசு படமும் கதையுமாக, சோஷலிசம் கம்யூனிஸம் அதிரசம் புளிரசமென எல்லாத்தோடும் கலந்து கிடக்கும் இந்த அருமையான பழக்கத்துக்கு அருகில் இருப்பவர்களை எப்படியெல்லாம் அவமானப்படுத்துகிறது இந்த சமூகம்!  ரோட்டிலே பஸ் கவிழ்கிறது, ஆட்டோ கவிழ்கிறது, லாரி கவிழ்கிறது, தினம் நூறு பைக்குகள் கவிழ்கின்றன.

 ஒரு மனிதன் கவிழக்கூடாதா? கீழே விழுந்த பத்து ரூபாய் நோட்டை எடுக்கிறார்களே, ஒரு கிராம் தங்கமானாலும் தேடி எடுக்குறாங்களே, அட... எட்டணா சாக்லெட்டை கூட எட்டி எடுக்குறீங்களே, ஒரு குடிகார சிட்டிசன் ரோட்டிலே விழுந்துட்டா மட்டும் ஏன் தூர போறீங்க? மார்க் போடுறேன், மண்ணாங்கட்டி போடுறேன்னு டிவில மைக்க புடிச்சு உளறினா கை தட்டுறீங்க! இதுவே ஒருத்தன் மப்புல உளறினா கை கட்டுறீங்க. இப்ப சொல்றோம் கேட்டுக்குங்க, என்னைக்கு இந்த தேசம் குடிகாரனை கொலைகாரனைப் போல பார்க்காமல் இருக்குதோ, அன்னைக்குதான் இந்தியா வல்லரசு, வாஞ்சிநாதன், ஏன்... விருத்தகிரி கூட ஆகும்.

* கடைசி விக்கெட்டின் கேட்ச்சை மிஸ் பண்ணி திட்டு வாங்கும்போது  தான் தெரியும், ரஜினியெல்லாம் எவ்வளவு சிரமத்தில் தூக்கியெறிந்த பாமை புடிச்சு திருப்பித் தூக்கிப் போடுறாரென!
* ஒரு சிறுமியிடம் முத்தம் கேட்டு மொக்கை வாங்குறப்பதான் புரியும், ஏன் உலகநாயகன் கேப் கிடைக்கும்போதெல்லாம் கிஸ் போடுறாரென!
* வாய்தா மேல் வாய்தா வாங்கும் வக்கீலை வச்சிருப்பவர்களுக்குத்தான் தெரியும், பிரச்னையைப் பெருசாக்காம பேச்சுலயே தீர்ப்பு சொல்லிட்டுப் போக சரத்குமார் எவ்வளவு சிரமப்பட்டிருப்பாரு என!
* லவ் பண்ற பொண்ணு வீட்டுக்கு போன் பண்ணி, பொண்ணுன்னு நெனச்சு அவ அம்மாகிட்ட ‘ஐ லவ் யூ’ சொன்ன அட்ராசிட்டிங்களுக்குத்தான் தெரியும், காதல் சொல்ல முரளி ஏன் அப்படி
தயங்கினார் என!
* கேஸ் மானியத்துக்கு பதிவு செய்வதற்காக ஆறு மாசமா ஆதார் அட்டைக்கு வெயிட் பண்ணும்போதுதான் புரியும், மூணு வருஷமா படம் வெளி வராம தவிச்ச சிம்பு மனசு எப்படி வலிக்குமென!
 36 இன்ச்சிலிருந்து 38 இன்ச்சுக்கு இடுப்பு சைஸ் மாறியதும், நல்ல ஜீன்ஸாய் தேடிக் களைக்கும்போதுதான் புரியும், எந்த படத்திலும் ஜீன்ஸ் அணியாமல் நடிக்கும் தோழி நமீதாவின் நிறைவேறாத ஆசையின் வடு!

* மேட்ச் பார்க்க பொய் காரணத்தோடு லீவு கேட்டு மேனேஜர் முன் நிற்கையில் புரியும், சொல்றதுக்கு மேல ஜோதிகா நடிக்கிறது எல்லாம் எம்புட்டு கஷ்டமென!
சினிமான்னா சும்மா இல்ல பாஸ், இது எல்லாத்துக்கும் மேல!

வீட்டிற்குள் நுழையும்போதே, வாசற்படி அருகே இரு விமானங்கள் கவிழ்ந்து கிடக்க, வாசல் தாண்டி வீட்டின் ஹாலுக்குள் நுழையும் தடத்தை மறைத்து ஒரு புல்டோசர் நிற்கும். அதே ஹாலின் ஒரு ஓரத்தில் ஒரு காரும், அதனைத் தாண்டி ஒரு ஹெலிகாப்டரும், கூட ஒரு முயலும் இருக்கும்.

பெட்ரூம் படுக்கையில் சிங்கமும் மானும் ஒன்றாகப் படுத்துக் கிடக்கும். டைனிங் டேபிளின் மேல் ஒரு கரடி காத்திருக்க, கூடவே ஒரு பைக்கும் இருக்கும். பூஜையறையில் ஒரு பார்பி வசிக்க, பாத்ரூமில் பந்துகள் உருண்டுகொண்டிருக்கும். பாத்டப்பிலோ, பக்கெட்டிலோ, ரயில் பெட்டிகள் மிதந்துகொண்டிருக்கும். எல்லாவற்றையும் ஷோகேசில் இருந்தபடி ஒரு டெடிபியர் கவனிக்கும்.

‘‘என்னடா, வீட்டுக்குள்ள பூகம்பம் வந்த மாதிரி தெரியுது’’ன்னு குழப்பம் வேண்டாம்! இப்படித்தானே இருக்கும் குழந்தைகள் வாழும் வீடு. கிட்டத்தட்ட பூகம்பமும் அப்படித்தான். இயற்கை அன்னை கலைத்துப் போடுவதற்கும், குழந்தைகள் பொம்மைகளை கலைத்துப் போடுவதற்கும் பெரிய வித்தியாசமில்லை. அதனால்தான் ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ன்னு சொன்னாங்களோ, என்னவோ?

கடவுள் எழுதிய கடிதம்அன்புள்ள தேவி, உன் மனதிற்கினிய நாதா பேசுகிறேன். பயணம் அருமையாக இருந்தது. இப்பொழுது நான் வந்திருக்கும் இடம்  மின்வெட்டே இல்லாத மாநிலமாம். இதோ இங்கு இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் அறையில் கூட பத்தாயிரம் வாட்ஸ் பல்பு ஒன்று பிஜித் தீவு எரிமலை போல எரிந்துகொண்டிருக்கிறது.

எனது அறையில் இருக்கும் மின்விசிறியில் வோல்ட்டேஜ் அதிகமாக இருப்பதால், காற்றுக்கு பதிலாக கலிபோர்னியாவில் சென்ற வருடம் கொண்டு வந்தோமே, அதே போல முன்னூறு கிலோமீட்டர் வேகத்தில் புயலடித்துக்கொண்டிருக்கிறது. நான் ஏசி அறையில் இருக்கிறேனா, இல்ல நாம் குடியிருக்கும் இமயமலையின் குளுமை போல ஓசி ஏசியில் மிதக்கிறேனா என புரியவில்லை. இந்த தேசத்திலா மின்வெட்டு என சொல்கிறார்கள்? இங்கு மின்மிகையல்லவா இருக்கிறது. வந்து சேர்ந்து 20 நிமிடங்களாகிறது, இதுவரை ஒரு மின்வெட்................................................................................

ஓவியங்கள்: அரஸ்