பாயும் புலி



மதுரையில் அட்டகாசம் செய்யும் ரௌடி  கும்பலின் முகமூடியைக் கிழிக்கும் ‘பாயும் புலி’தான் இந்த ஹீரோ!மதுரை எக்கச்சக்க ரவுடியிசத்தில் சிக்கித் தவிக்கிறது. கொலை, மிரட்டி பணம் பறிப்பது, தொழிலதிபர்களை பிணமாக வாரத்திற்கு ஒரு தடவை அதே பாலத்தின் அடியில் பாயோடு சுருட்டி வைப்பது... தடுக்க முடியாமல் தவிக்கும் காவல்துறைக்கு கட்டுமஸ்தான, அதிரடியான போலீஸ் அதிகாரி தேவைப்படுகிறார்.

பிறகென்ன? கெட்டவர்களைப் போட்டுத் தள்ள அல்லது சுட்டுத் தள்ள ஆவேசமாகப் புறப்படுகிறார் விஷால். அத்தனை ரவுடிகளையும் அடுத்தடுத்து சுட்டுத் தள்ளும் விஷால் மெயின் தாதாவைச் சுடும்போது, ‘‘எனக்கும் மேலே ஒருத்தர் இருக்கார்’’ என்று சொல்லி அவன் கண்ணை மூட... அந்த தாதாவையும் விஷால் ஒழித்தாரா என்பதே மீதிக் கதை.

விஷாலுக்கு போலீஸ் வேஷம் சும்மா அளவெடுத்துத் தைத்தது மாதிரியே இருக்கும். இதிலும் அதற்குக் குறைவு இல்லை. சூப்பர் ஹீரோ உருவாகும் வித்தையை, தேவையை முன் பாதியில் அழுத்தமாக விதைத்து விட்டு, பின்பாதியில் அந்த ‘பில்ட்-அப்’பை தக்க வைக்கத் தவறிவிட்டீர்களே சுசீந்திரன்! முறைப்பு, கோபம், காதல் எல்லாவற்றிலும் முகமொழியும், உடல்மொழியும் ஒத்துழைத்தாலும், எடுத்துக்கொண்ட கதையில் அதற்கு இடம் இருப்பதை கவனிக்க வேண்டாமா விஷால்? நடிகர் சங்க எலெக்‌ஷன் அருகில் இருக்கிற பதற்றத்தில், இடை இடையே வந்து போகும் அவசரத்தில் நடித்தது போலவே ஒரு தோற்றம்!

ஆனால், மதுரை குற்றங்களின் பின்னணிக்குக் காரணம் அறியும்போது கலங்கி நிற்பது அக்மார்க் நடிப்பு! ஆனால், அதற்குப் பிறகும் வழக்கம்போல சுட்டுக் கொண்டு அங்கும் இங்கும் நடக்கிறார், அவ்வளவே! ‘பாண்டிய நாட்டி’ல் புகழை ஈட்டிக் கொடுத்த இயக்குநர் சுசீந்திரன் இதில் சற்றே பின்வாங்கியிருப்பது கண்கூடு.
காஜல் தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரியே பயன்பட்டிருக்கிறார். படத்தில் அதிகம் நடிப்பை விட நீண்ட இடுப்பைத்தான் காட்டுகிறார். அவரை விஷால் மதுரையில் பார்த்த கணத்திலேயே டூயட் வந்துவிடுகிறது. முதல் பாதியின் துப்பாக்கிக் குண்டு சத்தங்களின் இடையில் ஆறுதல் அளித்த காஜல், பிற்பகுதியில் நெடுநேரத்திற்குக் காணாமல் போய்விடுகிறார்.

சும்மா சொல்லக்கூடாது... சூரி படம் முழுக்க வந்து போனாலும் பெரும் ஆறுதல் அளிக்கிறார். ஹெல்ெமட்டோடு குளிக்கப்போய் மனைவியிடம் மாட்டும் இடத்தில் நிச்சயம் வயிற்றைப் பதம் பார்க்கிறார். ஆனாலும், புருஷனை அடித்து  நொறுக்கும் மனைவி காமெடி எல்லாம் வி.சேகர்&வடிவேலு யுகத்து பழசு!

அன்பான அண்ணன், பாசத்தில் அவ்வளவு பாந்தம், பின்னணியில் மிரட்டும் சமுத்திரக்கனி சூப்பர்! ஆனால் இந்த மாதிரி எல்லாம் பேசி நடித்து பார்த்தது இல்லையே! இப்படி நல்ல நல்ல கேரக்டர்களாக நடித்துக்கொண்டே இருந்தால் டைரக்டர் நாற்காலியில் உட்கார மறந்து போயிடுமே பிரதர்!

எக்கச்சக்க துப்பாக்கி குண்டு களின் சீறல்களுக்கு லாஜிக்கே இல்லை. அடுத்தடுத்து போட்டுத் தாக்கும் ‘செயின் ரீயாக்‌ஷன்’ எத்தனை சுவாரஸ்யமாக அமைந்திருக்க வேண்டும். எவ்வளவு மதியூகம் தேவைப்பட வேண்டும்! ஆனால், ஒரு வகைதொகையே இல்லாமல் சுட்டுக்கொண்டு... அடப்போங்க சார்... போங்கு!
இமானின் இசையில் ‘சிலுக்கு மரமே’, ‘மதுரைக்காரி’ கேட்கும் ரகம். பின்னணி இசையும் பரபரக்கிறது. வேல்ராஜின் அசரடிக்கும் ஒளிப்பதிவு ‘ஆக்‌ஷன் சினிமா கோட்டிங்’ தடவுகிறது.இன்னும் லாஜிக், மேஜிக் இருந்திருந்தால் ‘பாயும் புலி’யின் வேகம் ஈர்த்திருக்கும்!

- குங்குமம் விமர்சனக் குழு