அழியாத கோலங்கள்



உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இங்மார் பெர்க்மனின் சீடரான ஃபிரான்சிஸ்கா ஹாமில்டன் என்னை லண்டனில் சந்தித்தது பற்றியும், பிறகு அவர் சென்னை வந்தது பற்றியும் எழுதியிருந்தேன். அவர் சென்னை வந்தது, ஒரு படம் இயக்கும் உத்தேசத்தில்! ‘Identity Crisis’-அதாவது ‘என்னையே தேடுகிறேன்’ என்ற தலைப்புள்ள திரைப்படம் அது.

இந்தியா வந்து ஒரு நடிகனைக் காதலித்து அதனால் வாழ்வில் தடம் புரண்ட ஒரு பெண்மணியின் கதையை படமாக்கும் சிந்தனையில் வந்தவர். தடம்புரளுவது பற்றிய திரைக்கதை என்று அவர் கூறியிருந்ததால், கமலையும் வாணி கணபதியையும் தனித்தனியே அவருக்கு அறிமுகப்படுத்தினேன். ‘காதலின் தெய்வீகத்தைப் பற்றி படமெடுப்பவர் போலும்! காதல் தடம் புரளுவது பற்றியும் தெரிந்து கொள்ளட்டுமே’ என்று நிைனத்தேன்.

இந்தியக் குடும்ப வாழ்வு என்பது விசித்திரங்கள் நிறைந்தது. தெருவில் உள்ள KEEP LEFT போன்றது. திருமணத்தில் நம்பிக்கையில்லாத என் போன்றவர்கள், ஒரு சம்பளமில்லாத கொத்தடிமைத் தொழிலாளி கிடைக்கும்போது வேண்டாமென்றா சொல்வார்கள்! குடும்ப வாழ்வு அப்படிப் பலரைப் பிணைத்து வைத்திருக்கிறது.

ஃபிரான்சிஸ்கா ஹாமில்டனுக்கு வருவோம். ஐதராபாத் திரைப்பட விழாவுக்குப் போயிருந்தபோது ஒரு மூன்று நட்சத்திர விடுதியில் எங்கள் தகுதிக்கேற்பவும் இந்திய கலாசாரப்படியும் மிஸ் ஹாமில்டனும் நானும் பக்கத்து பக்கத்து அறைகளில் தங்கியிருந்தோம். ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த ஒரு பிரபல நடிகரை நான் அழைத்து இந்த இங்கிலாந்து பெண்மணிக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

ஃபிரான்சிஸ்காவின் திரைக்கதை பற்றி ஒரு மாலை நேரத்தில் மூவரும் டிஸ்கஸ் செய்தோம். ஃபிரான்சிஸ்காவின் அறையில் ஒரு புட்டி ஸ்காட்ச்சுடன் ஆரம்பித்தோம். இந்த ஹாட் ட்ரிங்குகள் சம்பந்தப்பட்டவரையில் நான் ஒரு தீவிரவாதி! அவர்கள் இருவரும் செகண்ட் ரவுண்டு போவதற்குள் நான் அரை பாட்டிலை காலி செய்துவிட்டு, தட்டுத் தடுமாறி என் அறைக்குப் போய் உறங்கி விட்டேன்.

மறுநாள் காலை 6 மணிக்கு அந்த அம்மையார் என் அறைக்கதவைப் போட்டு இடித்தார். அரைத் தூக்கத்தில் கதவைத் திறந்ததும், உள்ளே வந்து உட்கார்ந்து, ‘‘நேற்று என்ன நடந்தது தெரியுமா?’’ என்று ஆரம்பித்தார். முந்தின இரவில் குடித்த அரை பாட்டில் விஸ்கியில் ஒரு கால் பாட்டில் அப்படியே என் தலைக்கு மேல் கனமாக நின்றது. தலையை பலமுறை ஆட்டிப் பார்த்தும் ஒன்றும் தேறவில்லை. அது என் தலைமேல் இல்லையே! உள்ளேயே நின்றது. அந்த வெள்ளைக்கார அம்மையார் சொன்னதை எனக்குப் புரிந்தவரை சொல்கிறேன்...     
         
கதை பற்றிப் பேசி முடிந்தவுடன் நம் நட்சத்திர நடிகர், ‘‘எனக்கு இரவில் பாதை தெரியாது. ஐதராபாத் அதிகம் பழக்கமில்லாத ஊர். நான் என்ன செய்யலாம்?’’ என்று இரவு ஒரு மணி அளவில் ஓர் அர்த்தமுள்ள புன்னகையுடன் சொன்னாராம்.‘‘எனக்கும் இந்த ஊர் புதிதுதான். ஆனால் உன் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வழி தெரியும். வேண்டுமென்றால் நானும் உன் ஹோட்டல் வாசல் வரை வருகிறேன். உள்ளே வரமாட்டேன்.

அப்படி நீ நடந்து செல்லும் நிலைமையில் இல்லை என்றால், இந்த அறையில் இன்னொரு கட்டிலும் படுக்கையும் இருக்கிறது. அதை அறையின் அந்தக் கடைசியில் இழுத்துப் போட்டுத் தூங்கலாம். என் கட்டில் பக்கம் வரக்கூடாது.

நான் ஒரு ஜூடோ பழகிய ஜிம்னாஸ்ட் என்பது ஞாபகம் இருக்கட்டும். அநாயாசமாக ஒரு தோளில் தூக்கி எறியும் முறையில் உன்னை உன் கட்டிலுக்கு அனுப்ப முடியும். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொள்!’’ என்றாராம்.முகம் வெளிறிய அந்த நடிகர், ‘‘நான் வருகிறேன்’’ என்று வெளியேறி விட்டாராம்.

அந்த நடிகர் மரியாதையுடன் போய்விட்டது பற்றி நான் ஃபிரான்சிஸ்காவிடம் பேசினேன். ‘‘அவருக்கு நடிக்கத்தான் தெரியுமே தவிர, பிராப்பர் ரூல்ஸ் ஆஃப் ப்ரொபோசல் இன் செக்ஸ் தெரியவில்லை!

 தன் ஆசையை ஒருவன் தெரிவிக்கும்போது ஓரளவு உண்மையுடன் பேச வேண்டும். நானாக இருந்தால் வேறுவிதமாக ஆரம்பித்திருப்பேன்..!’’ என்றேன்.அவர் கேட்டார், ‘‘வாட் டூ யூ மீன்?’’நான் சொன்னேன்... ‘‘லுக் ஹியர் ஃப்ரான்! யு ஆர் சோ அட்ராக்டிவ் தட் ஐ வுட் லைக் டு ஸ்லீப் வித் யு டுநைட்!’’அந்த வெள்ளைக்காரப் பெண்மணி உரக்கக் கத்தினார்... ‘‘நோ... நோ... நோ...’’

‘‘தட் இஸ் ஓகே! ஃபர்கெட் இட்...’’ என்றேன். ஒரு நீண்ட விளக்கமும் சொன்னேன்... ‘‘நான் உன்னை விரும்புகிறேன் என்று சொன்னால் அது உன் அழகுக்கும், உன் திறமைக்கும், புத்திசாலித்தனத்துக்கும் நான் கொடுக்கும் மதிப்பு மற்றும் மரியாதை. உங்கள் நாட்டு பண்பாட்டுப்படி நான் உன் முன்பாக மண்டியிட்டு, உன் கையை என் கையில் எடுத்து, உன் புறங்கையில் என் உதடுகளால் ஒரு முத்தமிட்டால் நீ என்னை ஒப்புக்கொள்ளலாம்; ஒப்புக்கொள்ளாமலும் நிராகரிக்கலாம். அந்த நிராகரிப்பை ஒரு பெரிய அவமானமாக நினைப்பது இந்தியர்களின் அநாகரிகமான நாகரிகம்.

சரி, இப்படி யோசியுங்கள்! நான் திடீரென்று தாவி உங்கள் தோள்களை இறுகப் பிடித்து கன்னத்தில் முத்தமிடுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கோபத்தில் ‘பளார்’ என்று என் கன்னத்தில் அறைகிறீர்கள்.

இதில் எனக்கு எங்கேயோ ஆசைக்கும் கோபத்துக்கும் ஒரு ஒருமைப்பாடு தோன்றுகிறது. மனித கன்னம் ஒரு குறி வைக்கப்படும் காரணப் பொருள். குறி வைத்து செயல்படுபவருடைய எண்ணம்தான் மனித கன்னத்துக்குக் கிடைக்கும் இன்பத்தைத் துன்பமாகவும், துன்பத்தை இன்பமாகவும் மாற்றுகிறது.’’  

மிஸ் ஹாமில்டன் கோபமாகச் சொன்னார்... ‘‘நீங்கள் சொன்ன அந்த வாக்கியத்தை எங்கள் நாட்டில் ‘ஒன் நைட் ஸ்டாண்ட்’ என்போம். அதை நாங்கள் கேவலமாக நினைப்பவர்கள்!’’  நான் கூறினேன்... ‘‘ஒரு ஆண் காதலைச் சொல்லும்போது அதை அந்தப் பெண் எதிர்பார்த்துக் காத்திருந்து ஏற்றுக்கொண்டால், அவள் கன்னத்தில் வெட்கச் சிவப்பு தோன்றும்.

 எதிர்பாராத அதிர்ச்சியில் அதை அந்தப் பெண் வெறுத்தால், அந்த ஆணின் கன்னத்தில் ரத்தச் சிவப்பு தோன்றும். அவள் காலணி அணிந்த பெண்ணாக இருந்தால், அவன் முகத்தில் ‘சிவந்தமண்’ தோன்றும்!’’  அதன்பிறகு இந்த அம்மையார் என் மனைவியை சென்னையில் சந்தித்து இந்த காதல் நாகரிகம் பற்றித் தெரிந்து கொண்டார். அது பற்றி பிறகு சொல்கிறேன்!

கமலையும் வாணி கணபதியையும் தனித்தனியே அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.  ‘காதலின் தெய்வீகத்தைப் பற்றி படமெடுப்பவர் போலும்! காதல் தடம் புரளுவது  பற்றியும் தெரிந்து கொள்ளட்டுமே’ என்று நிைனத்தேன்.

 (நீளும்...)

சாருஹாசன்

ஓவியங்கள்: மனோகர்