ஞாபகம்
‘‘டேய் சுகுமார்... உனக்கு ஞாபகம் இருக்கா? போன வருஷம் இதே நாள், இதே நேரம்... நீயும் நானும் மவுன்ட் ரோடு பாடா ஷோரூம்ல மீட் பண்ணினமே!’’ - ராம்குமார் துல்லியமாய் நினைவுபடுத்தினான்.
சுகுமாருக்கு ஆச்சரியம். கல்லூரிக் காலத்தில் இருந்தே ராம்குமார் இப்படித்தான். அவன் பெயரே அங்கு புள்ளிவிவரப் புலிதான். எதையும் தேதி, நேரம் என எல்லா டீடெய்ல்களோடும் சொல்வான்.‘‘எப்படிடா இன்னும் புள்ளிவிவரப் புலியாவே இருக்கே?’’ - சுகுமார் கேட்டான்.
‘‘அத விடு மாப்ள... அந்தப் பட்டப் பேரை எனக்குக் கொடுத்ததே நம்ம பிரின்ஸ்பால் நாசர் சார்தானே! அதுகூட ஆகஸ்ட் 8ம் தேதி 2002. சரியா?’’ - அன்றைய தினம் உடனிருந்த ஆட்கள், அவர்கள் போட்டிருந்த உடை வரை துல்லியமாகச் சொல்லி நினைவுபடுத்திய ராம்குமார், ‘‘மச்சீ! இப்போ எனக்கு பட்டம் கொடுத்தா எப்படி கொடுப்பீங்க?’’ என்றான் ஆவலோடு!‘‘ம்... மறதி மன்னாரு’’ என்றான் சுகுமார் தடாலடியாக...
‘‘ஏன்டா?’’ என முகத்தில் அதிர்ச்சி காட்டினான் ராம்குமார். ‘‘பின்ன என்னடா? இப்படி ஒவ்வொரு சம்பவத்தையும் ஞாபகம் வச்சிருக்குற நீ, நண்பர்கள்கிட்ட அப்பப்போ அவசரம்னு பணம் கடன் வாங்கினதை மட்டும் சுத்தமா மறந்துடறியே!’’ - சுகுமார் முடிப்பதற்குள் லைன் கட் ஆனது. இனி அவன் ஆறு மாதம் கழித்துத்தான் கூப்பிடுவான்!
சுயம் பிரகாஷ்
|