கைம்மண் அளவு
சில ஆண்டுகளாக, உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறேன். கோவையின் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரித் தமிழ் மன்றத்தில் துவக்க உரையாற்றப் போனபோது சொன்னேன், ‘‘பெரியவர்களை இனி செதுக்கவோ, இளக்கவோ, கரைக்கவோ இயலாது. உடைக்கத்தான் முடியும்.
அந்த அளவுக்கு சிந்தனைப் பாறையாக உறைந்து போனவர்கள்’’ என்று. என் முன்னால் அமர்ந்திருந்த கல்லூரி தாளாளரும் கோவையின் பெருந்தகைகளில் ஒருவருமானவர் கேட்டார், ‘‘அப்ப எங்களுக்குப் பேச மாட்டீங்களா?’’ என்று. ‘‘பேசிப் பயனில்லை’’ என்றேன்.
மாணவர்கள் இன்று அவர்களுக்கான சிக்கல்களுடன் இருந்தாலும், எவரும் திருத்த முடியாத அளவுக்கு விஷம் ஏறியவர்கள் இல்லை. பலரும் சரியாகத்தான் சிந்திக்கிறார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஒரு கல்வி ஆண்டில் 50 ஆயிரத்துக்கும் குறைவில்லாத மாணவர்களுடன் உரையாடும்போது என் நம்பிக்கை வளர்கிறதேயன்றித் தேய்வதில்லை. இனி கெடுக்க இடமேயில்லை எனும் அளவுக்கு இந்த தேசத்தை நச்சுப்படுத்தி வைத்திருந்தாலும், இளையவர்கள் விஷம் முறித்து மீட்டெடுப்பார்கள் என்பதில் தெளிவும் உறுதியும் உண்டெனக்கு.
உண்மையில் எம் கவலை யாவும் ஆசிரியர்களைப் பற்றியும் பேராசிரியர்களைப் பற்றியும்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு கோபிசெட்டிப்பாளையத்தில் ஒரு மகளிர் கல்லூரி தினத்துக்குப் பேசப் போனேன், கோவையிலிருந்தே நண்பரின் வாடகைக் காரில். சுமார் 950 மாணவியர். பேசி முடித்து, விடுதியில் சாப்பிட்ட பிறகு, பேராசிரியர்கள் எம்மை வழியனுப்பத் தயாரானபோது, பத்திருபது மாணவியர் எம்மைச் சூழ்ந்துகொண்டனர். ‘‘ஐயா! எங்களுடன், ஒரு வகுப்பறையில் அமர்ந்து கொஞ்ச நேரம் உரையாட முடியுமா?’’ என்றனர். பேராசிரியர் ஒருவர் சொன்னார், ‘‘இல்லம்மா... சாருக்கு நெறைய வேலை இருக்கு... அவர் பொறப்பிடட்டும்!’’ என் நண்பரும் தோழரும் போராளியும் வாடகைக் கார் உரிமையாளருமான சேவூர் வாசுதேவனிடம் கேட்டேன், ‘‘என்னங்க! இருந்துட்டுப் போலாமா?’’ அவர் சொன்னார், ‘‘இருக்கலாமுங்க’’ என்று.
சின்ன வகுப்பறை. ஓரமாய் எனக்கொரு நாற்காலி. அறை முழுக்க அறுபதுக்கும் மேற்பட்ட மாணவியர். ‘‘சித்தப்பா, பெரியப்பா, தாய் மாமாகிட்ட பேசுவது போல, கூச்சப்படாம என்ன வேணுமானாலும் கேளுங்கம்மா!’’ என்றேன். அன்றைய உரையாடல் எனக்கு மிகவும் நிறைவாக இருந்தது. எனது நற்பேறு, கடந்த 15 ஆண்டுகளாக, 12வது வகுப்புத் துணைப்பாடத்தில் எனது சிறுகதை ஒன்று பாடமாக இருந்து வருவது. மாணவியர் பெரும்பாலோர் என்னை அறிந்தவர்களாக இருந்தனர்.
வீடு திரும்புகையில் மதுரைப் பெண்கள் கல்லூரி ஒன்றுக்குப் பேசப் போனது என் கவனத்துக்கு வந்தது. அன்றைய கருத்தரங்கில் என்னுடன் பங்கேற்றோர் நண்பர் ஜெயமோகன், பேராசிரியர் அ.ராமசாமி. கருத்தரங்கம் நிகழ நான்கு நாட்கள் இருக்கும்போது, துறைத் தலைவரான பேராசிரியை என்னுடன் பேசினார். ‘கற்பெனப் படுவது’ என்று அப்போது வெளியாகி இருந்த என் கட்டுரையை அவர் வாசித்திருந்தார்.
‘‘சார்! இது பெண்கள் கல்லூரி. உங்க கட்டுரை வாசிச்சேன்... கொஞ்சம் பயமா இருக்குங்க!’’‘‘பயமா இருந்தா கேன்சல் பண்ணிருங்கம்மா... ஆனா ஒரு விஷயம்! நானும் பொம்பளைப் பிள்ளை பெத்தவன். பொறுப்பில்லாம பேச மாட்டேன்!’’அஃதோர் கிறிஸ்தவக் கல்லூரி. அன்று கலந்துரையாடலின்போது ஒரு மாணவி எழுந்து கேட்டாள், ‘‘ஐயா! கற்பு என்றால் என்ன?’’நான் பேராசிரியை முகத்தைப் பார்த்தேன், ‘பதில் சொல்லவா... வேண்டாமா?’ என்பது போல. அவர் அனுமதியுடன் பதில் சொன்னேன். இன்னொரு மாணவி கேட்டாள், ‘‘ஐயா! குடிப்பது சரியா, தவறா?’’ நான் மதுப்பழக்கம் பற்றி மூன்று கட்டுரைகள் எழுதியவன்.
பரவலாக வாசிக்கப்பட்ட கட்டுரைகள் அவை. அவற்றுள் ஒன்று கள் பற்றியது. கள் வேண்டுவோர் சங்கத்தால் அந்தக் கட்டுரை 10 ஆயிரம் படிகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது.என்ன சொல்ல வருகிறேன் என்றால், மாணவரின் அமைதியைப் பார்த்து அவர்கள் மந்தமாக இருக்கிறார்கள் என்று எண்ணிவிடலாகாது. அவர்கள் நம்மைச் சுற்றி நடப்பன எல்லாம் கூர்மையாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
புதிய திரைப்பட இயக்குநர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார், ‘‘சார், என்ன குப்பைப் படம்னாலும் கல்லூரி மாணவர்கள் அதை ஒரு வாரம் ஓட்டிடுவாங்க!’’ என்று. கல்லூரி மாணவ மாணவர் பற்றி, குப்பைப் படம் எடுப்பவர்களின் மதிப்பீடு என்னைக் கவலைகொள்ளச் செய்தது. போன மாதம் ஒரு பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவருக்கான தொடக்க விழாவில் பேசும்போது கேட்டேன், ‘‘ஏம்பா... நீங்களெல்லாரும் குப்பைத் திரைப்படத்தை ஒரு வாரமாவது ஓட்டுவது என்று ஏதும் சபதம் எடுத்திருக்கிறீர்களா?’’ என்று. மாணவரின் ஆரவாரம் என்னை பலம் கொள்ளச் செய்தது.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, 1966ம் ஆண்டு, குதிகாலில் பிரம்படி வாங்கியது என் நினைவில் உண்டு. அது போன்ற மாணவர் எழுச்சியைத் தமிழ்நாடு அதற்குப் பிறகு சந்தித்ததில்லை. இந்திய அரசின் ஆதரவுடனும் அரசியல் நாடகங்களுடனும் நடந்த ஈழப்படுகொலையின்போதும் அவர்கள் மௌனமே காத்தனர். மாணவர் மீது எனக்கொரு மனத்தாங்கலும் இருந்தது. பின்பெனக்குத் தோன்றியது நமது அரசியல் முதலீட்டாளர்களிடம் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது. அதையோர் நல்ல குறிப்பாகப் பார்க்கிறேன்.
சென்ற ஆண்டில், தீபாவளிக்கு முன்பு, சென்னை தாம்பரத்தில் இருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவ கிளாரெட் திருச்சபை, தாம்பரத்தைச் சுற்றி இருக்கும் எட்டுப் பள்ளிகளில் மாணவருக்கு ஒரு நாள் புத்தகக் கண்காட்சி நடத்தினார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பள்ளி. பள்ளிகளின் அசெம்பிளியின்போது பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் என்னைப் புத்தகங்கள் பற்றிப் பேசப் பணித்திருந்தனர். கிளாரெட் சபையின் இல்லத்திலேயே தங்கியிருந்தேன், அருட்தந்தையரின் அன்பான விருந்தோம்பலும் அர்த்தபூர்வமான உரையாடல்களுமாய்! அதிகமும் பெண்கள் பள்ளிகள். மொத்தம் 19,000 மாணவர்களிடம் உரையாற்றினேன்.
முதல் நாள் பள்ளித் தலைமையாசிரியரும் அருட்சகோதரியுமான அம்மையார் அறையில் அமர்ந்திருந்தேன். பக்கத்தில் இந்த ஏற்பாடுகளுக்குப் பொறுப்பான அருட்தந்தை ஜெயபாலன். தலைமையாசிரியர் ஓரக்கண்ணால் என்னை அலட்சியமாகப் பார்த்துக் கேட்டார், ‘‘ஓ! இவர்தான் பேசப் போறாரா?’’ என்று.
எனக்குச் சற்று திடுக்கிட இருந்தது. அருட்தந்தை என் கை பிடித்து ஆசுவாசப்படுத்தினார். எமது உயர்நிலைப் பள்ளி நாட்களில், மாணவரை மகிழ்விக்க என்று மாஜிக் ஷோ நடத்துபவர், சின்னத் தோதில் சர்க்கஸ் செய்பவர் என்று வருவார்கள். பள்ளி கொஞ்சம் பணம் கொடுக்கும். ஆசிரியர்களும் பணக்கார மாணவரும் நன்கொடைகள் தருவார்கள். அஃதே போல் நினைத்திருப்பார் போலும்.
‘என் பிழைப்பு இப்படி ஆகிப் போனதே’ என்று சங்கடமாக இருந்தது. மேலும் தோன்றியது, ‘அவர்களை விடப் பெரிதாக நாம் என்ன வாழ்ந்து சாதித்துவிட்டோம்’ என்று. ஒரு காலத்தில் நவீன எழுத்தாளர் என்று தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்ட அனைவரும் உச்சரித்துத் திரிந்த ஜார்ஜ் லூயிஸ் ஃபோர்ஹே சொன்னால் என்ன, ஒரு சாதாரண எழுத்தாளன் நாஞ்சில் நாடன் சொன்னால் என்ன, எழுத்தின் முதல் வேலை வாசிப்பவனை சுவாரசியப்படுத்துவதுதானே!
அந்தப் பள்ளி மாணவியருக்கு அன்று உரையாற்றும்போது, என் முன்பாக இரு பள்ளிகளின் ஐந்தாவதுக்கு மேல் படிக்கும் மாணவியர் 3,000 பேர். ஒரு பங்கில் ஆங்கில வழி, மற்றொரு பங்கில் தமிழ் வழி. வரிசையாக, நீள் சதுர வடிவில் நடப்பட்டிருந்த 20 மரங்களின் நிழலில். மாணவரிடம் எப்போதும் பாடப்புத்தங்களுக்கு அப்பால் என்று வலியுறுத்திப் பேசுகிறவன் நான். என் முன்னால் நின்ற மரங்கள், பார்வைக்கு கொடுக்காப்புளி மரங்கள் போலிருந்தன, இலையும் பூவும். ஆனால் காய்களைப் பார்த்தால், சீனிப் புளியங்காய்களாகத் தெரியவில்லை.
எடுத்த எடுப்பில் கேட்டேன், ‘‘நீங்க உட்கார, விளையாட நிழல் தரும் இந்த மரத்தின் பெயர் என்னம்மா?’’ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆசிரியைகளைப் பார்த்தும் கேட்டேன். அவர்களும் அறிந்திலர். பள்ளி முதல்வர், அருட்சகோதரி பக்கம் பார்வையைத் திருப்பினேன். அவர் சற்று சங்கடத்துடன் கை விரித்தார். ‘‘தயவுசெய்து யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பள்ளியில் சேர்ந்த நாளிலிருந்து இந்த மரத்தைப் பார்க்கிறீர்கள்’’ என்றேன். எனக்கு ஒரு கணக்குத் தீர்ந்தது போலவும் இருந்தது. பத்து மாதங்கள் ஆகி விட்டன, இது நடந்து. இன்னும் பெயர் கண்டுபிடித்தார்களா என்று தெரியவில்லை. எதுவாயினும் இந்த நிலைக்கு உறுதியாக, மாணவியர் பொறுப்பல்ல.
பரங்கிமலை பக்கம் ஒரு பள்ளி. ஐந்து முதல் பன்னிரண்டு வரை வாசிக்கும் மாணவியர் 5,500 பேர் கடல் போல் என் முன் அமர்ந்திருந்தனர். பறவைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்ேதன். தேன் சிட்டு, சிட்டுக் குருவி, காகம், குயில், புறா, மைனா எனும் நாகணவாய்ப்புள், செவன் சிஸ்டர்ஸ் எனும் சாம்பல் குருவி, செம்பகம் எனும் செம்போத்து, கிளி, வால் நீண்ட கருங்குருவி, கொக்கு, செங்கால் நாரை, பருந்து எனும் கருடன், கூகை எனும் ஆந்தை, குயில், நீர்க்காகம், ஆலா, இருவாய்ச்சி, கழுகு என.
முதல் வரிசையில் இருந்து சடாரென ஒரு மாணவி எழுந்து, ‘‘ஐயா! பருந்து வேறு கழுகு வேறா?’’ என்றார். எனக்குப் பெருமிதமாக இருந்தது. மதர் சுப்பீரியர் அப்பள்ளி முதல்வர். இன்முகத்துடன் மாணவியை அமரச் சொன்னார். நான் ஆழ்வார்கள் பாடிய செந்தலைக் கருடனையும், காளமேகம் பாடிய பெருமாளைத் தூக்கிப் போன பருந்தையும் சொன்னேன். கம்பராமாயணக் கதாமாந்தர்களான, சூரியனை நோக்கிப் பறந்த அண்ணன் தம்பிக் கழுகுகளான சம்பாதி, சடாயு பற்றிச் சொன்னேன். ரிச்சர்ட் பா எழுதிய, 50 லட்சம் பிரதிகள் விற்ற, ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல் எனும் கடற்பறவை பற்றியும் உற்சாகமாகச் சொன்னேன். அனைத்துப் பள்ளிகளிலும் என்னுடனேயே இருந்த ஃபாதர் ஜெயபாலனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
கன்னிகையர் மடத்தில் மதிய உணவு உண்டதும் மதர் சுப்பீரியர் கேட்டார், ‘‘எங்க டீச்சர்சுக்கு அரை மணி நேரம் பேச முடியுமா?’’ என்று. நம் கடன் பணி செய்து கிடப்பதுதானே!சென்ற கிழமை, சென்னை வள்ளலார் நற்பணி மன்றத்தின் பொன் விழா ஆண்டுக் கொண்டாட்டத்துக்காக, பள்ளி - கல்லூரி மாணவரிடையே பேச்சுப் போட்டி நடத்தினார்கள். தமிழ்நாட்டை எட்டு மண்டலங்களாகப் பிரித்து நடந்த போட்டிகளில் கோவை மண்டலத்தில் கல்லூரி அளவில் 128 மாணவர் பங்கேற்றனர். கோவை, Dr. NGP கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. கவிஞர் சிற்பி, மரபின் மைந்தன் ஆகியோர் பொறுப்பாளர்கள்.
மூன்று குழுக்களாகப் பிரித்து நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் ஒரு குழுவுக்கு நானும் நடுவராக இருந்தேன். மறுபடி இறுதிச் சுற்றுக்கு வந்த பத்து மாணவருக்கு இடையே நடந்த போட்டியிலும் நடுவராக. காலை 11 மணி முதல் மாலை ஆறு மணி வரை மாணவ, மாணவியர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அலுப்பாக இல்லை. அவர்களின் பேச்சுத்திறன் பற்றியும் பொது அறிவு பற்றியும் வாசிப்பு அனுபவம் பற்றியும் எனக்குப் பெருமிதம்.
ஒரு மாணவி கேட்டார், ‘‘விவேகானந்தர் நூறு இளைஞர்களைக் கேட்டார், இந்த தேசத்தைச் செம்மைப்படுத்திக் காட்ட! நாங்கள் இன்று கோடிப் பேர் இருக்கிறோம், உங்களிடையே ஒரு விவேகானந்தரைக் காட்டுங்கள்’’ என்று. மிகச் சரியான கேள்வி. என் கேள்வியும் அதுதான். இன்று, இளைஞர்கள் நம்பிப் பின்தொடர்ந்து போவதற்கு நம்மிடையே தலைவர் உண்டா? பிள்ளை பிடிப்பவர்கள்தானே தலைவர் போலத் தோற்றம் தருகிறார்கள்! இதை மாணவர் அறிந்திருக்கிறார்கள் என்பதே பெருமிதத்தின் காரணம்!
நான் நினைத்திருந்ததைப் போல, அவர்களின் அரசியல் சமூக உணர்வுகள் மந்தமாக இல்லை. உறங்கும் எரிமலையாகவே தோன்றியது. இன்னொரு மாணவி பேசினார், ‘‘நம் நாட்டில் கழிப்பறையின் உள்ளே போகக் காசு, வெளியே போனால் இலவசம். ஆனால் வெளிநாடுகளில் உள்ளே போக இலவசம், வெளியே போனால் காசு கொடுக்க வேண்டும், அபராதமாக’’ என்று.
அண்மையில் கோவை அரசு கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் கனகராஜ் அவர்கள் கட்டணமின்றி நடத்தும் ஆட்சிப் பணி தேர்வுக்கான பயிற்சி மையத்துக்குப் போயிருந்தேன். 375 பயிற்சி பெறும் மாணவருக்கு ஒரு மணி நேரம் உரையாற்றினேன். உண்மையில் எனக்குப் பெரிய நம்பிக்கை ஏற்பட்டது, அவர்களைக் காண. எதிர்காலத்தில் அவர்களில் பலர் I.A.S., I.F.S., I.P.S., I.R.S., I.R.&R.S. மற்றும் முதல் பிரிவு அதிகாரிகளாக வருவார்கள். அவர்களின் முகத்தில் ஆர்வமும் தீவிரமும் தெரிந்தது. ஏற்கனவே உயரதிகாரிகளாக இருந்த, இருக்கும் மலை விழுங்கிய மகாபுருஷர்கள் செய்த தீமைகளைத் தீர்த்து தேசத்தைச் சுத்தம் செய்வார்கள் என்றும் தோன்றியது.
நமது மாணவரில் சிலர் புகை பிடிக்கலாம், சிலர் மது அருந்தலாம், மாணவியரைக் கலாட்டா செய்யலாம், சினிமா பித்துப் பிடித்து அலையலாம், செல்போனில் ஆபாசப் படங்கள் பார்க்கலாம். ஆனால் அந்தச் சிலர் பலராக மாட்டார்கள். எப்போதும் அவர்கள் சிலர்தான். அந்தச் சிலரைத் தாண்டி, இளைய மாணவ மாணவியர் நம் தேசத்தின் வீரப் படை. இப்படை பற்றி நாம் செருக்குக் கொள்ளலாம்.
திருக்குறளில் ‘படைச்செருக்கு’ என்றொரு அதிகாரம் உண்டு. அதில் முதல் குறள்: ‘என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கல்நின் றவர்’. விரித்துப் பொருள் சொன்னால், ‘பகைவர்களே! என் தலைவன் முன்னால் போருக்கு நின்று இன்று நடுகற்களாகச் சமைந்து நின்றவர் பலர். எனவே, என் தலைவன் முன்னால் நிற்காதீர்கள்’. இன்றைய இளைய மாணவ சமூகம் உணர்ந்து எனக்கு இதுவே சொல்லத் தோன்றுகிறது.அரசியல் கோஷமாக, சாயம் வெளிறிய கூச்சல் ஒன்றுண்டு நம்மிடம். ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?’ என்றும், ‘இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?’ என்றும். உண்மையில் இன்றைய மாணவர்களுக்கு அது மிகச் சரியாகப் பொருந்தும்.
‘‘பயமா இருந்தா கேன்சல் பண்ணிருங்கம்மா... ஆனா ஒரு விஷயம்! நானும் பொம்பளைப் பிள்ளை பெத்தவன். பொறுப்பில்லாம பேச மாட்டேன்!’’
ஒரு மாணவி கேட்டார், ‘‘விவேகானந்தர் நூறு இளைஞர்களைக் கேட்டார், இந்த தேசத்தைச் செம்மைப்படுத்திக் காட்ட! நாங்கள் இன்று கோடிப் பேர் இருக்கிறோம். உங்களிடையே ஒரு விவேகானந்தரைக் காட்டுங்கள்’’ என்று.
‘‘நம் நாட்டில் கழிப்பறையின் உள்ளே போகக் காசு, வெளியே போனால் இலவசம். ஆனால் வெளிநாடுகளில் உள்ளே போக இலவசம், வெளியே போனால் காசு கொடுக்க வேண்டும், அபராதமாக!’’
- கற்போம்...
நாஞ்சில் நாடன்
ஓவியம்: மருது
|