லக்ஷ்மி நரசிம்ம விஜயராஜ கோபால சேஷாத்ரி சர்மா ராஜேஷ் ராமன் யார்னு தெரியுமா?



‘‘நடிகர்கள் பாட ஆரம்பிச்சிட்டாங்க... ஸோ, பாடகர்கள் நாங்க நடிக்க வந்துட்டோம்!’’ - ஜாலியும் கேலியுமாக கோரஸ் பேசுகிறது அந்த கலர்ஃபுல் டீம்!  நாசர், மனோபாலா, பிரசன்னா மற்றும் பாடகர்கள் டீமுடன் கார்த்திக் ராஜா முதன்முதலாக இசையமைக்கும் மேடை நாடகம், ‘பட்டணத்தில் பூதம்’. சென்னை மியூசிக் அகாடமியில் வருகிற 18, 19, 20 தேதிகளில் மிரட்ட இருக்கிறது பூதம்.

பாடகர்கள் ராகுல்நம்பியார், பிளாஸே, பிரஷாந்த், ஸ்வேதா, ஜிதேஷ், ஹரீஷ், நாசரின் மகன் லுத்புதீன் பாஷா, சின்மயி, நந்தினி ரவீந்திரன் என இசையும் இளமையுமாக டிராமா ரிகர்ஸலில் பரபரக்கிறது சின்மயி வீடு! சட்டென்று ஏரியா அமைதியாக, எக்ஸாம் ஹால் சூப்பர்வைஸர்ஸ் போல மிடுக்காக வந்து நிற்கிறார்கள் கார்த்திக் ராஜாவும், மனோபாலாவும்! ‘‘என்னோட முதல் முயற்சி இது. ரொம்ப நாளா மேடை நாடகத்துக்கு மியூசிக் பண்ணணும்னு ஒரு ஆர்வம். ஒரு ஹாரர் டிராமாதான் முதல் சாய்ஸா இருந்துச்சு. இப்ப காமெடி ரூட்டுக்கு மாறிட்டோம்!’’ எனத் துவங்குகிறார் கார்த்திக் ராஜா.

‘‘ ‘பட்டணத்தில் பூதம்’ ரொம்பவே வித்தியாசமான முயற்சி. குழந்தைகளுக்கான மியூசிக்கல் ப்ளே இது. ஆக்‌ஷன், காமெடி, மேஜிக்னு குழந்தைகளுக்குப் பிடிக்கற மாதிரி நிறைய விஷயங்கள் பண்றோம். மனோபாலா சார்கிட்ட நான் ‘நடிக்கிறீங்களா?’னு கேட்டதுமே ஓகே  சொல்லிட்டார். நாசர் சாரும் அதே மாதிரிதான், அவரோட ‘தேவதை’, ‘அவதாரம்’ படங்கள்ல நான் வொர்க் பண்ணியிருக்கேன். எங்க அப்பா மேல இருக்கற அன்பினால் இவங்க எனக்கு ஃபுல் சப்போர்ட்ல இறங்கிட்டாங்க. டால்பி ஒலியமைப்பில், லைவ் ஆர்க்கெஸ்ட்ராவா இதைப் பண்ணப்போறோம்.

‘சீனிகம்’ உள்பட பல படங்கள் பண்ணின தபஸ் நாயக் டால்பி சவுண்ட்ஸை கவனிக்கறார். வாசுகி பாஸ்கர் காஸ்ட்யூம், சுரேஷ் டான்ஸ், ஸ்டன்ட்ஸ் தினேஷ்னு பெரிய டீமா இறங்கியிருக்கோம்!’’ என்கிறார் கார்த்திக்ராஜா. பெரும்பாலும் இது இசை சார்ந்த நாடகம் என்பதால் குறிப்பிட்ட பெரிய ஆர்ட்டிஸ்டுகள் தவிர மற்ற நடிகர்கள் எல்லாம் பெரும்பாலும் பாடகர்கள். ‘‘பொதுவா நான் பாடகர்கள்கிட்ட ரொம்ப ஃப்ரெண்ட்லியா பழகுவேன். அவங்கதான் என் நட்பு. அதனாலதான் அவங்களையே நடிக்க வச்சிட்டேன்’’ என இதற்கு விளக்கம் தருகிறார் கார்த்திக்.

‘‘சின்ன வயசில ஸ்டேஜ் ப்ளே பண்ணியிருக்கேன், கிளாசிக்கல் டான்ஸ் ஆடியிருக்கேன். பாடுறது, டப்பிங் பேசுறது தவிர நடிக்கிறது இதான் முதல் முறை. தேங்க்ஸ் டு கார்த்திக் ராஜா சார்!’’ என்கிறார் சின்மயி. ராப் ஸ்பெஷலிஸ்ட் பிளாஸே கூட இந்த நாடகத்தில் நடிக்கிறாராம், அதுவும் முக்கியமான ரோலில்!
‘‘நான் ஆப்ரிக்காவில பொறந்து இந்தியாவில வளர்ந்தவன். என் முழுப்பேரே லக்ஷ்மி நரசிம்ம விஜயராஜகோபால சேஷாத்ரி சர்மா ராஜேஷ்ராமன்... இதச் சொல்லி பழக்கப்பட்டதால தமிழ் டயலாக் சொல்றது கஷ்டமா தெரியல!’’ என ஜாலியாகிறார் மனிதர். உண்மையில் தமிழ் வசனங்களை பேச பிளாஸே செய்து வரும் கடின உழைப்புக்கு அந்த டீமே சான்றிதழ் தருகிறது.

‘‘நடிகர்களுக்கும் சிங்கர்களுக்கும் நடுவில் ஒரு ஹீரோ இருக்கார் பாருங்க!’’ என பில்டப் கொடுத்து அனைவரும் அறிமுகப்படுத்துவது ஜித்தேஷை. ‘தலக்கோணம்’ உள்பட சில படங்களின் ஹீரோ என்பதைத் தாண்டி பைலட் டிரெயினிங் முடித்திருப்பவர் என்பதே ஜிதேஷ் ப்ரொஃபைலின் ஹைலைட்.

பாடகர்தான் என்றாலும் ராகுல் நம்பியாருக்கு மொத்த சினிமாவிலும் ஆர்வம் அதிகம். சமீபத்தில் இசை, தயாரிப்பு, வீடியோ எடிட்டிங் என ஆல்ரவுண்டராக அவர் கலக்கியிருக்கும் ஆல்பத்தின் பெயர் ‘குப்பை’. ‘‘பார்க்க நீங்க நடிகர் ஜெயராம் தம்பி மாதிரியே இருக்கீங்க!’’ என நாசர் மகன் லுத்புதீன் சொல்ல, அதை ஆமோதித்தவராக சிரிக்கிறார் ராகுல். பெண்களைப் பற்றி சொல்லாட்டா எப்படி? எம்.எஸ்சி விஸ்காம் படித்திருக்கிறார் நந்தினி ரவீந்திரன். ‘‘இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சது, என்னோட அதிர்ஷ்டம்’’ என சிலிர்க்கிறார் அவர். ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்த ஸ்வேதாவை, இந்த டிராமாவிற்கு அழைத்து வந்தவர் லுத்புதீன். ‘‘அவங்க இன்னிக்கு ஊர்ல இல்லாததால ரிகர்சல் வரலை!’’ என்கிறார் சீரியஸாக!

‘புலி’யில் ஒரு பாடல் பாடியிருக்கும் சின்மயி, தெலுங்கில் சமந்தாவிற்கு தொடர்ந்து டப்பிங் பேசி வருகிறார். ‘‘கார்த்திக் ராஜா சார் மேல எனக்கொரு தனி மரியாதை எப்பவும் உண்டு. அவரோட ஆல்பம் வொர்க்  எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோட மியூசிக்ஸ் இன்னும் நிறைய வரும்னு  எதிர்பார்த்த ரசிகைகளில் நானும் ஒருத்தி. கார்த்திக் சாரோட இந்த முயற்சியில  நானும் இருக்கேன்ங்கிறதே பெருமை!’’ என சின்மயி சொல்ல, ‘‘துணிஞ்சு இறங்கிட்டோம்... கார்த்திக் ராஜா சார்தான் எங்களை எல்லாம் காப்பாத்தணும்!’’ - என டைமிங் அடிக்கிறார் மனோபாலா.

‘‘நாங்கல்லாம் நடிச்சுப் பழகின சீனியர்ஸ்... ஒருவேளை எங்களை விட இவங்க கைதட்டலை அதிகம் வாங்கிட்டுப் போயிட்டா..? அந்த பயம்தான் எங்களுக்கு. அது மட்டுமில்லாம, என்னையும்  மேடையில பாட வைக்கிற ஐடியாவில  இருக்கார் கார்த்திக்!’’ என கிலியைப் பரப்புகிறார் மனோபாலா. ‘‘நாசர் சாரையும் பாட வைக்கற ப்ளான் இருக்கு!’’ என கார்த்திக்ராஜா சிரிக்க, ‘நெஞ்சுக்குள் பாய்ந்திடும் மாமழை’ ட்யூனை கிடாரில் இசைத்து அதை வரவேற்கிறார் லுத்புதீன்!

- மை.பாரதிராஜா
படங்கள்: புதூர் சரவணன்