வெற்றி



தொழிலதிபர் சிவக்கொழுந்துவுக்கு போன் கால்கள் வந்த வண்ணம் இருந்தன. நாட்டின் சிறந்த தொழிலதிபர் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. நான்கு பேரோடு ஆரம்பித்த கம்பெனி... இன்று நாடெங்கும் ஏராளமான கிளைகள். பாக்கி இல்லாமல், ஏமாற்றாமல் வரி செலுத்துவதில், இவருடைய நிறுவனம் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறது.

பரிசு வழங்கும் விழாவுக்கு முந்தைய தினம்... டெல்லி செல்ல ஏர்போர்ட்டுக்குக் கிளம்பினார் சிவக்கொழுந்து. வழியில் தன் சொந்த கிராமத்தை நோக்கி காரைத் திருப்பச் சொன்னவர், அங்கே ஒரு இடுகாட்டின் முன் நிறுத்தச் சொன்னார். இறங்கி ஒரு கல்லறையைத் தேடி அதன் முன் நின்றவர், ‘‘வெற்றியைப் போல் மிகப்பெரிய தோல்வி எதுவுமில்லை’’ என்று மூன்று முறை சத்தமாகச் சொல்லிவிட்டு வணங்கி, திரும்பினார்.
கார் டிரைவருக்கு ஆச்சரியம்.

‘‘இதெல்லாம் என்னங்கய்யா? ஒண்ணுமே புரியலையே!’’ என்றான் வழியில்.‘‘தம்பி, மிகப்பெரிய வெற்றி வந்தா, நாம கூப்பிடாமலே அகந்தையும், அலட்சியமும் கூட வந்து ஒட்டிக்கும். அது ஒட்டிக்கிட்டா, ெதாழில் தானாவே நசிஞ்சிடும்... அப்புறம் தோல்விதானே? அதனால, மிகப்பெரிய வெற்றி வரும்போதெல்லாம் என் அப்பாவின் கல்லறை மேல எழுதியிருக்குற இந்த வாக்கியத்தைப் படிச்சு உறுதிமொழி எடுத்துக்குவேன். தொழில்ல நிலைக்கணும் இல்லையா?’’ என்றார் சிவக்கொழுந்து.                                                         

கே.அசோகன்