இலக்கியத் தலைநகர் கோவில்பட்டி!
நினைவுகள் பேசும் ஆவணப்படம்
‘‘ஒரு நேரத்துல தமிழ்நாட்டுல எந்தப் புத்தகம் வெளிவந்தாலும், ‘கோவில்பட்டியில படிக்கக் கொடுத்து வாங்குங்கப்பா’னு சொல்லுவாங்க. ஐ.எஸ்.ஐ முத்திரை மாதிரி இலக்கியம் முதல்ல இங்க பாஸாகி போகணும். அந்தளவுக்கு இலக்கியத்தோட மையமா விளங்கிச்சு கோவில்பட்டி. இந்த சின்ன ஊர்ல இவ்வளவு இலக்கியவாதிகள் எப்படி உருவானாங்கன்னு தெரியல.
இந்தக் கேள்விய வச்சே, `முன்னொரு காலத்திலே...’ன்னு ஒரு பயோகிராபி நூலை 2010ல் வெளியிட்ேடன். இப்போ, அதையே டாகுமென்ட்ரியா எடுக்குறேன்!’’ - நெகிழ்ச்சியும் உற்சாகமுமாக பேசுகிறார் எழுத்தாளர் உதயசங்கர். ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றும் இவர், இப்போது ஆவணப்பட இயக்குநர்.
கோவில்பட்டி எழுத்தாளர்களான பூமணி, தேவதச்சன், கௌரிசங்கர், சோ.தர்மன், ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, நாறும்பூநாதன், வித்யாசங்கர், அப்பணசாமி, மாரீஸ், எம்.எஸ்.சண்முகம், முருகபூபதி ஆகியோருடன் உதயசங்கரும் இந்த ஆவணப்படத்தில் அடங்குகின்றார். ‘‘மொத்தம் 13 எழுத்தாளர்கள்... ஒவ்ெவாருத்தரைப் பத்தியும் தனித்தனியா ஒரு டாக்குமென்ட்ரி.
அடுத்து, எங்களுக்கெல்லாம் வழிகாட்டிய கி.ராவைப் பத்தி ஒரு படம். கடைசியா, கோவில்பட்டி நகரம் எப்படி கரிசல் இலக்கியத்தோட மையமா உருவாச்சுங்கிறது பத்தி ஒரு படம்னு பதினைஞ்சு ஆவணப்படங்கள கடந்த ஒரு வருஷமா ரெடி பண்ணிட்டு இருக்கேன். ஓவியர் மாரீஸின் மகன் சசிஹரன் ஒளிப்பதிவு பண்றார். இன்னும் ஆறு மாசம்... டாக்குமென்ட்ரி முடிஞ்சதும் சென்னை அல்லது கோவில்பட்டியில வெளியிடலாம்னு இருக்கோம்!’’ என உற்சாகம் கூட்டும் உதயசங்கர், தன் காலத்தில் கோவில்பட்டியில் நிலவிய இலக்கியச் சூழல் பற்றியும் சிலாகிக்கிறார்.
‘‘அப்ேபா, கி.ரா இடைசெவல்ல இருந்து கோவில்பட்டிக்கு வேலை நிமித்தமா வாரா வாரம் வருவார். அவர் வந்ததும் மாரீஸ் ஒவ்வொருத்தர் வீடா வந்து சொல்லிட்டுப் போவார். எல்லாரும் சேர்ந்து பேச ஆரம்பிப்போம். நேரம் போறதே தெரியாது. அப்புறம், சென்னைக்கு அடுத்தபடியா கோவில்பட்டிதான் தெரு நாடகத்தை முன்னெடுத்த நகரம். `தர்ஷணா’ன்னு ஒரு நாடகக்குழு வச்சிருந்தோம். கி.ரா தலைமையில ஊர் ஊரா போய் நாடகம் போட்டிருக்கோம். அதுக்கான கருவை தேவதச்சன் கொடுப்பார். நடிகர் சார்லி கோவில்பட்டிக்காரர். எங்க நண்பர். அவரும் நாடகத்துல நடிச்சிருக்கார்.
பிகாசோவுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடிய ஒரே ஊர் கோவில்பட்டி! இந்த மாதிரியான ஞாபக பொக்கிஷங்களும் இந்த டாக்குமென்ட்ரில வருது. அடுத்து, இந்த ஊர்ல கவிஞர் சமயவேல், க்ருஷி, யுவன் சந்திரசேகர் எல்லாம் பல வருஷங்கள் வேலை பார்த்திருக்காங்க. இப்பவும், விக்ரமாதித்யன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவங்க அடிக்கடி வந்துட்டு போவாங்க. அவங்களும் மற்ற எழுத்தாளர்கள பத்தி இதுல பேசுறாங்க. சுருக்கமா, வருங்கால சந்ததிகளுக்கு கோவில்பட்டி எழுத்தாளுமைகளைப் பத்தி அறிமுகப்படுத்துற ஒரு பதிவுன்னு இந்த டாகுமென்ட்ரிய சொல்லலாம்!’’ என்கிறார் உதயசங்கர்.
இந்த ஆவணப்படத்தின் சாம்பிளாக சில நினைவுகளை அடுக்குகிறார் எழுத்தாளர் பூமணி: ‘‘எங்களுக்கெல்லாம் ஆதர்சம் எழுத்தாளர் கி.ராதான். இங்கிருந்து திருநெல்வேலி போற வழியில அவரோட ஊர் `இடைசெவல்’ இருக்கு. சின்ன கிராமம்தான். ஆனா, அங்கிருந்து கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன்னு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் ரெண்டு பேர் உருவாகியிருக்காங்கன்னு சொன்னா யாராலும் நம்ப முடியாது. அந்த ஆளுமைகள் போட்ட பாதைதான் இது. நான் 1972-76 காலகட்டத்தில் கோவில்பட்டியில இருந்தேன்.
அப்போ நான், தேவதச்சன், பிரதீபன் என்கிற பாலு, கௌரிசங்கர் எல்லாரும் செண்பகவல்லி அம்மன் கோயில் பின்புறமுள்ள காந்தி மைதானத்துல இலக்கியம் பேசுவோம். சாயங்காலம் ஆறு மணிக்கு பேச ஆரம்பிச்சா மறுநாள் காலையில விடியும்போதுதான் வீட்டுக்குக் கிளம்புவோம். இந்த நேரத்துலதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டியில வளர்ந்துச்சு. அதுல, செயலாளரா இருந்த எஸ்.எஸ்.தியாகராஜன் எங்களுக்கு ரஷ்ய நாவல்கள் எல்லாம் படிக்கக் கொடுத்தார். அவர்கூட ஆர்.நல்லகண்ணுவும் அடிக்கடி வருவார். எல்லோருமே வெளிப்படையாவும், நுட்பமாவும் விவாதிப்பாங்க. அதெல்லாம் ஒரு காலம்’’ என்கிறார் அவர் நெகிழ்வாக.
‘‘1970கள்ல கோவில்பட்டியின் விவாத சூழலே வேற! நாங்க, ஆழமான, முரண்பட்ட விவாதங்களுக்கு உட்படுவோம். அதே நேரத்துல, ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியான பயணமும் இருந்துச்சு. அப்போ, கல்லூரியில கே.ராஜகோபால்னு எனக்கு ஒரு பேராசிரியர் இருந்தார். அவர்தான் `எழுத்து’ பத்திரிகையை படிக்க கொடுத்தார். என் வழியா எல்லாரும் அதை வாசிச்சாங்க. நவீனத்துவத்தோட சாறு எங்களுக்குக் கிடைச்சது. அதற்கடுத்து ‘கசடதபற’ பத்திரிகை எங்க எல்லாருக்கும் எழுத இடம் கொடுத்துச்சு. அதுக்கு மாற்றா, வானம்பாடியும், முற்போக்கு எழுத்துகளுக்கு எதிர்வினை ஆற்றுச்சு. இப்படியே, எங்களோட சிந்தனைகளை விரிச்சோம்!’’ என்கிறார் தேவதச்சன் அழகியலோடு.
‘‘அப்போ ஓவியர் மாரீஸ் `கரிசல்’னு கையெழுத்துப் பிரதி கொண்டு வந்தார். அதுல, இங்கிருந்த எல்லா எழுத்தாளர்களும் எழுதினாங்க. சில நாட்கள்ல கி.ராவைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போவோம். அங்க, சுப்பராயலுனு கி.ராவோட பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் இருந்தார். பெரிய இலக்கிய வாசிப்பு உடையவர். எங்களுக்கு நிறைய புத்தகங்கள் கொடுப்பார். இங்க, இலக்கிய அமைப்புன்னு எதுவுமே கிடையாது. நாங்க `தர்ஷணா’ அமைப்பு மூலமா யாரும் பார்க்க முடியாத, உலக அளவுல விருது வாங்கின திரைப்படங்களை தியேட்டர்ல போட்டோம். கௌரிசங்கர்தான் எல்லாரையும் ஒருங்கிணைச்சார்.
அப்புறம், இதன்வழியா, நிஜ நாடகங்களை நடத்தினோம். இந்த மாதிரியான விஷயங்கள்தான் இங்க அதிக எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உருவாக்கிச்சு. ஒரு கட்டத்துல எல்லோரும் வேலை விஷயமா வெளியூர் போயிட்டாங்க. இப்போ, உள்ளூர்ல இருக்கிறவங்க மட்டும் அப்பப்போ சந்திச்சு பேசிக்கிறோம்!’’ என்கிறார் சோ.தர்மன் பழைய நினைவுகளில் மூழ்கியபடி!
- பேராச்சி கண்ணன்
|