சில்லறை



வீட்டிலிருந்து சிறிது தூரம் வந்த பிறகுதான் சில்லறை எடுக்காமல் வந்து விட்டது ஞாபகம் வந்தது. புதன் கிழமை. அலுவலகம் போக வேண்டிய பேருந்தில் ‘சில்லறை இல்லை’ சிதம்பரம்தான் பணியில் இருப்பான். டிக்கெட் ஆறு ரூபாய்தான். பத்து ரூபாய் தாளை நீட்டினால் மீதி சில்லறை தர மாட்டான்.

வற்புறுத்திக் கேட்டால்  தோள்(ல்) பையைத் திறந்து காட்டி, ‘‘அட இன்னா சார் நம்ப மாட்டேன்றீங்க...’’ என்பான். விடாப்பிடியாக கேட்பவர்களைக் கூட இறக்கி விடுவானே தவிர சில்லறை கொடுத்ததில்லை. அன்று எனக்கு நாலு ரூபாய் காலி. எப்படியும் ட்ரிப்பிற்கு இருபது, முப்பது இப்படியே பார்த்து விடுவான். ஒரு நாளைக்கு இருநூறு ரூபாயாவது தேறும்.

மறுநாள் விடுமுறை. நண்பர் ஒருவரைப் பார்த்துவிட்டுத் திரும்பியபோது ஓரிடத்தில் கூட்டமாக பள்ளிக் குழந்தைகள். நடுவில் சிதம்பரம் நின்று நோட்டு, புத்தகம், பேனா என்று கொடுத்துக் கொண்டிருந்தான்.அருகில் போனேன்.

“ஏதோ நம்மாலே முடிஞ்சது சார். எல்லாம் உங்களை மாதிரி நல்லவங்க உதவியோடதான் முடியுது’’ என்றான். குழந்தைகள் கலைந்து போனார்கள். நானும்தான். மறுநாள் வேண்டுமென்றே சில்லறை எடுக்காமல் கிளம்பினேன். ‘சில்லறை இல்லை’ சிதம்பரத்தை எதிர்நோக்கி!   
                                               

சுப்ரா