கவிதைக்காரர்கள் வீதி



*கடைசிப் பேருந்துக்குப்
பின்னால்
தலைதெறிக்க
ஓடி வந்தவனுக்குக்
காத்திருக்கின்றன,
முதல் பேருந்தும்
உலகின் மிக நீளமான
ஒரு இரவும்

*கதைப்புத்தகத்தின் பக்கத்தில்
சிங்கம் துரத்திக்கொண்டோடும்
மான் குட்டிக்கு
கூடுதலாக இரண்டு கால்கள்
வரைகிறது குழந்தை

*எதை வரைந்தாலும்
அதன் கீழ்
நான்கு இதழ்கள் கொண்ட
பூ ஒன்றை
வரைந்து விடுவது
அவளின் வழக்கம்.
கடவுள் படம் வரைந்தபோது
அது ஆராதனையானது
காந்தி படம் ஒன்றை
அவள் வரைந்தபோது
அஞ்சலியானது
எனது படத்தை
அவள் வரைந்தபோது
நான்கு இதழ்களையும்
குவித்து இட்ட
இனிப்பான முத்தமானது

*எப்போதும் பிரார்த்திக்க
கற்பித்தபடியே
இப்போதும் வேண்டுகிறது
குழந்தை
‘‘சாமி முருகா,
எல்லோரும்
நல்லா இருக்கணும்!’’
தனது யானை முகத்தைக்
கழற்றிவிட்டு
தம்பி முருகன் வேடத்துக்கு
வேக வேகமாக
மாறிக்கொண்டிருந்தார்
விநாயகர்

இரா.பூபாலன்