மிஸ்டர் சாத்தப்பன்!



எங்கேயோ பார்த்த முகம்

கறுப்பு சிவாஜி நந்தகுமார்


வெள்ளையும் சொள்ளையுமாக நெற்றியில் பட்டையோடு ஆலமரத்தடியில் சொம்போடு உட்கார்ந்திருப்பார் நாட்டாமை சாத்தப்பன். ‘‘மைனர் குஞ்சுமணி வள்ளியை கெடுத்துட்டான். வழக்கம் போல பஞ்சாயத்துக்கு ரெண்டாயிரம் ரூபா அபராதத்தை கட்டச் சொல்லிடலாம்...

என்ன சொல்றீங்க?’’ - என்பார் நடிகர் திலகம் மாடுலேஷனில்! தமிழ்நாட்டில் எல்லோருக்குமே இவரை அடையாளம் தெரியும். நந்தகுமார் என்ற ஒரிஜினல் பேர் சொன்னால்தான் ஏற்க முடியாமல் விழிக்கிறார்கள்!‘‘கோடம்பாக்கத்துல கங்கா ஜெராக்ஸ் வந்துட்டு என்னைக் கூப்பிடுங்க!’’ என்கிறார். அடுத்த அரை மணி நேரத்தில் கடை முன்னால் நாம்.

‘‘சார் உங்கள உள்ள கூப்பிடுறாங்க!’’ என ஒருவர் வந்து அழைக்கிறார். கடையினுள்ளே, லேப்டாப் சகிதம் முதலாளி போல உட்கார்ந்திருக்கிறார் நந்தகுமார். ‘‘நண்பரோட கடை இது... என்னோடதுன்னு நெனச்சிடாதீங்க. அப்புறம் என்னை இங்கே வர விடமாட்டாங்க!’’ என்கிறார் முன்னெச்சரிக்கையாக!‘‘தாத்தா காலத்துல எங்க குடும்பம் குடியாத்தத்தில் இருந்திருக்கு. நான் பொறந்து வளந்ததெல்லாம் சென்னை, சிந்தாரிப்பேட்டையிலதான்.

கூடப்பிறந்தவங்க ஒரு அண்ணன், ஒரு அக்கா, ரெண்டு தம்பிங்க. நான் மூணாவது ஆள். எனக்கு ரெண்டு வயசு இருக்கும்போது எங்க ஊருக்கு மகாத்மா காந்தி வந்திருக்கார். என்னைத் தூக்கிக்கிட்டு எங்க அம்மா போயிருந்தாங்களாம். மேடையில காந்தி, அவருக்குப் போட்ட மாலைகளை கூட்டத்துல தூக்கி வீசியிருக்கார். என் மேலயும் ஒரு மாலை விழுந்துச்சு. இதனாலேயே நான் காந்தி மேலயும், காமராஜர் மேலயும் அபிமானத்தோடவே வளர்ந்தேன்.

ஸ்கூல் படிக்கும்போதே சிவாஜி சாரோட தீவிர ரசிகன். அவருக்கு ரசிகர் மன்றமே நடத்தினேன். அவர் பாடி லாங்குவேஜ் எல்லாம் அப்படியே எனக்கு அத்துப்படி. ‘உத்தம புத்திரன்’ படத்தை 300 வாட்டிக்கு மேல பார்த்து ரசித்தவன். அப்போ பத்தாம் வகுப்பு சேரணும்னா என்ட்ரன்ஸ் எக்ஸாம் வைப்பாங்க. நான் பரீட்சை அன்னைக்கு ‘நிச்சய தாம்பூலம்’ படம் பார்க்கப் போயிட்டேன். அன்னிக்கே படிப்பு போச்சு.

நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். ஜெய்கணேஷ், விஜயகுமார், குட்டி பத்மினி, ஜனகராஜ் இவங்கள்லாம் எங்களோட டிராமாவில நடிச்சவங்கதான். நாங்க ஒரே செட்.
 இயக்குநர் எஸ்.பி.முத்துராமனோட  ‘ஒரு கோயில் தீபங்கள்’ படத்துலதான் சின்ன ரோல்ல அறிமுகமானேன். கலைவாணன் கண்ணதாசன் அதில் உதவி இயக்குநர்.

அவர் சரத்குமாரின் சொந்தப் படமான ‘கண் சிமிட்டும் நேரம்’ இயக்கினப்போ, எனக்கு இன்ஸ்பெக்டர் ரோல் கொடுத்தார். சிம்புவோட ‘பெற்றால்தான் பிள்ளையா’, ‘சபாஷ் பாபு’ன்னு சில படங்கள்ல தலை காட்டினேன். ராமராஜனோட ‘தங்கமான ராசா’வில் வினு சக்ரவர்த்தி என்னைக் கொன்னுட்டுதான் ஜெயிலுக்குப் போவார். மம்மூட்டியோட ‘அழகன்’ல ஜெயலட்சுமியோட கணவரா வருவேன். இப்படி அப்பவே 70 படங்கள் பண்ணியிருக்கேன்.

அதுக்கப்புறம் சினிமா வாய்ப்பு எதுவும் வரலை. அப்போதான் ராதிகா மேடத்தை ஒரு ஃபங்ஷன்ல பார்த்தேன். அவங்க எனக்கு ஏதாவது உதவி பண்ணணும்னு நினைச்சுதான் ‘சித்தி’ சீரியல்ல சான்ஸ் கொடுத்தாங்க. அப்புறம் ‘அண்ணாமலை’யில என்னோட கேரக்டர் சாத்தப்பன் பெரிய அளவில் ரீச் ஆச்சு. தொடர்ந்து
‘செல்வி’, ‘செல்லமே’ன்னு சினிமாவில் கிடைக்காத புகழ், எனக்கு சீரியல் மூலம் கிடைச்சது.

கே.சுபாஷோட ‘ஏழையின் சிரிப்பில்’ படத்துலதான் விவேக் சாரோட நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அன்னில இருந்து அவரோட படங்கள்ல எல்லாம் எனக்கு நல்ல கேரக்டர்கள் கொடுத்திட்டு இருக்கார். என்னை அவர் ‘கறுப்பு சிவாஜி’ன்னுதான் கூப்பிடுவார்.  வெளியூர் ஷூட்டிங் போனா, ‘அதோ பாருடா, விவேக்கோட அப்பா...’னு என்னைச் சொல்வாங்க... என்னோட பெயர் நந்தகுமார்னா நம்பவே மாட்டேங்கறாங்க. சாத்தப்பன்தான் செட்டாகுது போல. அந்தக் காமெடி அவ்வளவு பெரிய ரீச்!

சிவாஜி சார், இறக்கறதுக்கு கொஞ்ச நாளுக்கு முன்னாடி அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். மேல மாடியில தனியா இருந்தார். ‘உழைக்கணும்னு நினைக்கறேன்... உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குதுடா...’ன்னு அவர் சொன்னப்போ, குரல் தழுதழுத்தது. ‘நீ நல்லா வருவேடா’ன்னு என்னை ஆசீர்வதிச்சு அனுப்பினார். நான் சீரியல்ல நல்ல பேர் வாங்கி ரீச் ஆனப்போ அதைப் பார்க்கறதுக்குள்ள சிவாஜி சார் மறைஞ்சிட்டாரேன்னு இன்னிக்கும் வருத்தம் இருக்கு.

 அந்தக் காலத்துல சிவாஜி ரசிகர்களா இருந்த யாருமே இப்ப அதைச் சொல்லிக்கறதில்ல. அந்த விதத்துல நான் கமலஹாசனைப் பாராட்டுவேன். இப்பவும் அவர் மேடையில, எழுத்துல, பேட்டியிலன்னு எல்லாத்திலும் ‘நான் சிவாஜி ரசிகன்’னு உரக்கச் சொல்றார். இதுக்காகவே அவருக்கு நான் நன்றி சொல்லிக்கறேன்!எனக்கு கல்யாணமாகி 30 வருஷமாச்சு. என்னோட நடிச்ச லட்சுமி ப்ரியாவே மனைவியானாங்க.

இப்பவும் அவங்க சீரியல்கள்ல நடிக்கிறாங்க. 25 வருஷத்துக்கு முன்னாடி, நான் ஒருத்தர்கிட்ட ஜோஸியம் பார்த்தேன். ‘நீ பெரிய ஹீரோவா வருவே’ன்னு சொன்னார். ஆனா, நான் அப்படி வரவே இல்லை. ஏன் அப்படி வரலைன்னு ஜோதிடத்தை ஆராய்ச்சி பண்ணப் போய், அதை ஆழமா கத்துக்கிட்டேன். வியாபாரமா ஆக்கிடாம பிரபலங்கள் பலருக்கும் வெளியே தெரியாம ஜோசியம் பார்க்குறேன்.

சினிமாவில் மட்டுமில்ல, எந்தத் துறையில் இருந்தாலும் திறமையோட அதிர்ஷ்டமும் சேர்ந்து இருந்தாதான் புகழ்பெற முடியும். வெறும் திறமை ஒண்ணையே வச்சிருந்தா, காலம் பூரா உழைச்சிட்டே இருக்க வேண்டியதுதான். இன்னிக்கும் நான் காமராஜர் அபிமானியா, கதர் சட்டைதான் போட்டுக்கறேன். அவர் மறைஞ்ச பிறகு காங்கிரஸ் கேள்விக்குறியாச்சு... அதோட நானும் கேள்விக்குறியாகிட்டேன்!’’

சினிமாவில் மட்டுமில்ல, எந்தத் துறையில் இருந்தாலும் திறமையோட அதிர்ஷ்டமும் சேர்ந்து இருந்தாதான் புகழ்பெற முடியும்!

- மை.பாரதிராஜா
படங்கள்: ஆர்.சி.எஸ்