நியூஸ் வே



‘அனேகன்’ படத்திற்காக கே.வி.ஆனந்த் கேட்டது அலியா பட் கால்ஷீட்தான். அவரால் அத்தனை நாட்கள் கொடுக்க முடியாததால்தான் அமைரா அமைந்தார். இப்போது அடுத்த படத்திற்கு கால்ஷீட் தருவதாக கே.வி.யிடம் சொல்லியிருக்கிறார் அலியா.

‘மாஸ்’ முடித்த பிறகு சூர்யாவின் அடுத்த படம் ‘24’ஐ ‘யாவரும் நலம்’ விக்ரம்குமார்தான் இயக்குகிறார். இதற்குப் பிறகு வருகிற விஷயம்தான் முக்கியமானது. இதற்கடுத்து ‘சிங்கம் 3’ ஆரம்பமாகிறது. அதே அனுஷ்கா, அதே டீம். ஒன் லைன் சொல்லி ஓகே வாங்கிவிட்டார் ஹரி.

சுனந்தா புஷ்கரின் மர்ம மறைவை வைத்து ஒரு த்ரில்லர் திரைப்படம் எடுக்கும் வேலையில் இறங்கிவிட்டார் ராம் கோபால் வர்மா.

சினிமா படப்பிடிப்பிற்கு கேரவன் வாகனத்தை வாடகைக்கு விடும் உரிமையாளராக ஒரு படத்தில் நடிக்கிறார் கவுண்டமணி. இதன் போட்டோஷூட்டில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார் கவுண்டமணி. ‘‘ஹீரோயின் இல்லாமல் சிங்கிளா போஸ் குடுக்க விடுறீங்களேப்பா’’ என கவுண்டர் அடித்த கமென்ட்டில் செட்டே கலகலத்திருக்கிறது.

சமீபத்தில் சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா மறைந்ததையடுத்து, பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு ஒரு புதிய கௌரவம் கிடைத்திருக்கிறது. 89 வயதாகும் இவர்தான், இப்போது உலக நாடுகளில் ஆட்சி புரியும் மன்னர் பரம்பரையினரில் மிக மூத்தவர்!

மலையாளத்தில் சில்க்கை வைத்து ‘லயனம்’ படத்தை இயக்கிய துளசிதாஸ், இப்போது ஹீரோவே இல்லாமல் ‘இனி வரும் நாட்கள்’ படத்தை இயக்கி வருகிறார். படத்தில் மொத்தம் ஐந்து ஹீரோயின்கள். இனியாவுக்கு இதில் ஆக்ஷன் ரோல். விஜயசாந்தி மாதிரி ஃபைட்டில் பின்னியெடுக்கப் போகிறாராம்.

ஹன்சிகாவைப் போல் பெயின்டிங்கில் ஆர்வம் உள்ளவர் ஸ்ரேயா. ஓய்வு நேரங்களில் எல்லாம் ஓவியங்கள் வரைந்து வருகிறார். அவர் வரைந்த முதல் பெயின்டிங் மும்பையில் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றிருக்கிறது. லேட்டஸ்ட்டாக அவர் வரைந்த பெயின்டிங்கை ஏலம் விட்டதில் ரூ.55 ஆயிரத்திற்கு போயிருக்கிறது. இதை வாங்கி மகிழ்ந்திருப்பவர், வேறு யாருமல்ல... மந்திரா பேடி!

‘பெஸ்ட் நியூ ஏஜ் ஆல்பம்’ பிரிவில் கிராமி விருது வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ரிக்கி கேஜ். உலக இசை வட்டாரத்தில் பெருமைக்குரிய கிராமி விருதைப் பெற்றிருப்பது, இந்த பெங்களூரு இளைஞரின் ‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ ஆல்பம். ‘‘இந்தியாவில் இசை என்பது பணம் பண்ணும் விஷயமாக மட்டுமே இருக்கிறது. காதல் பாடல்களும் அயிட்டம் நம்பர்களும்தான் இங்கே இசை என நினைக்கிறார்கள். மக்களைப் பாதிக்கும் பல பிரச்னைகள் குறித்தும் பாடல்கள் வரவேண்டும். இளைஞர்கள் இதைச் செய்ய வேண்டும்’’ என்கிறார் ரிக்கி.

‘ருத்ரம்மா தேவி’, ‘பாஹுபலி’ படங்களின் ஷூட்டிங் முடிந்த கையோடு சின்னதொரு பிரேக் எடுத்து துபாய் சென்றிருக்கிறார் அனுஷ்கா. அங்கிருந்து இம்மாத இறுதியில் ஐதராபாத் திரும்புகிறார். வந்ததும் தெலுங்கில் புது புரொஜெக்ட் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பை நேரில் ரசித்த இன்ப அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் இருக்கிறார் ‘பயணம்’ பூனம் கவுர். மோடி, ஒபாமா என பொலிடிகல் வி.ஐ.பி.க் களை அருகிலிருந்து பார்த்தது மறக்க முடியாத அனுபவம் எனும் பூனம் கவுர், தமிழில் 2 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

‘ஷமிதாப்’ பார்த்து விட்டு மணிரத்னம் நீளமான எஸ்.எம்.எஸ். ஒன்றை தனுஷுக்கு அனுப்பியிருக்கிறார். அதை நெருங்கிய நண்பர்களுக்கு காட்டிக் காட்டி சந்தோஷப்படுகிறார் தனுஷ்.

எளிமையான மனிதராக எப்போதும் இருப்பவர், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர். இந்த எளிமைதான் இப்போது பிரச்னை. இந்திய ராணுவம் சார்பில் கொடுக்கப்படும் விருந்துகள், அணிவகுப்பு நிகழ்ச்சிகள், நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்தும் சடங்குகள் போன்றவற்றுக்கு ஷூ அணிந்து செல்வது கட்டாயம். அமைச்சரோ எப்போதும் செருப்பு அணிகிறார். இதனால் சங்கடமாகும் ராணுவ அதிகாரிகள், ஷூ அணியுமாறு அமைச்சரை வற்புறுத்தி வருகிறார்கள்.

‘வழக்கு எண்’ மனிஷா யாதவ் இப்போது டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘குப்பைக்கதை’யில் நடிக்கிறார். விதார்த்துடன் நடித்துள்ள ‘பட்டையக் கௌப்பணும் பாண்டியா’ ரிலீஸை ஆவலாக எதிர்பார்த்திருக்கிறார்.

சாரா ஜேன் டயஸை நினைவிருக்கிறதா? முன்னாள் மிஸ் இந்தியாவான இந்த நடிகை, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்திலும் நடித்தவர். நடிப்பதை வெறுத்து இசைத்துறைக்குத் தாவியிருக்கும் சாரா, தானே நடித்து, ஆடி, இயக்கி, பாடல் எழுதி, இசையமைத்து, பாடி ஒரு ஆல்பம் வெளியிட்டிருக்கிறார். ப்ரியங்கா சோப்ராவுக்கு கடும் போட்டி!

மாமியாரைப் பழிவாங்க ஒரு மருமக ளுக்கு இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது. ‘இந்திரா காந்தி தேசியக் கலை மையம்’ என்றிருந்த பெயரை, வெறுமனே ‘தேசியக் கலை மையம்’ என பெயர் மாற்றியிருக்கிறார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி.

இந்தியாவில் மதவாத அமைப்புகள் கோட்சேவைக் கொண்டாடிக் கொண்டிருக்க, லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்திக்கு சிலை அமைக்கிறார்கள். இதற்காக 2 லட்சம் பவுண்டு நன்கொடை கொடுத்திருக்கிறார் ‘இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி.

‘பிகே’ படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்கப் போகிறார், அதற்கேற்றவாறு ரெடியாகிவிட்டார் என்றெல்லாம் செய்திகள் பரபரக்கின்றன. ஆனால், இன்னும் ‘பிகே’ தமிழ் ரைட்ஸ் வாங்குவதற்கான பேச்சுவார்த்தையே முடியவில்லையாம். இந்தச் செய்தியைக் கேட்டு கமலே ஆச்சரியத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.