பூக்காரி கனகத்தின் குழந்தைக்கு வீசிங் குறைய ஊசி போட்டு, மருந்தும் எழுதிக் கொடுத்தார் டாக்டர் அம்புஜம். ஃபீஸ் நூறு ரூபாய்.‘‘நான் ஏழைம்மா. அம்பது ரூபா தரட்டுங்களா?’’ என்றாள் கனகம் தயக்கத்துடன்.‘‘நான் ஏழை, பணக்காரங்கனு வித்தியாசம் பாக்குறதில்லை. என்னோட ஃபீஸ் நூறு ரூபாதான்’’ என்றார் அம்புஜம் கறாராய்.‘‘ரேஷன் வாங்க வச்சிருந்தது’’ என்றபடியே கனகம் ஒரு நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தாள்.

ஒரு வாரம் போயிருக்கும். கோயில் வாசலில், பூ விற்றுக்கொண்டிருந்தாள் கனகம். காரில் வந்திறங்கிய ஒரு பெண்மணி, ‘‘அஞ்சு முழம் பூ கொடும்மா’’ என்றார் அவசரமாக.
பூவை அளந்து கவரில் போட்டுக் கொடுத்து, ‘‘75 ரூபாய் கொடுங்க’’ எனக் கேட்ட கனகம், அப்போதுதான் அந்த முகத்தை கவனித்தாள். ‘‘நீங்க டாக்டர்
அம்புஜம்தானே’’ என்றாள் ஒட்டுதலாக.
‘‘ஆமாம்’’ - சொன்னதும், அம்புஜத்திடம் ஐடியா பல்ப். ‘தெரிந்தவள்தானே... விலையைக் குறைத்துக் கேட்டால் என்ன?’ ஆனால், தான் அன்று ஃபீஸைக் குறைக்காதது நினைவுக்கு வந்து அதைத் தடுத்தது.‘‘நீங்க நம்ம டாக்டரம்மா... 50 ரூபா கொடுங்கம்மா போதும்!’’ - கேட்காமலே கனகம் சலுகை தந்தாள். சவுக்கடியும்தான்!
ராஜன் புத்திரன்