ஓ.பன்னீர்செல்வம் என்கிற பணிவான விசுவாசியை ‘தற்காலிக முதல்வராக’ப் பெற்றிருக்கிற ‘மக்களின் முதல்வர்’ ஜெயலலிதா மீது இந்நேரம் நிதிஷ்குமாருக்கு பொறாமை பொங்கியிருக்கக் கூடும்.

பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது, தன் நாற்காலி யில் ஜிதன் ராம் மஞ்ஜியை உட்கார வைத்தார் நிதிஷ். எப்போது கேட்டாலும் எழுந்து நாற்காலியை பவ்யமாகத் திருப்பிக் கொடுப்பார் என நினைக்கப்பட்டவர் விஸ்வரூபமெடுத்து நாற்காலியை ஆக்கிரமித்துக் கொள்ள, ஜனதா தலைவர்கள் திகைத்து நிற்கிறார்கள்.
கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தார் நிதிஷ். அதன்பின் தங்கள் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பலரும் விலகி ஓடுவதைத் தவிர்க்கவும், மக்கள் ஆதரவைப் பெறவும் சாதுர்யமாக காய் நகர்த்தினார்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த மஞ்ஜியை முதல்வராக்கிவிட்டு பதவி விலகினார். இன்னும் எட்டு மாதங்களில் மாநில சட்டசபைக்குத் தேர்தல் வருகிறது. லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பழைய ஜனதா கூட்டாளிகளுடன் இணைந்து பாரதிய ஜனதாவை எதிர்கொள்ளத் தயாராகிவிட்ட நிதிஷ், அதற்கு வாகாக முதல்வர் நாற்காலியில் அமர நினைக்கிறார். ஆனால் பாரதிய ஜனதாவின் சப்போர்ட் இருப்பதால், மஞ்ஜி மறுக்கிறார்.
70 வயதாகும் மஞ்ஜியின் அரசியல் பயணம் பெரிய திருப்பங்கள் கொண்டதல்ல. பீகாரின் முஸாஹர் எனப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். பள்ளிக்காலத்தில் இவர் கம்யூனிஸ்ட். அஞ்சல் துறையில் கிளார்க் ஆக பணியாற்றிவிட்டு திடீரென காங்கிரஸில் இணைந்து, அதே வேகத்தில் எம்.எல்.ஏ. ஆனவர். அமைச்சர் பதவியும் கிடைத்தது.
காங்கிரஸ் தேயத் தொடங்கியபோது, சரியாக நாடி பிடித்து லாலு கட்சியில் சேர்ந்தார். லாலுவுக்கும் தன்னை சமூகநீதிக் காவலராகக் காட்டிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அதனால் அவர் கேபினட்டிலும் இடம் பிடித்தார் மஞ்ஜி. கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு திணறிய நேரத்தில், எதிர்கால அரசியலை சரியாகக் கணித்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் ஐக்கியமானார்.
நிதிஷின் முதல் கேபினட்டில் இவரும் அமைச்சர். ஆனால் பழைய ஊழல் வழக்கு ஒன்று இவர்மீது நிலுவையில் இருந்ததால், ஒரே நாளில் இவரது பதவியை ராஜினாமா செய்யச் சொன்னார் நிதிஷ். (அதற்குத்தான் இப்போது மஞ்ஜி பழிவாங்குவதாக பலர் சொல்கிறார்கள்!) பிறகு அந்த வழக்கு தள்ளுபடி ஆனதும் அமைச்சர் பதவி தேடி வந்தது. மஞ்ஜி இதுவரை ஏழு முதல்வர்களின் கேபினட்டில் இருந்தாலும், செல்வாக்கான அமைச்சராக எப்போதும் இருந்ததில்லை.
ஏழு ஆண்டுகளுக்கு முன் பீகாரில் கடும் உணவு நெருக்கடி வந்தபோது ‘‘பசிக்கு எலிக்கறி சாப்பிட்டால் நல்லது. அதில் நிறைய சத்து இருக்கிறது. எலிகளை இப்படி எல்லோரும் சாப்பிட்டு காலி செய்தால் விவசாயத்துக்கும் நல்லது’’ எனப் பேசி சர்ச்சைக்கு ஆளானவர். வியாபாரிகள் உணவுப் பொருட்களை பதுக்குவதாக புகார் எழுந்தபோது, ‘‘அவங்க பிள்ளை, குட்டிங்க நல்லா இருக்கணும்னு சேர்த்து வைக்கறாங்க.
இதுல என்ன தப்பு இருக்கு?’’ என நியாயப்படுத்தியவர். இவ்வளவு ‘அப்பாவி’யானவர்தான் தன் ‘பொம்மை’யாக இருக்க முடியும் என நிதிஷ் நம்பினார். அதனால்தான் ஒரு தலித்தை தன் இடத்தில் நியமிக்க நினைத்தபோது, வேறு இரண்டு அமைச்சர்களையும் சபாநாயகரையும் புறக்கணித்து விட்டு இவரை செலக்ட் செய்தார்.
ஆரம்பத்தில் நிதிஷின் சொல் கேட்டு நடந்தவர், அதன்பின் நிதிஷின் எதிரிகளைத் தேடித் தேடி சந்திக்க, நிதிஷ் வயிற்றில் அமிலம் சுரந்தது. பொம்மை முதல்வர் எனக் கருதி யாரும் மதிப்பதில்லை என்பதால் நிர்வாகக் குளறுபடிகள் நிறைய. ‘‘இவரை உட்கார வைத்த நிதிஷ்தான் காரணம்’’ என அதற்கும் நிதிஷ்குமாருக்கே கெட்ட பெயர் வர, இன்னும் கோபம் கூடியது. தலித்துகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதுதான் ஜனதாவினரை இன்னும் சிக்கலில் ஆழ்த்துகிறது.
அதுபோக, பதவியால் சம்பாதித்தவரும் அல்ல மஞ்ஜி. 35 ஆண்டுகளாக அரசியலில் இருந்தாலும், கடந்த ஆண்டு தேர்தலில் அவர் காட்டிய சொத்து மதிப்பு வெறும் இரண்டு லட்சத்து சொச்ச ரூபாய்தான்.‘‘ஒரு பொம்மை முதல்வரை பீகாருக்குக் கொடுத்துவிட்டார் நிதிஷ்குமார்’’ என பாரதிய ஜனதா தலைவர்கள் குற்றம் சாட்டியபோது, ‘‘நான் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல’’ என கோபமாகச் சொன்னார் மஞ்ஜி. அதை இப்போது நிரூபித்து விட்டார்.
- அகஸ்டஸ்