குட்டிச்சுவர் சிந்தனைகள்



தோல்விதான் வெற்றிக்கு முதல் படி என்றார்கள். அதை நம்பி நாமும் தோல்வி மேல் தோல்விகளை சந்தித்து, வரிசையாக படிகளாக பரப்பி வைத்தாலும், எதுவுமே வெற்றி கோபுரத்துக்கு போகவில்லையென குழம்பிப் போகிறோம். ஆனா, பெரியவங்க சொன்ன மேட்டர் அதில்ல.

ரொம்ப யோசிச்ச பிறகுதான் புரிந்தது. வெற்றிப் பாதைக்கு தோல்விதான் முதல் படி. ஆனா அடுத்த அடுத்த படிகள் என்னன்னா, பித்தலாட்டம், ஜால்ரா போடுவது, காக்கா பிடிப்பது, நம்பிக்கை துரோகம், புகழ்ந்து பேசறது, சிபாரிசு பிடிக்கிறது,

 போட்டுக் கொடுக்கிறது, காட்டிக் கொடுக்கிறது, பொய் புளுகறது, 420 வேலைகள் செய்யறது, தில்லுமுல்லு, ஆட்கள் முதல் அரசாங்கம் வரை ஏமாத்தும் சதுரங்க வேட்டை டெக்னிக்குகள், அடிதடி, அராஜகம் போன்றவைதான். அதிர்ஷ்டம் இருந்தா இவை லிஃப்ட்டா கூட அமையலாம்.

* மகளுக்கு செலவு செய்யும்போது எல்லா ஆண்களும், ஐந்நூறு ரூபா நோட்டில் கப்பல் செய்து மழை நீரில் மிதக்க விடும் ‘இந்தியன்’ தாத்தா கமல் ஆகின்றனர்.
* மகன்களுக்கு செலவு செய்யும்போது எல்லா ஆண்களும், என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாத ‘தசாவதாரம்’ பல்ராம் நாயுடு கமல் ஆகின்றனர்.
* மனைவிக்கு செலவு செய்யும்போது, மனசுக்குள் உவ்வே சொல்லும் ‘பம்மல் கே.சம்பந்தம்’ கமல் ஆகின்றனர்.
* அம்மாவுக்கு செலவு செய்யும்போது அன்பை அள்ளிக்கொட்டும் கட்டிப்புடி வைத்திய ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ கமல் ஆகின்றனர்.
* தங்கள் அப்பாவுக்கு செலவு செய்யும்போது சகிப்புத்தன்மையின் உச்சம் தொட்டு ‘அன்பே சிவம்’ கமல் ஆகின்றனர்.
* அக்கா, தங்கைகளுக்கு செலவு செய்யும்போது எதுவுமே தெரியாத ‘தெனாலி’ கமல் ஆகின்றனர்.
* நண்பர்களுக்கு செலவு செய்யும்போது, ‘நாயகன்’ திரைப்பட கமல்ஆகின்றனர்.
* காதலிகளுக்கு செலவு செய்யும்போது, ‘மூன்றாம் பிறை’ கமல் ஆகின்றனர்.
* சம்பந்தமில்லாத ஒருவருக்கு செலவு செய்ய நேர்கையில், எல்லா ஆண்களும் ‘சிகப்பு ரோஜாக்கள்’ கமல் ஆகிவிடுகின்றனர்.
* ஆனால் பாவம்... தங்களுக்கென செலவு செய்யும் நிலைமை வரும்போது பல ஆண்கள் ‘16 வயதினிலே’ கமலாக கோவணத்துடன் திருப்திப்பட்டுக் கொள்கின்றனர்.

இந்தியாவில் ஒரு தொகுதி மக்களுக்கு மட்டும், இந்த மாத per capita income, அதாவது தனி நபர் வருமானம் ரூ.2000 முதல் 4000 வரை உயர்ந்திருக்கிறது. வழக்கமாக பூமிக்கு அடியில் புதையல் எடுக்கும் மக்கள், இந்தத் தொகுதியில் மட்டும் தினசரி பேப்பர், பால் பாக்கெட், பன் பாக்கெட் என பல வகைகளில் புதையல் எடுத்திருக்கிறார்கள்; சரியாகச் சொன்னால் எடுக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கொடுக்கிற தெய்வம் கூரையப் பிச்சுக்கிட்டு கொடுக்குமானு தெரியல... ஆனா, இந்தத் தொகுதியில கதவைத் தட்டி கூட கொடுத்திருக்கு. பொங்கல் முடிந்தும் புதுப் புடவை, புது சட்டை - வேட்டி கிடைக்கப் பெற்ற அதிர்ஷ்டசாலிகள் இவர்கள். ‘காலையில் தினமும் கண் விழித்தால், நான் கை தொழும் தேவதன் காந்தி’ எனப் பாட்டு படிக்கும் அளவுக்கு தினம் காந்தி தாத்தா முகத்தில்தான் கண் விழித்தார்கள்.

இதுல கொடுமை என்னன்னா, நெல்லுக்குப் பாயறது கொஞ்சம் புல்லுக்கும் பாயும் என்கிற மாதிரி இந்த ஊருக்கு சொந்தக்காரன பந்தக்காரன பார்க்கப் போனவங்களுக்கு எல்லாம் பேட்டா கொடுத்து டாட்டா பிர்லா ஆக்கியிருக்காங்க. இந்த ஊருல யாருகிட்ட கேட்டாலும் இந்த மாசம் முழுக்க கடன் கிடைக்கும், அந்தளவுக்கு பணப்புழக்கம்.

கறிக்கடைக்கு மட்டன் எடுக்கப் போனவர்களில் இருந்து, காய்கறிக்கடைக்கு கத்திரிக்காய் வாங்கப் போனவர்கள் வரை ஆயிரம், ஐந்நூறு நோட்டுகளுக்கு சில்லறை கிடைக்காமல் தவித்தார்கள். இப்படிப்பட்ட அருமையான வசதியான தொகுதி எங்க இருக்குன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்?

புது நம்பர்ல மிஸ்டு கால் வந்தா, நம்மில் முக்காவாசி பேரு திருப்பி கூப்பிடுறது, ‘அது ஒரு பொண்ணு நம்பரா இருக்காதா’ங்கிற நம்பிக்கையிலதான். முன்னால போற ஸ்கூட்டில முதுக பார்த்துட்டு வேகமா ஃபாலோ பண்றது, முன்னால முகமும் நல்லாயிருக்கும் என்ற நம்பிக்கையிலதான். கோயிலில் கண்ணை மூடிக்கொண்டு கடவுளிடம் கணக்கு வழக்கில்லாமல் கண்டதையும் வேண்டுவது கூட ஒரு வகையில் குருட்டு நம்பிக்கைதான்.

கொஞ்சம் நல்லதா சட்டை போட்டுக்கிட்டு ரோட்டுல போறப்ப, போற வர்றவங்க எல்லாம் நம்மளத்தான் பார்க்கிறாங்கனு நினைப்பதும் ஒரு வகை நம்பிக்கைதான். டிராஃபிக் சிக்னல்ல போலீஸ் புடிக்க முடியாதுன்னு 3 செகண்ட் முன்பே வண்டிய முறுக்குறதும் ஒரு நம்பிக்கைதான்.

ஷோ ரூம் வெளிச்சத்துல சட்டைய வாங்கிட்டு வீட்டுல வந்தப்புறம் வேற கலரா தெரிஞ்சாலும், அருமையாதான் இருக்கும்னு அணிஞ்சுக்கிட்டு போறதும் ஒருவகை நம்பிக்கைதான். இப்படி செய்யற செயல்களில், செய்ய ஆரம்பித்த பிறகு நம்பிக்கையோட இருக்கோமே தவிர, நாம எத்தனை செயல்களை நம்பிக்கையோடு செய்ய ஆரம்பிச்சு இருக்கோம்?

ஆல்தோட்ட பூபதி