வரி கட்டாவிட்டால் திருநங்கை டான்ஸ்!



வரி வருவாய்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயிர்நீர். வரியின் அடிப்படையில்தான் நலத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஊழியர்களுக்கு சம்பளம் தருவது முதல் குப்பை அள்ளும் வாகனங்களுக்கு டீசல் போடுவது வரை எல்லாமும் வரியில் இருந்துதான்.

சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி என உள்ளாட்சி அமைப்புகள் தீர்மானிக்கும் வரிகளை மக்கள் கட்டாயம் செலுத்தத்தான் வேண்டும். செலுத்த மறுத்தால்?மிரட்டலான ஆக்ஷன்களால் பெயர் வாங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி.

பொதுவாக வரி செலுத்த மறுத்தால் நோட்டீஸ் அனுப்புவார்கள். வாசலில் போய் தண்டோரா போட்டு அசிங்கப்படுத்துவார்கள். இணையதளத்தில் பட்டியல் வெளியிடுவார்கள். வழக்கு தொடுப்பார்கள். அபராதம் விதிப்பார்கள். பொருட்களை ஜப்தி செய்வார்கள்.

எதற்கும் மசியவில்லை என்றால் நிறுவனத்துக்கு ‘சீல்’ வைப்பார்கள். இதுதான் நடைமுறை. ஆனால், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஒரு நட்சத்திர ஹோட்டல் வைத்திருந்த வரி பாக்கியை வசூலிப்பதற்காகக் கையாண்ட முறை மிகவும் வித்தியாசமானது.

இரண்டு திருநங்கைகள், ஒரு பேண்டு வாத்தியக் குழுவோடு வரி கட்டாத நிறுவனத்தின் வாசலில் போய் இறங்குகிறார்கள். பின்னால் இரண்டு ஊழியர்கள் மாநகராட்சி பேனரைப் பிடித்துக் கொண்டு நிற்க, பேண்டு வாத்தியக்குழு ஒரு குத்துப்பாடலை இசைக்கிறது. திருநங்கைகள் தடாலடி ஆட்டம் போடுகிறார்கள். அலறி அடித்துக்கொண்டு ஓடிவருகிற நிறுவனத்தின் உரிமையாளர், அதிகாரிகள் கையில் செக்கைக் கிழித்துக் கொடுக்கிறார்.

திருவொற்றியூர் ராஜாக்கடை பஸ்நிலையம் அருகில் ஒரு வணிக வளாகத்தின் உரிமையாளர் வரி கட்டாமல் டபாய்க்க, இரவோடு இரவாக அந்தக் கட்டிடத்தின் முன்பு இரண்டு லாரி குப்பைக்கழிவுகளைக் கொட்டி நிரவி விட்டார்கள் ஊழியர்கள். அந்த ஏரியாவே நாற்றமெடுக்க, பதறி ஓடி வந்து வரியைக் கட்டி விட்டுச் சென்றிருக்கிறார் கட்டிடத்தின் உரிமையாளர்.

கடந்த வாரம் திருநங்கைகள் போட்ட ஆட்டத்தில் ஒரே நாளில் ஒன்றரை கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக பெருமிதத்தோடு சொல்கிறார்கள் மாநகராட்சி வருவாய்ப் பிரிவு அதிகாரிகள்.  வரி பாக்கி வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வசூல் செய்ய வேண்டியது அவசியம்தான்.

அதுவும், ஊழியர்களுக்கு சம்பளம் கூட தர முடியாத நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சென்னை மாநகராட்சிக்கு அது அத்தியாவசியம். ஆனால், அங்கீகாரத்துக்கு ஏங்கும் மூன்றாம் பாலினமான திருநங்கைகளை அவமானச் சின்னமாகச் சித்தரித்து கூத்தாட விடுவதும், நாற்றமெடுக்கும் குப்பைக்கழிவுகளை பொதுவெளியில் கொட்டி மக்களை இம்சிப்பதும் ‘தாதாத் தனமாக’ இருப்பதாக குமுறுகிறார்கள் பொதுமக்கள்.

2014-2015ம் ஆண்டில் 851 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயித்திருந்தது சென்னை மாநகராட்சி. ஒவ்வொரு வணிக வளாகத்துக்கும் சொத்து வரி தீர்மானிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது. சென்னை மாநகர நகராட்சிச் சட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15, அக்டோபர் 15 ஆகிய தேதிகளில் சொத்து வரியைச் செலுத்த வேண்டும்.

ஏறக்குறைய 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகிவிட்டது. ஆனால் பெரும்தொகை தேங்கி நின்றது. வளாகங்களின் உரிமையாளர்கள் எல்லா நடவடிக்கைகளையும் டபாய்க்கவே, இப்படியொரு தடாலடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது மாநகராட்சி.

திருநங்கைகளை களமிறக்கி வரி வசூலிக்கும் நடைமுறை முதலில் அறிமுகமானது பீகார் மாநிலம் பாட்னா மாநகராட்சியில். லாலு முதல்வராக இருந்த காலகட்டத்தில், பீகார் முழுவதுமே பெருமளவு வரித்தொகை நிலுவையில் இருந்தது.

அரசியல் தாதாக்களின் ஆதிக்கம் மேலோங்கியதால், வரி வசூலிக்கச் செல்லும் அதிகாரிகள் தாக்கப்பட்டார்கள். ஊழியர்களுக்கு சம்பளம்கூட வழங்கமுடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி. பாட்னாவில் மட்டும் 5 லட்சம் பேர், சுமார் 70 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்திருந்தார்கள்.

லாலுவுக்குப் பிறகு முதல்வரான நிதிஷ்குமார், குறிப்பிட்ட நாளுக்குள் வரிகளை வசூலிக்க ஆணையிட்டார். அப்போது பாட்னா மாநகராட்சி ஆணையர் அதுல்பிரசாத் மூளையில் உதித்ததுதான் திருநங்கைகளைப் பயன்படுத்தும் திட்டம். திருநங்கைகள் கடை கடையாகச் சென்று ஒப்பாரி வைத்தும், கைதட்டியும் ஆட்டம் போட, அதுல்பிரசாத் எதிர்பார்த்தது போலவே மக்கள் அலறி அடித்துக்கொண்டு வரி பாக்கியை செட்டில் செய்தார்கள். ஆனால், மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரண்டே நாட்களில் இத்திட்டம் கைவிடப்பட்டது.

பிறகு, அந்தத் திட்டத்தை மும்பை மாநகராட்சி கையில் எடுத்தது. இன்றைக்கும் வரி கட்டாத வணிக வளாகங்கள் முன்பு திருநங்கைகள் நடனமாடி வரி வசூலிப்பது வழக்கமாக இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை வரி கட்டாத, ‘கவனிப்பு செய்யாத’ வணிக வளாகங்களின் முன்புறமாக குப்பைத்தொட்டியை நகர்த்தி வைத்து மிரட்டுவதுதான் நடைமுறையில் இருந்தது.

வசூலாகிவிட்டால் தொட்டி நகர்ந்துவிடும். அண்மையில் நடந்த வருவாய்ப் பிரிவு ஊழியர்கள் கூட்டத்தில், ‘‘ஏதாவது செய்து வரிகளை வசூலியுங்கள்’’ என்று மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் எடுத்துக்கொடுக்க, வருவாய் அதிகாரிகள் ‘பாட்னா பாலிஸி’யைக் கையில் எடுத்து விட்டார்கள். ஆனால் எதிர்ப்பு வலுக்கவே, தற்காலிகமாக அத்திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறது மாநகராட்சி.

இதுபற்றி நம்மிடம் வருத்தத்தோடு பேசிய ‘தேவை அமைப்பு’ ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, ‘‘ஒரு மாநகராட்சி அடாவடியான நிதி நிறுவனத்தைப் போல நடந்துகொள்ளக்கூடாது’’ என்று கண்டிக்கிறார். ‘‘வரி கட்டாததை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. வரி கட்டாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை கூட எடுக்கலாம்.

அதை விடுத்து, அடியாட்களை அனுப்புவது போல திருநங்கைகளை அனுப்பி வரி வசூலிப்பதும், அதை நியாயப்படுத்துவதும் தவறு. வரி நிர்ணயம், வசூல் செய்யும் பணிகளில் ஏகப்பட்ட குளறுபடிகள், முறைகேடுகள் நடக்கின்றன.

அரசியல் பின்புலம், அதிகாரிகள் சரிக்கட்டல் மூலம் பல நிறுவனங்களுக்கு வரி குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது. முன்பு, உயர் அதிகாரிகள் மண்டலங்களுக்கு திடீர் விசிட் செய்து வரிவசூல் பணிகளைக் கண்காணிப்பார்கள். இன்று எந்த அதிகாரியும் அலுவலகத்தை விட்டு கீழே இறங்குவதே இல்லை.

பல மாதங்களுக்கு வரி வசூலைக் கண்டுகொள்ளாமலே இருப்பது, உயர் அதிகாரிகள் நெருக்கடி தரும்போது சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் வரி வசூலிப்பது... இப்படித்தான் ஊழியர்கள் செயல்படுகிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது’’ என்கிறார் இளங்கோ.சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோவும் மாநகராட்சியின் செயல்பாட்டை விமர்சிக்கிறார்.

‘‘அரசுத்துறை கள் ஒருங்கிணைந்து செயல்பட்டாலே ஒற்றைப் பைசா நிலுவை இல்லாமல் வரியை வசூலித்து விட முடியும். குடிநீர் இணைப்பைத் துண்டிக்கலாம். மின்சாரத்தைத் துண்டிக்கலாம். நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று சீல் வைக்கலாம். நிர்வாகமே சட்டத்தைக் கையில் எடுத்து, அதிகாரம் செய்யக்கூடாது. திருநங்கைகள் அங்கீகாரத்துக்காக போராடுகிற காலக்கட்டம் இது. அவர்களை வேடிக்கைப் பொருளாக மாற்றி அசிங்கப்படுத்துவது நல்லதல்ல.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், ‘இதன்மூலம் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருகிறோம்’ என்கிறார்கள். இதைவிட அபத்தமாக அவர்களை அவமானப்படுத்த முடியாது. மருத்துவராகவும், பொறியாளராகவும் அவர்கள் அடையாளப்படும் காலக்கட்டத்தில் மீண்டும் கடந்த காலத்துக்குத் தள்ள முயற்சிக்கிறார்கள்...’’ என்று வருந்துகிறார் சிவ.இளங்கோ.

‘இதன்மூலம் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருகிறோம்’ என்கிறார்கள். இதைவிட அபத்தமாக அவர்களை அவமானப்படுத்த முடியாது. வணிக வளாகத்தின் உரிமையாளர் வரி கட்டாமல் டபாய்க்க, கட்டிடத்தின் முன்பு இரண்டு லாரி குப்பைக்கழிவுகளைக் கொட்டி விட்டார்கள்.

- வெ.நீலகண்டன்