உலகக் கோப்பை கிரிக்கெட்
திருவிழா களைகட்டத் தொடங்கி இருக்கிறது. இதில் நம் ஃபேவரிட் அணி ஜெயிக்கணும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சில வீரர்களின் ஆட்டம் எந்த விதப் பாகுபாடும் இல்லாமல் பார்த்து ரசிக்க, வியக்க வைத்துவிடும். சச்சின், ரிச்சர்ட்ஸ், லாரா, கபில், போத்தம், இம்ரான், ஸ்ரீகாந்த் ஆடும்போது, பந்து பவுண்டரியும் சிக்சருமாய் பறப்பதை பார்க்கப் பார்க்க பரவசம்.

ரஜினி படத்தில் ‘அந்த ஒரு ஃபைட் போதும்பா... டிக்கெட் காசு ஜீரணமாயிடுச்சு’ என்பார்கள் ரசிகர்கள். இவர்கள் அந்த வகை. யுவராஜ் ஒரே ஓவரில் 6 சிக்சர் தூக்கிய ஆட்டம் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் அந்த வகையிலான அதகள ஆட்டத்தால் ரணகளமாக்கக் காத்திருக்கும் ரகளை பார்ட்டிகளைப் பற்றிப் பார்க்கலாம்.

அதிரடி ரேஸில் முந்திக் கொண்டிருப்பவர் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல். ஏற்கனவே ஐ.பி.எல் தொடர் உள்பட ஏராளமான இன்னிங்ஸ்களில் வாய் பிளக்க வைத்திருக்கும் இந்த ஆல் ரவுண்டர், இந்தியாவுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தில் செய்த அமர்க்களம், வெண்கலக் கடையில் புகுந்த யானை என்பார்களே... அந்த ரகம். இந்தியப் பந்து வீச்சை அவர் பதம் பார்த்த விதம்... ‘ஒரு பச்ச புள்ளய போட்டு இந்த அடியா அடிப்பது? கொல கேசுல உள்ள போய்டுவடா...’ என வடிவேலுவின் பாக்சிங் ரிங் சீனை ஞாபகப்படுத்தியது.
அவர் அடித்த பல ஷாட்கள் கிரிக்கெட் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் இல்லாதவை. 57 பந்தில் 11 பவுண்டரி, 8 சிக்சருடன் 122 ரன் விளாசி, அடித்தது போதும் என்று அவராக ரிட்டயர்டு ஆன பிறகுதான் நம்ம பவுலர்களுக்கு உயிரே வந்தது. ஆனால், இந்திய ரசிகர்களுக்கு மானம் போய்விட்டது! ‘அய்யோ... இந்த பவுலிங்க வச்சு கிட்டு இவுங்க எப்படி கோப்பையை கோட்டை விடாம கொண்டாரப் போறாங்களோ’ எனப் புலம்ப வைத்துவிட்டார் மேக்ஸி.
இதில் வேதனை, சோதனை என்னவென்றால், அதே ஆஸி. அணியில் வார்னர், வாட்சன், ஃபின்ச், ஃபாக்னர் என்று எக்கச்சக்க ரகளை பார்ட்டிகள் ரவுண்டு கட்டுவதுதான். யாரைச் சொல்வது? யாரை விடுவது? என்றே தெரியவில்லை. சொந்த மண்ணில் ஆடுவதால் இந்த கங்காருக்களின் துள்ளல் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது.அடுத்த மிரட்டல், போட்டியை இணைந்து நடத்தும் நியூசிலாந்திடம் இருந்து.
அந்த அணியின் கோரி ஆண்டர்சன் ஆடும் அகோர தாண்டவத்தை பார்க்காமல் இருப்பது எதிரணி பவுலர்களின் அதிர்ஷ்டம். 2014 புத்தாண்டு தினத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக குயின்ஸ்டவுனில் இவர் 36 பந்தில் அடித்த சதம் அப்ரிடி யின் நீண்ட நாள் சாதனையை தவிடு பொடியாக்கிவிட்டது. அந்தப் போட்டியில் ஆண்டர்சன் 47 பந்தில் ஆட்டமிழக்காமல் விளாசியது 131 ரன். இதில் அரை டஜன் பவுண்டரியும், 14 சிக்சரும் அடக்கம். கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், லூக் ரோஞ்ச்சி என்று இந்த அணியிலும் அதிரடிக்கு பஞ்சமில்லை.
தென்னாப்ரிக்க கேப்டன் டிவில்லியர்ஸை எப்படி மறக்க முடியும்? கோரி ஆண்டர்சனின் உலக சாதனை இத்தனை சீக்கிரம் முறியடிக்கப்படும் என்று யாரும் கனவு கூட கண்டிருக்க முடியாது. ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் கடந்த மாதம் நடந்த ஒருநாள் போட்டியில், 31 பந்திலேயே சதம் அடித்து கிரிக்கெட் உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார்.
இந்த முறையும் உதை வாங்கியது அதே வெஸ்ட் இண்டீஸ்தான்! 44 பந்தில் 149 ரன் என்று சொன்னால்தான் (9 பவுண்டரி, 16 சிக்சர்) அவரது அடியின் தீவிரம் புரியும். பிப்ரவரி 22ம் தேதி மெல்போர்னில் இந்தியாவுடன் விளையாடும் லீக் ஆட்டத்தில், இவர் 5வது முறையாக டக் அவுட் ஆகி ‘நியூசி லாந்து வீரர் நாதன் ஆஸ்டிலின் உலகக் கோப்பை சாதனையை சமன் செய்ய வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
இந்த வரிசையில் இங்கிலாந்தும் சேர்ந்து கொண்டிருப்பதுதான்ஆச்சரியம். விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர், கேப்டன் இயான் மார்கன், மொயீன் அலி, அலெக்ஸ் ஹேல்ஸ் என்று டார்லிங் பிசாசுகளின் அரண்மனையாக மாறியிருக்கிறது இங்கிலாந்து.
‘இன்னும் நான் களத்தில் இருக்கிறேன் என்பதை மறந்து விடாதீர்கள்’ என கர்ஜிக்கிறார் பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாகித் அஃப்ரிடி. 1996, நைரோபி ஜிம்கானா கிளப் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் முறையாகக் கிடைத்த வாய்ப்பிலேயே 37 பந்தில் சதம் விளாசி உலக சாதனை படைத்தபோது இவருக்கு 17 வயது.
இன்று 34 வயதிலும் அதே உற்சாகத்துடன் ஆல் ரவுண்டராக அசத்திக் கொண்டிருக்கிறார். தனது வசமிருந்து பறிபோன உலக சாதனையை மீண்டும் வசமாக்குவேன் என்று இவர் சபதமிட்டிருப்பது எதிரணிகளுக்கு சாபக்கேடு என்பதில் சந்தேகமில்லை.
‘நாங்களும் இருக்கோம்ல’ என்று குரல் கொடுக்கிறார்கள் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில், டேரன் சம்மி, மார்லன் சாமுவேல்ஸ், டுவைன் ஸ்மித். இதில் கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டம் எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன? டி20 அளவுக்கு ஒருநாள் போட்டியில் அடிப்பது இல்லை என்பது மட்டுமே ஒரே ஆறுதல். உலகக் கோப்பை பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி டி வில்லியர்ஸ், அஃப்ரிடி, கிறிஸ் கெயில் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதுதான் கொடுமை.
ஆஸி, நியூசி மிரட்டலுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. இலங்கையின் அனுபவ வீரர்கள் தில்ஷன், சங்கக்கரா, ஜெயவர்த்தனே, ஜிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர், ஹாமில்டன் மசகட்சா, வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரகிம், அயர்லாந்தின் கெவின் ஓ பிரைன் போன்றவர்களையும் ஒதுக்கிவிட முடியாது.
‘எல்லா டீம் பத்தியும் சொல்றீங்க... இந்திய அணியில் ரகளை பார்ட்டிகளே இல்லையா’ என்கிறீர்களா? இந்தியாவில் இருந்து பிட்ச்களை யும் சுருட்டி எடுத்துக்கொண்டு போயிருந்தால்... அல்லது சேவக், யுவராஜ் அணியில் இடம் பெற்றிருந்தால்... நீண்ட பட்டியல் போட்டிருக்கலாம்!
- ஷங்கர்
பார்த்தசாரதி