சீக்ரெட்டா நடக்குது சில்லறை பிஸினஸ்!



பாபி சிம்ஹா அடுத்த ரவுண்ட்

நிஜமாகவே அது ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம். கழுத்தில் ஐ.டி.கார்டு பட்டையும் கேஷுவல் லுக்குமாக ஷூட்டிங்கில் ஹீரோ பாபி சிம்ஹா. அழகு கொஞ்ச ஹீரோயின் ரேஷ்மி மேனன். படம், ‘உறுமீன்’. இடம், வேளச்சேரி.

‘‘இந்தப் படம் நார்மலான லவ் ஸ்டோரி கிடையாது. ஃபேன்டஸி த்ரில்லர். ‘பொல்லாதவன்’ மாதிரி படம் முழுக்க விறுவிறுனு ஒரு ஆக்ஷன் மூட் பரவிட்டே இருக்கும். அழுத்தமான ஒரு மெஸேஜும் வச்சிருக்கோம்!’’ என சஸ்பென்ஸ் வைக்கிறார் அறிமுக இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி.

எடிட்டரிலிருந்து டைரக்டராக புரொமோஷனில் வந்தவர். ‘‘ராஜமௌலி சாரோட ‘மகதீரா’ மாதிரி ஒரு ஃபேன்டஸியை இதில் பார்க்கலாம். வண்ணக்கலவையின்போது கறுப்பும் பச்சையும் கலந்தா சாம்பல் கலர் கிடைக்கும். காடுகளைக் குறிக்கும் நிறம், பச்சை. நகரத்தின் இன்னொரு முகத்தை சொல்றதுக்கு கறுப்பு, குறியீடு.

கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி நம்ம நாட்டுக்கு வந்தாங்க? அவங்களோட ஒரிஜினல் முகம் என்ன? இதைத்தான் த்ரில் கலந்து சொல்லியிருக்கேன். ‘ஓடும் மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு’தான் படத்தோட கான்செப்ட். வேகமா வேட்டையாடற உயிரினம் சிறுத்தைன்னு நீங்க நினைச்சா தப்பு. ஒரே இடத்தில நின்றபடியே வேகம் காட்டி வேட்டையாடுறது கொக்குதான். பாபி சிம்ஹா கதை நாயகன்.

‘நேரம்’ படம் பண்ணின காலத்துல இருந்தே சிம்ஹா என் ஃப்ரெண்ட். ‘ஜிகர்தண்டா’வுக்கு முன்னாடியே, இதை ஆரம்பிச்சிட்டோம். இந்தப் படத்துக்கு அப்புறம் சிம்ஹா இன்னும் பிஸியாகிடுவார். ‘மெட்ராஸ்’ல அன்புவா நடிச்ச கலையரசன் மெயின் கேரக்டர் பண்றார். அவரையும் அடுத்த லெவலுக்கு அழைச்சுட்டுப் போகக்கூடிய படம் இது. ஹீரோயின் ரேஷ்மி மேனன். ‘இனிது இனிது’, ‘பர்மா’ படங்கள் பண்ணியிருக்காங்க.’’‘‘நீங்க டைரக்டர் சீட்டைப் பிடிச்ச ரூட்..?’’

‘‘பிறந்தது திருப்பூர். படிச்சது கோவை. எம்.எஸ்சி விஸ்காம் படிச்சிருக்கேன். எழுத்தாளர்கள்ல கி.ராஜநாராயணனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் எனக்கு தூரத்து சொந்தமும் கூட. முதல் படமா அவர் நாவலைத்தான் பண்ணணும்னு அப்பவே நினைச்சிருக்கேன்.

செல்வராகவன் அசோஸியேட் யுவராஜ் சார் மூலமா சென்னை வந்தேன். எடிட்டர் ரகு சார்கிட்ட வேலை கத்துக்கிட்டேன். எடிட்டரா இருந்ததில் கார்த்திக் சுப்புராஜ், வெங்கட்பிரபுன்னு என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட் பெருசாச்சு. ஒரு நல்ல எடிட்டருக்கு ஸ்கிரிப்ட் நாலெட்ஜும் இருக்கணும்.

அது எனக்கு இருக்குங்கற தன்னம்பிக்கையிலதான் இறங்கியிருக்கேன். சினிமாவுல சார்லி சாப்ளின், இளையராஜா, பாலுமகேந்திரா, ராஜமௌலி சார்... இவங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்!’’

‘‘லைட்டா சோஷலிசம் பேசியிருக்கீங்களாமே..?’’‘‘ஆமாம். ‘வலிய திணிக்கப்பட்ட பொருளாதார’த்தைப் பத்திப் பேசியிருக்கேன். உதாரணத்துக்கு, டீக்கடையில 19 ரூபாய்க்கு சாப்பிட்டுட்டு 20 ரூபாய் கொடுக்குறீங்க. மீதி ஒரு ரூபாய் சில்லறைக்கு பதிலா ஒரு சாக்லெட்டைக் கொடுக்கறாங்க.

நீங்க அதைக் கேட்கல. ஆனா, திணிக்கப்படுது. இதுவே நீங்க 19 சாக்லெட் கொடுத்தா வாங்குவாங்களா? தமிழ்நாட்டுல எத்தனை கடைகள் இப்படி பண்றாங்க? இந்தியாவில் எத்தனை கடைகள்! ‘அந்நியன்’ல வர்ற அஞ்சு பைசா கணக்கு மாதிரி போட்டீங்கன்னா, நம் மீது திணிக்கப்பட்ட இந்த சாக்லெட்டின் ஒருநாள் விற்பனையே கோடிகளைத் தாண்டலாம்.

அதே மாதிரி நிறைய இடங்கள்ல நூறு ரூபாய்க்கு சில்லறை கொடுத்தால், பத்து ரூபாய் கமிஷனா கொடுக்கறாங்க. ஒரு லட்ச ரூபாய்க்கு சில்லறை கொடுத்தால், உங்களுக்கு கமிஷன் சேர்த்து ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் கிடைக்குது. பஸ்ல நம்மகிட்ட சில்லறை இல்லைனு சொல்ற நடத்துனர்கள் அன்னன்னிக்கு கிடைக்கற சில்லறையை யார்கிட்ட கொடுக்கறாங்க? அதனால அவங்களுக்கு என்ன கிடைக்குது?

இன்னிக்கு எனக்கு ரெண்டு லட்ச ரூபாய்க்கு சில்லறை தேவைன்னு கேட்டீங்கன்னா, அடுத்த ஒன் அவர்ல அதைக் கொடுத்துட்டு இருபதாயிரம் ரூபாயை கமிஷனா வாங்கிட்டுப் போற ஆளுங்க சென்னையிலயே இருக்காங்க.

உச்சி வெயில்ல வேர்வை சிந்தி உழைக்கிறவனுக்கு கிடைக்காத பணத்தை, உட்கார்ந்த இடத்துல எந்த முதலீடும் போடாம ஒரு குரூப் சம்பாதிக்குது. கால் சென்டர்ல இரவு முழுக்க கண்முழிச்சு உழைக்கிறாங்க... அந்த உழைப்போட லாபம் யாருக்குப் போகுது? எந்த நாட்டுக்குப் போகுது? வெளிநாட்டு வங்கிகள் நம்ம டெபாசிட் பணத்தை நம்ம நாட்டின் வளர்ச்சிக்கு செலவழிக்கிறாங்களா? இப்படி நிறைய பகீர் செய்திகளை கலையரசன்னு ஒரு கேரக்டர்ல வெளிப்படுத்தியிருக்கேன்!’’

‘‘ரொம்ப சீரியஸா போறீங்களே..?’’

‘‘இல்லை. சிரிக்க சிரிக்கத்தான் இந்த மேட்டரைப் போட்டு உடைக்கிறோம். டயலாக் இல்லாமல் மனோபாலா ஒரு நல்ல ரோல் பண்ணியிருக்கார். காளிவெங்கட், சான்ட்ரானு நிறைய பேர் இருக்காங்க. கேரளாவில் தேடித் தேடி லொகேஷன்களைக் கண்டுபிடிச்சிருக்கோம். மலையாளத்தில் 800 படங்களுக்கு மேல் இசையமைத்த ராஜாமணி சாரோட மகன் அச்சு, இசையமைக்கிறார். மொத்தம் 4 பாட்டு. கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே’ பாட்டை, லேட்டஸ்ட் ராக் மியூசிக்ல பண்ணியிருக்கோம்.

நிச்சயமா அது சூப்பர் ஹிட் அடிக்கும். படத்தோட தயாரிப்பாளர் டெல்லிபாபு, பிட்ஸ் பிலானியில் படித்தவர். படத்தோட ஒன்லைனை சொன்ன அடுத்த நொடியில கதையை ஓகே பண்ணினார். ரவீந்திரநாத் குருவின் கேமரா, ‘சிறுத்தை’ ஸ்டன்ட் மாஸ்டர் ஜி.கணேஷ்குமார்னு நல்ல டீம் கிடைச்சிருக்கு. ஏப்ரல்ல தில்லா இறங்குறோம்!’’

-மை.பாரதிராஜா