எங்கேயோ பார்த்த முகம்
போண்டா மணிக்கு பொல பொல
என் நிஜப் பெயர் கேதீஸ்வரன். இலங்கையில உள்ள மன்னார்லதான் பிறந்து வளர்ந்தேன். நல்ல வசதியான குடும்பம். என்கூடப் பிறந்தவர்கள் மொத்தம் 16 பேர். அதுல எட்டுப் பேர் ஒரே நாள்ல இலங்கை இனக்கலவரத்தில் இறந்து போயிட்டாங்க. எங்க அம்மா இறந்ததா வந்த தகவல் மட்டும்தான் எனக்குக் கிடைச்சுது. அவங்க உடலைக்கூட நான் இன்னும் பார்க்கலை. ஒருவேளை அவங்க உசிரோட கூட இருக்கலாம்... யாருக்குத் தெரியும்?’’

- கலகலக்கும் காமெடியை எதிர்பார்த்துப் போனால், கான்ட்ராஸ்ட்டாக வருகிறது போண்டா மணியின் முன்கதை.அந்த மிடில் கிளாஸ் வாடகை வீட்டின் சின்ன ஹாலில், குட்டியூண்டு பூஜையறை. ‘ஓம் பூர் புவ ஸ்வஹா...’ என சைனா மேட் சான்டிங் டிவைஸ் பின்னணி இசைக்கிறது.
நெற்றியில் விபூதி, செந்தூரம் மணக்க நம் முன்னே பணிவும் குனிவுமாக போண்டா மணி.‘‘பதினொண்ணு வரை படிச்சிருக்கேன். தொடர்ந்து படிக்க முடியல. சினிமால நடிக்கணும்னு ஆசை. அதுக்காகவே நண்பர் மூலமா இந்தியா வர முயற்சி பண்ணினேன்.
அவர் என்னை ஏமாத்தி, சிங்கப்பூர் அனுப்பி வச்சிட்டார். 3 வருஷம் சிங்கப்பூர் வாசம். அப்போ பாக்யராஜ் சார் அவர் மனைவி பிரவீணாவோட சிங்கப்பூர் வந்திருந்தார். நல்லா பழகினார். பொசுக்குனு அவர்கிட்ட ‘சினிமால நடிக்க வைங்க சார்’னு கேட்டேன். ‘இங்க நல்ல நிலையில இருக்கீங்க.. எதுக்கு ரிஸ்க் எடுக்குறீங்க?’ன்னாரு. ‘நீங்க மட்டும் கோயமுத்தூர்ல இருந்து ரிஸ்க் எடுத்துதானே சார் சென்னை போனீங் க’ன்னு திருப் பிக் கேட்டேன். சிரிச்சுட்டார்.
அப்புறம் கொஞ்ச வருஷம் கழிச்சு அகதியா இந்தியா வந்தேன். சேலம் பக்கம் எடப்பாடி அகதிகள் முகாம்ல இருந்தப்போ பக்கத்துலயே ‘பவுனு பவுனுதான்’ ஷூட்டிங் நடந்துச்சு. அங்க அவரை பார்க்கப் போனபோது, ‘என்ன சிலோன் மாப்ளே...
வந்துட்டீங்களா?’ன்னு கேட்டார். ‘தேதி ஒண்ணு...’ பாட்டுல ரோகிணி பாடுவாங்க. அப்போ, தூரத்துல மேள தாளத்தோடு மாலையும் கழுத்துமா மாப்பிள்ளை நடந்து போய்க்கிட்டிருப்பார். ரெண்டு நொடி கூட வராது. அந்த மாப்பிள்ளையா நான் நடிச்சேன். ‘என்ன சார் இப்படிப் பண்ணிட்டீங்களே...’ன்னு வருத்தப்பட்டேன். ‘உங்களை மேளதாளத்தோட வரவேற்று இருக்கேன் கேதீஸ்வரன்’னு சொன்னார் பாக்யராஜ்.
சினிமா ஆசையை மனசுல வச்சிக்கிட்டு அந்த அகதிகள் முகாம்ல அடைஞ்சு கிடக்க முடியலை. சென்னை வந்தேன். ‘அவள் மெல்லச் சிரித்தாள்’ பட இயக்குநர் எம்.என்.ஜெய்சுந்தர்தான் என் பேரை ‘போண்டா மணி’ன்னு மாத்தினார். ‘உனக்கு காமெடிதான் செட் ஆகும். ‘தயிர்வடை’ தேசிகன், ‘தேங்காய்’ சீனிவாசன், ‘பகோடா’ காதர்னு சாப்பிடுற அயிட்டங்களை பெயருக்கு முன்னாடி சேர்த்துக்கிட்டா பெரிய ஆளா ஆகிடலாம்’னு அவர்தான் சொன்னார்.
வி.சேகர் சாரோட ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ படத்துல கவுண்டமணி அண்ணன் காம்பினேஷன்ல நடிக்கறப்ப, ‘உன்னோட பேரென்னடா’ன்னார் அவர். எனக்கு போண்டா ரொம்ப பிடிக்கும்... அதோட கவுண்டமணி அண்ணன் மாதிரி பெரிய ஆளா வரணும்னு அவர் பேர்ல இருந்து மணியை எடுத்துக்கிட்டு, ‘போண்டா மணி’ன்னு போல்டா சொன்னேன். ‘நல்லா இருடா’ன்னு வாழ்த்தினார்.
வி.சேகர் சாரோட திருவள்ளுவர் கலைக்கூடம்தான் எனக்கு வாழ்க்கையில திருப்புமுனை தந்துச்சு. தொடர்ந்து வி.சேகர் அண்ணன் படங்கள்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. வடிவேலு அண்ணன் கூட 60 படங்கள் பண்ணியிருக்கேன். ‘தல செக்ஸ் மூட்ல இருக்கு...
போங்க போங்க’, ‘மூக்கு பொடப்பா இருந்தா இப்படித்தான்’, ‘உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா’னு அவர் காம்பினேஷன்ல நான் பண்ணினது எல்லாமே ரிச்சா ரீச் ஆகிடுச்சு. கலைஞர் அய்யாகிட்ட விருது வாங்கினேன். அப்போ மேடையில ரஜினி, கமல் எல்லாரும் இருந்தாங்க. ‘அடிச்சுக் கேட்டாலும் உண்மையை சொல்லிடாதேங்கற காமெடி சூப்பர்’னு ரஜினி சார் பாராட்டினார்.
வடிவேலு அண்ணன் சொல்லி சிங்கமுத்துவும், விஜயகணேஷும்தான் எனக்குப் பொண்ணு பார்த்துக் கொடுத்தாங்க. என் கல்யாணம் நடிகர் சங்கத்துல நடக்கணும்னு ஆசைப்பட்டேன். மன்சூரலிகான் அண்ணே, விஜயகாந்த் அண்ணே, ராதாரவி அண்ணே எல்லாருமே என் கல்யாணத்தை ஜாம்ஜாம்னு நடத்த உதவினாங்க. பாலசந்தர் சாரே, ‘நீ இவ்வளவு பேரை சம்பாதிச்சிருக்கறயேடா... நல்லா இரு’னு வாழ்த்தினார்.
மனைவி பேர் மாதவி. மக சாய்குமாரி நாலாங்கிளாஸ் படிக்கறா. மகன் சாய்ராம் ரெண்டாம் வகுப்பு. வீட்டுல இன்னொரு பொண்ணும் இருக்கு. பேர் காயத்ரி. என் மனைவியோட தங்கச்சி. அவ என்னோட மூத்த மக மாதிரி.
அவ கல்யாணத்தை நல்லபடியா முடிச்சு வச்சிட்டேன். பவர்ஸ்டார்ல இருந்து விவேக் சார் வரை வந்திருந்து வாழ்த்தினாங்க. மச்சான் ராகவேந்திரனும் எங்க கூடதான் இருக்கான். பிறந்த மண்ணுல போயி என் உடன்பிறந்தவங்களை பார்க்கணும்னு விரும்புறேன். ராஜபக்ஷேவை விமர்சிச்சு அடிக்கடி பேசுனதால, இலங்கைக்குப் போக விசா கிடைக்கல.
என் லெவல்ல யாரும் பெரிய படம், சின்ன படம்னு எல்லாம் பார்க்க முடியாது. எந்தப் படம் பெயர் வாங்கிக்கொடுக்கும்னு யாரால சொல்ல முடியும்? வி.சி.குகநாதன் சாரும், குமரிமுத்து அண்ணனும் அக்கறையா ஒரு அட்வைஸ் தந்தாங்க. ‘சினிமாவை நம்புறதோட ஒரு தொழிலும் அவசியம்’னு. அதான்... ‘சாய் கலைக்கூடம்’ங்கற பேர்ல ஆடல், பாடல் கலைக்குழு ஒண்ணு நடத்தறேன்.
காமெடியன் பெருசா வர காத்திருக்கணும். மக்கள் முதல்ல சின்ன ஸ்டூல் கொடுத்து உக்கார வைப்பாங்க. அப்புறம்தான் பெரிய ஆசனம் கிடைக்கும். நான் ஸ்டூல்ல காத்திருக்கேன்!’’
‘தயிர்வடை’ தேசிகன், ‘தேங்காய்’ சீனிவாசன், ‘பகோடா’ காதர்னு சாப்பிடுற அயிட்டங்களை பெயருக்கு முன்னாடி சேர்த்துக்கிட்டா பெரிய காமெடியனா ஆகிடலாம்!
மொழி என்பது...
பெரும்பாலான மொழிகளில் 50 ஆயிரம் சொற்களுக்கு மேல் உள்ளன. ஆனால், ஒரு மனிதர் ஒரு நாளைக்கு சில நூறு வார்த்தைகளைத்தான் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்.
மை.பாரதிராஜா
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்