மாப்ள சிங்கம் first look



அஞ்சலிக்கு அசத்தல் ரீ என்ட்ரி!

தேனியில் ஷூட்டிங்... தங்க ஜரிகை மினுமினுக்கும் பட்டு வேஷ்டி, ஜிகுஜிகு மஞ்சள் சட்டை காஸ்ட்யூமில் விமல். பாவாடை தாவணியில் பளபள பட்டாசாக அஞ்சலி. படம் பேர் ‘மாப்ள சிங்கம்’ என்பது சொல்லாமலே தெரிகிறது.

‘‘அவுட் அண்ட் அவுட் இது காமெடி பேக்கேஜ். ஒரு ஊர்ல ரெண்டு குரூப்புக்கு இடையே நடக்கற பிரச்னைகள் மற்றும் சம்பவங்களை காமெடி கலந்து சொல்லியிருக்கேன். சூரி, சிங்கமுத்து, மயில்சாமி, ‘முண்டாசுபட்டி’ ராமதாஸ், காளிவெங்கட், சுவாமிநாதன்னு பெரிய காமெடிப் பட்டாளமே இருக்கு. அஞ்சலிக்கு இது அசத்தல் ரீ-என்ட்ரி!’’ - லன்ச் ப்ரேக்கில் பன்ச் இன்ட்ரோ தருகிறார் டைரக்டர் என்.ராஜசேகர்.

‘‘விமல் - அஞ்சலி காம்பினேஷன் என்றாலே வெற்றிக் கூட்டணிதாங்க. முறுக்கு மீசை, ஜிம்பாடின்னு இதில் வித்தியாசமான விமலைப் பார்க்கலாம். கேரக்டர் பேரே மிரட்டுற மாதிரி இருக்கும்... அன்புச்செல்வன். விமலுக்கு இது 25வது படம்.

அஞ்சலி கேரக்டர் பெயர் ஷைலஜா. ஒரு குரூப்போட தலைவரா ராதாரவி சார் நடிக்கறார். ஃபேமிலி சப்ஜெக்ட்னாலும் முழுக்க முழுக்க காமெடிதான் டார்கெட். முதல் படம் பண்ற எனக்கு இவ்வளவு ஆர்ட்டிஸ்ட் வச்சு படம் பண்றதே.. சவாலாகவும் இருக்கு. இன்ட்ரஸ்ட்டிங்காகவும் இருக்கு!’’‘‘எப்படி இருக்காங்க அஞ்சலி?’’

‘‘சூப்பர்ப். செட் கலகலன்னு இருந்தா அன்னிக்கு விமல் - அஞ்சலி இருக்காங்கனு தெரிஞ்சுக்கலாம். பேஸிக்காவே அவங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். ஸோ, எல்லா சீன்கள்லயுமே இயல்பா ஒரு கெமிஸ்ட்ரி வந்து உட்காருது. ‘இப்படிப் பாருங்க... இப்படி வெக்கப்படுங்க...’ன்னு சொல்ல வேண்டியதே இல்ல. இருக்குற எமோஷன்ஸை வேண்டிய அளவு அள்ளிக்கிட்டா போதும். அஞ்சலிக்கு இண்டஸ்ட்ரியில ஒரு சின்ன கேப் விழுந்துட்டது உண்மைதான். ஆனா, மெருகு கூடி மெழுகுச்சிலை மாதிரி திரும்பி வந்திருக்காங்க.

தமிழ் தெரிஞ்ச பொண்ணுங்கற ப்ளஸ் அஞ்சலிக்கு எப்பவும் உண்டு. இங்க ஷூட் போயிட்டிருந்தப்ப, அஞ்சலியைப் பார்த்துட்டு லோக்கல் தேனி மக்கள் அவ்வளவு பேர் திரண்டுட்டாங்க. அப்படி ஒரு அட்ராக்ஷன் இருக்கு அவங்ககிட்ட.

அப்புறம் அந்தக் கூட்டத்தையே பயன்படுத்தி ஒரு க்ரவ்டு சீன் எடுத்துக்கிட்டு அனுப்பி வச்சோம். அதே மாதிரி, சென்னையில போலீஸ் ஸ்டேஷன் செட் ஒண்ணு போட்டிருந்தோம். சீரியஸாகவே அதை நிஜ போலீஸ் ஸ்டேஷன்னு நம்பி கம்ப்ளைன்ட் கொடுக்க வந்துட்டார் ஒருத்தர். அஞ்சலியைப் பார்த்ததும்தான் இது சினிமான்னே அவருக்குத் தெரிஞ்சுது!’’
‘‘வேற ஸ்பெஷல்..?’’

‘‘ஆடம் கிரேக்னு வெள்ளைக்காரர் ஒருத்தர் படத்துல மெயின் கேரக்டர் பண்ணியிருக்கார். இதுவரை வந்த படங்கள்ல ஃபாரீனர்னாலே அவரை கிண்டல் அடிச்சு கலாய்ச்சிருப்போம். இதுல அப்படி இல்லை. நல்ல ரோல்ல அவரைப் பயன்படுத்தி இருக்கோம். ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கல்லூரியில அவர் பேராசிரியர். ஷூட்டிங்லயே விமல் அவரை ‘மச்சான்’னுதான் கூப்பிடுவார். ஆடம்க்கு காளிவெங்கட் தமிழ் சொல்லிக் கொடுக்க, பதிலுக்கு அவர் இவருக்கு ஆங்கிலம் கத்துக் கொடுக்க...

செட்லயே செம ரகளை. படத்துல ஊர்ப் பெரியவரான ராதாரவியும் ஃபாரீனரான ஆடம் கிரேவும் வர்ற சீன்கள்ல நான்ஸ்டாப் காமெடி கேரன்டி. பழைய கம்பீரமான ராதாரவி சாரை இதில் பார்க்கலாம். ‘முனீஸ்காந்த்’ ராமதாஸ் இதில் வில்லன். ‘முண்டாசுபட்டி’யில மாதிரி இதில் அவருக்கு ஹெவி கெட்அப் கிடையாது. இந்தப் படத்துக்கு அப்புறம் அவர் எல்லோருக்கும் தெரிஞ்ச முகமாகிடுவார்.

‘மதயானைக் கூட்டம்’ ரகுநந்தன் இசையமைக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கார். பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள் எழுதியும் ‘ஃபேஸ்புக்’கில் ஷார்ப்பான கமென்ட்டுகள் போட்டும் கவனம் பெற்றிருக்கும் டான் அசோக் வசனம். மனோஜ் பரமஹம்சாவிடம் உதவியாளரா இருந்த தருண்பாலாஜி இதில் கேமராமேனா அறிமுகமாகிறார். தவிர, துரைராஜ் ஆர்ட் டைரக்ஷன்னு பிரமாதமான டீம் செட் ஆகியிருக்கு!’’‘‘நீங்க டைரக்டரானது எப்படி?’’

‘‘சொந்த ஊர் காரைக்குடி. எம்.பி.ஏ படிச்சிருக்கேன். வங்கியில வேலை பார்த்தேன். அதை ரிசைன் பண்ணிட்டு எழில் சார்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். ‘தேசிங்குராஜா’ படத்துக்கு டயலாக் எழுதினேன். அந்தப் படத்தை தயாரிச்ச எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்துல கதை சொன்னேன். உடனே ஷூட்டிங் கிளம்பிட்டோம். எப்போ ஆரம்பிச்சோம்னு நினைச்சுப் பார்க்கறதுக்குள்ள க்ளைமேக்ஸ் ஷூட் போயிட்டோம். கோடையைக் கொண்டாட்டமாக்க கிளம்பி வர்றோம் பாஸ்!’’

- மை.பாரதிராஜா