என்னை அறியாமல் சிவாஜிக்கு துன்பம் கொடுத்தேன்!



இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் நினைவலைகள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25 படங்களை இயக்கியவர், எம்.ஜி.ஆருக்கு ‘அன்பே வா’ கொடுத்தவர், எஸ்.பி.முத்துராமனின் குருநாதர், சோகக் காட்சியிலும் நாகேஷை சோபிக்க வைத்தவர்...

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் கதாசிரியர், திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் பற்றி. பவள விழாவை நெருங்கிக்கொண்டிருக்கும் அவரின் திரையுலக அனுபவங்களை ‘நெஞ்சம் நிறைந்த நினைவுகள்’ என்ற பெயரில் வசந்தா பிரசுரம் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறது. இப்புத்தகத்தை நல்லி குப்புசாமி வெளியிட, நடிகர் சிவகுமார் பெற்றுக் கொண்டார்.

‘‘திருலோகசந்தரை பற்றி நினைக்கும்போதெல்லாம் என் மனம் நடிகர் அசோகனுக்கு தவறாமல் நன்றி சொல்லும். என்னுடன் உரிமையோடு பழகிய அசோகன், எனக்குப் பலரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர்களில் முக்கியமானவர் திருலோக்.

தினமும் காலண்டரில் தேதி கிழிக்க மறந்தாலும் மறப்பேனே தவிர, திருலோக்குடன் ஒரு தரமாவது பேச மறக்க மாட்டேன். அவருடன் பேசுவதற்கென்றே பிரத்யேகமாக ஒரு மொபைல் வைத்திருக்கிறேன்’’ என தன் உற்ற நண்பர் குறித்து நெகிழ்ந்து மகிழ்கிறார் ஏவி.எம்.சரவணன்.
அந்த நூலில் இருந்து சில நினைவலைகள் இங்கே...

*இந்த புத்தகத்தை நான் எழுத பிள்ளையார் சுழி போட்டதே ஏவி.எம்.சரவணன் அவர்கள்தான். ‘அன்பே வா’ ஏவி.எம்.மின் முதல் கலர் படம். 50வது படம். அப்போது எம்.ஜி.ஆர் வெற்றிப்படங்களுக்கு சில இலக்கணங்கள் இருந்தன.

அவர் எளியவராக இருப்பார். ஏழைகளின் கஷ்டத்தைத் துடைக்க பாடுபடுவார். புருஷனால் கைவிடப்பட்ட, அல்லது விதவையான ஒரு தாய் அவருக்கு இருப்பார். அம்மா சொல் தட்டாமல் பாடுபடுவார்; அல்லது கற்பழிக்கப்பட்ட தங்கைக்காகப் போராடுவார்.

இவர் வெறுத்துச் செல்லச் செல்ல, பெண்கள்தான் இவரைத் தொடர்வார்கள். பல வேஷங்களைப் போட்டு வில்லன்களைப் பழிவாங்குவார். அதிகமான டான்ஸ் ஆட மாட்டார். இப்படி பல லட்சணங்கள் கட்டாயம் இருக்கும். ஆனால் ‘அன்பே வா’வில் பிறவி கோடீஸ்வரன். தாய், தந்தை கிடையாது. படத்திற்கு பூபோடும் காட்சிகள் கூட கிடையாது.

அட்டகாச புருஷன், குறும்புக்காரன். ஏழைகள் யாரையும் அவர் பிரமாதமாகக் காப்பாற்றி விடவில்லை. நியாயம் கேட்கும் சீன்கள் கிடையாது. காதலியிடம் தோற்றுப் போவார். நடனங்கள் நிறைய உண்டு. நானும், டான்ஸ் மாஸ்டர் சோப்ரா சாரும், கேமராமேன் மாருதிராவும் முன்பே பேசி வைத்துக்கொண்டபடி வேலையை ஆரம்பித்தோம். சோப்ராவின் கடினமான நடன அசைவுகள் அத்தனையையும் பிரமாதமாக ஆடி அசத்தினார் எம்.ஜி.ஆர்.

*சினிபாரத் என்ற கம்பெனியைத் தொடங்கி என்னுடைய மனைவியை முதலாளியாக்கினேன். அதில் தயாரித்த படம் ‘பாபு’. சிவாஜி அந்தப் படத்தில் சிறிது நேரம்தான் இளமை வேடத்தில் வருவார். உடனே முதியவராகிவிடுவார். காசநோயால் பீடிக்கப்பட்டவராக வாட்டி எடுக்கும் இருமலுக்கு நடுவே ரிக்ஷா இழுக்கும் தொழிலைச் செய்து கொண்டிருப்பார். காசநோய்க்காரனின் அடிமார்பில் இருந்து வரும் வேதனை கலந்த இழுப்போடு கூடிய கபம் கட்டிய ஈர இருமல் தொடர்ந்து வரவேண்டும். அதிகமாக இருமிவிட்டால் சுத்தமாகப் பேச வராது. அதனால் அவர் இருமலை நான் எடுத்துக்கொண்டேன். நான் இருமும் சத்தமும் ஒலிப்பதிவாகும்.

ஒருநாள் அதிகமாக அவரை ரிக்ஷாவை இழுத்துக்கொண்டு ஓடச் சொல்லிப் படமெடுத்தேன். ஒரு கட்டத்தில் சிவாஜி, தன் மார்பைப் பிடித்துக்கொண்டு என்னிடம் வந்தார். ‘திருலோக்... நான் நிஜ ரிக்ஷாக்காரன் இல்லை. எனக்கு ரிக்ஷா இழுத்துப் பழக்கமும் இல்லை. உடம்பு படபடவென்று வருகிறது. மார்பு வலிக்கிறது. கொஞ்சம் ஓய்வு கொடுக்கிறீர்களா?’ என்று கேட்டார். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட அவருக்கு என்னை அறியாது நான் கொடுத்த துன்பத்தை அப்போதுதான் உணர்ந்தேன்.

*‘தெய்வ மகன்’ படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு ஆங்கில வசனக் கோர்வையோடு அமெரிக்கா சென்றது. ஒலிம்பிக்கில் ஜெயிப்பதற்கும், ஒரு கூட்டு முயற்சி தூண்டுதல் அவசியம். இது தாயில்லாப் பிள்ளையாக அங்கு போய் நின்றது. போற்றுதலோடு வந்தது. இந்தப் படம், சிவாஜி பயணித்த பாதையில் ஒரு மைல்கல்.

தொகுப்பு: மை.பாரதிராஜா
(‘நெஞ்சம் நிறைந்த நினைவுகள்’ - ஏ.சி.திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், விலை: ரூ.220/- தொலைபேசி: 9094875747)