அவன் அவள் unlimited



காலமெல்லாம் காதலிக்கப்படுங்கள்!

‘நெருப்பு மூட்டுங்கள்’ - இதுவும் முக்கியமான காதல் டிப்ஸ். அதற்காக, கையில் தீப்பெட்டியோடு அலைய வேண்டாம். இங்கே நெருப்பு என்பது ஓர் குறியீடு. அந்தக் காலத்தில் ஆண்கள் கல்லைத் தேய்த்து கஷ்டப்பட்டு நெருப்பை உண்டாக்கினார்கள். அதன்மூலம் தன் அன்புக்குரியவளுக்கு கதகதப்பையும் உணவையும் தந்தார்கள். பெண்கள் அந்த நெருப்பை அணைக்காமல், அவசர கால வெளிச்சத்துக்காக பாதுகாத்து வைத்திருப்பார்கள்.

நெருப்பை உருவாக்க முடியாதது ஆணுக்கு இழுக்காகவும், நெருப்பைப் பாதுகாக்க முடியாதது பெண்ணுக்கு இழுக்காகவும் இருந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றும் நாம் வீட்டுக்கு விளக்கேற்ற ஒரு பெண் என்கிறோம். ‘‘மேட்ச் பாக்ஸ் இல்லாத காலத்தில் ஆண் பெண் மேட்ச்சிங் நடந்தது இப்படித்தான்’’ என்கிறார்கள் நம் ஊர் மானுடவியலாளர்கள்!

வேஷம் போட்டு விரும்பப்படுவதை விட, உன் உண்மை நிலைக்காக வெறுக்கப்படுவது மேல்!
ஆண்ட்ரே கிடே

ஆக, ‘‘நெருப்பு மூட்டுங்கள்’’ என்றால், ‘பெண் செய்யக் கஷ்டப்படும் உடலுழைப்பு சார்ந்த உதவிகளை ஆண் செய்வது’ என்று அர்த்தம். வீட்டில் தேங்காய் உடைத்துக் கொடுப்பது, சிலிண்டர் மாற்றுவது, சப்பாத்தி மாவு பிசைவது எல்லாம் இந்தக் கால நெருப்பு மூட்டல் எனலாம்!

பூ கொடுங்கள்...

‘ப்பூ... இதுல என்ன இருக்கு?’ என இன்றைய இளைஞர்கள் இதில் அசட்டை காட்டுகிறார்கள். ‘லவ் சொல்லத்தான் ரோஸ்... அதுக்கப்புறம் எதுக்கு?’ என்கிறார்கள். ஆனால், பெண்களைப் பொறுத்தவரை பூ என்பது வசந்த காலத்தின் குறியீடு. ‘இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை’ என்ற சந்தோஷத்தை பூ தருகிறது. அதனால்தான் பஞ்சம் பட்டினி காலத்திலும் எங்கேயாவது ஒரு பூவைத் தேடிப் பிடித்து காதலிக்கு பரிசளித்தான் ஆதி மனிதன். பெண்களிடம் இந்த ரொமான்ஸ் உள்ளுணர்வு இன்றைக்கும் வேலை செய்கிறது. மல்லிப்பூ - அல்வா பழசில்லை... எவர்கிரீன் ஃபார்முலா!

டான்ஸ்...

நடனமும் காதலும் பிரிக்க முடியாதது. கலைத்துறையில் நடனக் கலைஞர்கள் காதல் இளவரசன்களாகவும் இருந்திருக்கிறார்கள். இசையின் ரிதத்தை உணரும் ஆற்றல் ஆண்மைக்கே உரிய தனித்துவம். எந்தப் பயிற்சியும் இல்லாமல், ஆண் குழந்தைகளால் பாடல்களுக்கு ஓரளவு தாளம் போடவும் நடன அசைவுகள் தரவும் முடியும். ஆணுக்குள் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் செய்யும் வேலை இது. ஸோ, நடனம் என்பதே மறைமுகமான ஒரு ஹார்மோன் டெஸ்ட்தான். ஆடும் சூழல் வந்தால் தயங்காமல், வெட்கப்படாமல் ஆடுங்கள். எல்லோருக்கும் ஆட்டம் வரும்.

சாக்லெட்

மல்லிப்பூ - அல்வா விஷயத்தில் நாம் மல்லிப்பூ பற்றித்தான் பேசினோம். அல்வா எதற்கு? இனிப்பு நிச்சயம் காதல் பூஸ்டர்தான். குறிப்பாக சாக்லெட்டில் காதலைத் தூண்டும் செரட்டோனின் உள்ளிட்ட அவசிய வேதிப்பொருள்கள் உள்ளன. அல்வாவோ, சாக்லெட்டோ... இனிப்பு உடனடியாக உடலுக்கு சக்தி தருகிறது, நிறைய சாப்பிட்ட திருப்தியைக் கொடுக்கிறது. காதலுக்கு இவை அவசியம்! எனவே,
‘ஸ்வீட் எடு... கொண்டாடு’!

ஆண்களுக்கு காதல் டிப்ஸ் ஓகே... பெண்களுக்கு? அவர்களின் கதை முற்றிலும் வேறு. ‘பெண்’ என்ற வார்த்தைக்கே எதிர்பாலின ஈர்ப்பு உண்டு என்பதால், ஆண்களைக் கவர்வது இயல்பாய் நடக்கும். அதற்காக டிப்ஸ் தர வேண்டிய அவசியமே இல்லை. ஆண்களைத் தக்க வைப்பதில்தான் பெண்கள் வீக். உயிரியல்படி, ஒரு ஆண் பெண்ணை வெறுக்க மாட்டான். ஆனால், காதலன் காதலியை வெறுப்பான்... கணவன் மனைவியை வெறுப்பான். பழகப் பழக பெண்ணும் ஏன் புளிக்கிறாள் - சலிக்கிறாள்? இதை வெல்ல பெண்களுக்கு வழி காட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் சி.ஆர்.செலின்...

‘‘இன்று திருமண முறிவுகளுக்கும் காதல் பிரேக்கப்களுக்கும் முக்கியமான காரணம், பெண்கள் ஆண்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வதுதான். அந்தக் காலத்தில் பெண் எப்படி உதறித் தள்ளினாலும் ஆண் அவளிடமே சுற்றிச் சுற்றி வந்து நிற்பான். அது இயற்கை. விலங்குகளிடம் இப்போதும் இதுதான் நடக்கிறது. அதே மாதிரியான ஒரு மாறாத அன்பை இந்தக் காலத்திலும் பெண்கள் எதிர்பார்ப்பது தவறு.

நம் வாழ்வியல் நிறைய மாறிவிட்டது. செயற்கைத்தனம் நிறைய புகுந்தாலும் அதுதான் ஆண் - பெண் சமத்துவத்தை சாத்தியமாக்கி இருக்கிறது. ஆக, இன்று பெண்ணை ஆண் பாராட்டுவது போலவே, வர்ணிப்பது போலவே பெண்ணும் செய்தாக வேண்டும். ஓவர் டோஸ் ஊடல், பொசுக்கும் அளவுக்கு பொசஸிவ்னஸ் இதெல்லாம் கைவிட வேண்டியவை!’’ என்கிற செலின், தன் கவுன்சிலிங் அனுபவத்தைக் கொண்டு மேலும் சில முக்கிய பாயின்ட்டுகளை பட்டியலிடுகிறார்.

*எங்கே விட்டுக் கொடுக்க வேண்டும், எங்கே உறுதியாக நிற்க வேண்டும் என்பது இன்று பல பெண்களுக்குத் தெரிவதில்லை. சாதாரண டி.வி ரிமோட் பிரச்னைகளுக்கெல்லாம் சண்டை போட்டு ‘ராட்சஸி’ எனப் பெயர் வாங்குவதால், முக்கியமான பெரிய விஷயங்களில் அவர்களின் தரப்பு எடுபடாமல் போய்விடுகிறது. (அதானே, ஃபேஸ்புக் முக்கியமா? பேங்க் பாஸ்புக் முக்கியமா?)

*‘பெண்களே இப்படித்தான்’ என்று சொன்னால் ஜெனரலைஸ் பண்ணக் கூடாது என தடை போடும் பெண்கள், ‘ஆண்களே இப்படித்தான்’ என்பதை மட்டும் ஈஸியாகச் சொல்லி விடுவார்கள். அடுத்தவரோடு ஒப்பிடுவதிலும் இதே கதைதான். ஒரு பிரச்னைக்காக காதலனோடு / கணவனோடு விவாதம் வந்தால், அந்தப் பிரச்னையை மட்டும் பேச வேண்டும். முந்தைய கால சம்பவங்களையும் அவன் குடும்ப உறுப்பினர்களின் குணங்களையும் அங்கே போட்டு உடைப்பது காதலையும் உடைத்து விடும்.

*காதல் / கல்யாணம் உறுதியாகி விட்டால், ‘அப்பாடா’ என்ற நிம்மதி மனப்பான்மை வந்துவிடுகிறது நம் பெண்களுக்கு. தங்கள் தோற்றம், மேக்கப், டயட், பொது அறிவு என அனைத்தையும் கைவிடுகிறார்கள். அப்புறம் காதலித்த பெண்ணை - வரன் பார்த்த பெண்ணை காணோமே என அவன் தேட மாட்டானா என்ன? ஈர்ப்பு இருக்கும் வரைதான் உறவு... உறவுக்காக ஈர்ப்பு அல்ல. இந்த அடிப்படையை இருவருமே புரிந்துகொள்ள வேண்டும்.

*என்னதான் ஆணும் பெண்ணும் சமமாக வேலைக்குப் போனாலும் ‘ஆண்தான் குடும்பத்துக்காகப் பொருளீட்ட வேண்டியவன்... நான் என் செலவுகளுக்காக சம்பாதிக்கிறேன்’ என நினைக்கும் போக்கு இன்று அதிகரித்திருக்கிறது. இது குடும்பத்தின் ஆண் - பெண் சமநிலையை பாதிக்கவே செய்யும். அது பெண்களுக்கு நல்லதில்லை!

*அதிக எதிர்பார்ப்பு ஆபத்து தான். சினிமாவில் வரும் கற்பனை ரொமான்ஸ் காட்சிகளை எதிர்பார்த்து வடிகட்டிக் கொண்டிருந்தால் நிஜ உலக ஆண்கள் யாருமே தேற மாட்டார்கள். துணையின் பல குறைகளை அனுசரித்து வாழ்வதுதான் வாழ்க்கை. இதில் பர்ஃபெக்ஷன் எதிர்பார்ப்பதே அறியாமைதான்.

ஆண்கள்னா பெண்களைக் கவர டிப்ஸ்... பெண்கள்னா ஆண்களைக் கவர டிப்ஸ்... இதேதானா? உலகத்தில் இந்த விதி சில சமயம் மாறுவதும் உண்டே! ஆண்களுக்கு ஆண்கள் மீதும் பெண்களுக்கு பெண்கள் மீதும் காதல் என்றால்..? நாம் ‘ச்சீய்’ என ஒதுக்கும் ‘அவர்களை’ப் பற்றியும்...

தேடுவோம்...

உயிரியல்படி,ஒரு ஆண் பெண்ணை வெறுக்க மாட்டான். ஆனால், காதலன் காதலியை வெறுப்பான்... கணவன் மனைவியை வெறுப்பான். பழகப் பழக பெண் ஏன் புளிக்கிறாள் - சலிக்கிறாள்?

உறவுகளைக் கெடுத்துக்கொள்ளும் ஆண், பெண் டயலாக்ஸ்...

பெண்கள்                                                      
நான் விரும்புறது எதையாவது வாங்கிக் கொடுத்திருக்கியா?      
நான் பேசுறதை  நீ கேக்கறதே இல்ல!                          
உன் தங்கச்சி டார்ச்சர்டா!                                      

ஆண்கள்
நான் வாங்கிக்  கொடுத்ததுஎதையாவது நீ விரும்பியிருக்கியா?
நான் சொல்றதை நீ கேக்கறதே இல்ல!
உன் தங்கச்சி சூப்பர்டி!


கோகுலவாச நவநீதன்