உயர் கல்வி நிலையங்களில் ஏன் அதிகமாக தற்கொலைகள் நிகழ்கின்றன?



சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் போன்றோரின் தற்கொலைகள், உயர்கல்வி நிலையங்களின் கல்விச்சூழல் குறித்து பல்வேறு

கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்பி கனிமொழி, “சென்னை ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் 52 மாணவர்கள் 10 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடு நிலவுவதாக 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உயர் கல்வி நிறுவனங்கள் பாரபட்சம் காட்டும் இடமாக இருக்கக் கூடாது...” என்று கூறியிருக்கிறார். மேலும், “யாரைக் காப்பாற்ற மத்திய அரசு முயல்கிறது... சம்பந்தப்பட்டவர்களை ஏன் கைதுசெய்யவில்லை?” என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

  ஃபாத்திமாவின் தற்கொலை ஒன்றும் உயர் கல்வி நிலையங்களில் நிகழும் முதல் சம்பவமல்ல. 2016ம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா, ‘தனக்கு சாதி ரீதியிலான நெருக்கடிகள் தரப்படுகின்றன’ எனக் கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார்.

2017ம் ஆண்டு தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன், 2019 மே மாதம் மும்பை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராகப் படித்த டாக்டர் பாயல் தத்வி, ஹைதராபாத் ஐஐடியில் இந்த ஆண்டு மட்டும் இரண்டு மாணவர்கள் தற்கொலை... என பட்டியல் நீள்கிறது. இதில் வெளியில் வராத செய்திகளும் ஏராளம்.

2015ம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் விபத்து மற்றும் தற்கொலை தொடர்பான தரவுகளின்படி, தமிழகத்தைச் சேர்ந்த 11.6% மாணவர்கள் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். இது இந்திய அளவில் இரண்டாவது இடம்.கல்வி நிலையங்களில் சாதி, மதம் பார்க்கப்படுகிறதா?இந்தியாவைப் பொறுத்தவரை சாதிப் பாகுபாடுகள் எல்லா இடங்களிலும் இருந்தாலும் அது ஒவ்வொரு இடங்களுக்கு ஏற்றாற்போல் பிரதிபலிக்கிறது. இது நேரடியான மோதலாகவும், கொலைகளாகவும் முடிகிறது.

கல்வி என்று பார்க்கும் போது, அனைவருக்கும் சமமான கல்வி கிடைத்தால் அந்த அறிவின் மூலம் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் போகும் என்று பலர் விரும்பினாலும், அது நடைமுறையில் நிகழ்கிறதா என்று விவாதிக்க வேண்டியுள்ளது. கல்வி அறிவினால் பொருளாதார முன்னேற்றம், அரசு வேலை, உயர் பதவிகள் எனச் செல்லும் போது எல்லோரும் அவர்களிடம் பயன்பெறும் அளவிற்கு வளர்கிறார்கள்.

ஆனால், இதில் முழுமையான மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்று பார்த்தால் அப்படி இல்லை.கல்வியினால் சாதியை ஒழிக்க முடியுமென்று பலர் முன்நின்றார்கள். இதனால் இட ஒதுக்கீடு மூலம் எல்லோருக்கும் கல்வி சென்றடைய வேண்டுமென்று சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. நடைமுறை என்று பார்த்தால் அது முற்றிலும் முரணானதாகவே இருக்கிறது. இதனோடு இட ஒதுக்கீட்டின் மூலம்  வருபவர்களுக்கு திறமையும் தகுதியும் இல்லை என்ற வாதமும் கூடவே எழுகிறது.  

சாதாரண ஒரு நபரிடம் சாதிய வேறுபாடு காட்டுவதை விட , ஒரு ஸ்காலரிடம் அதனைக் கடத்துவது இங்கு நுட்பமாக நிகழ்கிறது.
எதெல்லாம் உயரியது என்று இந்த சமூகத்தில் சொல்லப்படுகிறதோ அதெல்லாம் குறிப்பிட்டவர்களிடம்  மட்டும் இருக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்.

அதற்குப் போட்டியாகவோ அல்லது அவர்களுக்கு மேல் மற்றவர்கள் வருவதையோ விரும்புவதில்லை. இந்த ஈகோ இங்கு பெரும் பங்காற்றுகிறது.
‘உன்னை நான் நேரடியாகச் சீண்டினால்தானே சட்டங்கள் மூலமாக என்னைத் தண்டிக்க முடியும்? உன்னை வைத்து உன்னையே காயப்படுத்திக் கொள்ளும்போது அதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்’ என்று விலகிக் கொள்கிறார்கள்.  

கை கழுவும் இடம் கூட வெஜ், நான் வெஜ் என்ற பாகுபாடுகள் கொண்டுள்ளதைக் காண முடிகிறது. ஒரு நெட்வொர்க் லாபி இங்கு அரங்கேறுகிறது.
சென்னை ஐஐடியில் 1996 காலகட்டத்தில்தான் முதல் தலித் மாணவர் பிஎச்.டி படிக்கச் சேருகிறார். அவருக்கு அன்று அறை கொடுக்க மறுக்கப்பட்டிருக்கிறது. அன்று முதல் இன்று வரை இந்தப் பாகுபாடு தொடர்கதையாகவே இருக்கிறது.   நண்பர்கள் கிடையாது;போட்டியாளர்கள் மட்டுமே!

இதுபோன்று உயர் கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவர்கள் தங்களது ஆரம்பப்பள்ளி முதல் பன்னிரண்டாம் வகுப்போ, கல்லூரியோ முடிக்கும் வரை இவர்கள்தான் முதன்மை மாணவர்களாக இருக்கின்றனர்.  இவர்கள் ஐஐடி போன்ற  நிலையங்களுக்கு வரும்போது அங்கு கடைசி மாணவனாக இருக்கக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

வருபவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்களாக இருக்கும்போது போட்டியான சூழல் உருவாகிறது. இப்போட்டியில் முதலிடம் பறிபோய் அடுத்தடுத்த இடங்கள் கிடைக்கும்போது மன ரீதியாக நம்பிக்கை இழக்க நேரிடுகிறது. உயர்கல்விச் சூழலின் தனித்துவமான அம்சம் மாணவர்கள் தங்களை தனிநபர்களாக உணர்ந்தபிறகு அதில் ஈடுபடுவதுதான். எனவே, பள்ளிகளைப் போலவோ அல்லது இளங்கலை படிப்பு போலவோ அவர்களால் சுலபமாக தங்கள் போதாமை போன்று தோன்றக் கூடியவற்றை எடுத்துக்கொள்ள முடிவதில்லை. அவர்களது சுயமரியாதைக்கான உணர்வுகள் மிகவும் கூர்மைப்படுகின்றன.

தற்கொலை செய்து கொண்டவர்களால் உயர்கல்வி நிறுவனங்களில் கொடுக்கப்படும் அழுத்தம், போட்டி வெளியே தெரிகிறது.
இதைத் தாண்டி தங்களது படிப்பைப் பாதியில் நிறுத்தியோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.  

ஒரு சிலர் தங்கள் குழந்தைகளை ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதற்காக ஆறாம் வகுப்பு முதலே தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்த்து விடுகின்றனர். இது போன்ற தனியார் நிறுவனங்களின் மன அழுத்தத்தினாலும் பலர் தற்கொலை செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இவர்களது ஒரே நோக்கம், படித்து முடித்து நல்ல நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வது. இதனால் கூட படிப்பவர்களை மற்ற மாணவர்களாகவோ, நண்பர்களாகவோ பார்க்க முடிவதில்லை. போட்டியாளர்களாகவே மட்டும் பார்க்கிறார்கள்.

ஆசிரியர்களின் பொறுப்புமாணவர்களைக் கையாளும் விதத்தில் ஆசிரியர்களும் தகுந்தவர்களாக இல்லை என்பதே வருத்தமான செய்தி. ஆசிரியர்களே பல சமயங்களில் பிற்போக்கு மனோபாவங்களுடன் இருக்கிறார்கள்.எல்லா மாணவர்களையும் ஒன்றாகவே பாவிக்கின்றனர். இதுதான் மிகப்பெரிய ஆபத்து. இங்கு பொருளாதார ஏற்றத்தாழ்வு மட்டும் பிரச்னையில்லை. அதைவிடப் பெரிய பிரச்னை கலாசார மூலதனம்.

அதாவது, குடும்பப் பின்னணியால் ஏற்படும் பொது அறிவு, சமூக ஆற்றல் ஆகியவற்றில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் வேறுபாட்டினை அறிந்து அவர்களை அணுகுமுறையில் சமன் செய்வது அவசியமான ஒன்று. இது பெரும்பாலும் நிகழ்வதில்லை.

மிகப்பெரிய கல்விச் சீர்திருத்தங்கள் நிகழாவிட்டாலும், ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்றுவது அவசியம். தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள், ஆசிரியர்களின் அங்கீகாரத்தையே பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.

ஆசிரியர்கள் இழைக்கும் சிறு அநீதியும் கூட அவர்கள் மனநிலையை முற்றிலும் குலைத்துவிடும் ஆபத்து இருக்கிறது. குறிப்பாக மாணவர்களின் சமூக அடையாளம் சார்ந்த எந்த ஒரு மன விலக்கம் ஆசிரியரிடம் இருந்தாலும் அது மாணவரின் உள்ளுணர்வுக்குத் தெரிந்துவிடும்.

ஆசிரியர்கள் மாணவர்களின் திறன்களை வளர்க்காவிட்டால் பெரிய பிரச்னை எதுவுமில்லை. ஆனால், அவர்கள் உள்ளன்புடனும், உற்சாகத்துடனும் மாணவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கை ஏற்படும்படி நடந்துகொள்ளாவிட்டால் அது மிகப்பெரிய சமூகப் பிரச்னையாக மாறும்!

அன்னம் அரசு