நியூஸ் சாண்ட்விச்



தென்னிந்திய நடிகர்களின் ரீயூனியன்

ஒவ்வொரு வருடமும், 80களின் பிரபலமான நடிகர்கள் ஒன்றுசேர்ந்து தங்கள் நட்பை கொண்டாடுவது வழக்கம். இந்த வருடமும், தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் இல்லத்தில் நடிகர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தங்கள் ரீயூனியனை கொண்டாடினர்.
இதில் மோகன்லால், சரத்குமார், ராதிகா, குஷ்பு, நாகார்ஜுனா, பாக்யராஜ், ஜாக்கி ஷெராஃப், ஜெயப்பிரதா போன்ற தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழி நடிகர்களும் கருப்பு - தங்க நிறத்தில் உடைகள் அணிந்து கலந்துகொண்டனர்!

கேரளாவில், இனி நோ பிளாஸ்டிக்!

கேரள அரசின் அறிவிப்பின்படி, வரும் ஜனவரி 2020 முதல் ஒரு முறை மட்டுமே பயன்படும் ப்ளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக தடைக்கு வரஉள்ளன. சிப்ஸ் பாக்கெட்டுகள், ஜூஸ் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கப்கள், தட்டு, ஸ்பூன், பைகள், தெர்மாகோல் பொருட்கள் என இதில் பல பொருட்கள் அடங்கியுள்ளன. விதியை மீறும் வணிகர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் முதல் முறை ரூ.10,000, இரண்டாவது முறை ரூ.25,000, மூன்றாவது முறை ரூ.50,000 அபராதம் விதிக்க அரசு முடிவுசெய்துள்ளது.

ரன்வீர்சிங்குடன் பி.டி.உஷா

நடிகர் ரன்வீர்சிங் நடிக்கும் விளம்பரத்தில், இந்தியாவின் அதிவேக தடகள வீராங்கனை பி.டி.உஷாவும் இணைந்து நடித்துள்ளார். இது ஒரு வங்கிக்காக எடுக்கப்பட்ட விளம்பரப்படம். இதன் அனுபவத்தை டுவிட்டரில் பகிர்ந்த ரன்வீர், இதை ஒரு மறக்கமுடியாத அனுபவமாய் குறிப்பிட்டு, விளையாட்டு வீராங்கனைகள் அனைவருமே தனித்தன்மையுடன் என்றுமே நீங்காத வெற்றிக்கான ஒளியுடன் இருப்பதாய் குறிப்பிட்டுள்ளார்.

நியூட்டெல்லா சாக்லெட் ஹோட்டல்!

சாக்லெட் யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் இப்போது குழந்தைகள் இட்லி தோசைக்குக் கூட சட்னிக்கு பதில் நியூட்டெல்லா சாக்லெட் ஸ்ப்ரெட்டைத்தான் கேட்கின்றனர். இப்படி உலகம் முழுவதும் பல சாக்லெட் பிரியர்களை உருவாக்கிய நியூட்டெல்லா நிறுவனம் அடுத்து, சாக்லெட் ஹோட்டலை அறிமுகம் செய்யவுள்ளது.

2020ல், ஜனவரி 10 - 12 வரை சாக்லெட் பிரியர்களுக்காக மட்டும், இலவசமாக இயங்கவுள்ளது. இந்த ஹோட்டல் முழுவதுமே நியூட்டெல்லா தீமில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சாக்லெட் சொர்க்கமாக இருக்கும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்க்கஸில் ஹோலோகிராம் விலங்குகள்

சர்க்கஸ் விலங்குகள் சந்திக்கும் துன்பத்தினால் இனி புலி, யானை, சிங்கம், குதிரை போன்ற விலங்குகளைப் பயன்படுத்தக்கூடாது என்று முடிவுசெய்யப்பட்டது. இதனால் சர்க்கஸ் தொழில் பாதிக்கப்பட்டது.  ஆனால் 1976லிருந்து இயங்கி வரும் ரங்கோலி என்ற புகழ்பெற்ற ஜெர்மன் சர்க்கஸ் அமைப்பு, இதற்கு மாற்று வழி கண்டுபிடித்துள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பம், எதையும் சாத்தியமாக்கும் என்று ஹோலோகிராம் 3டி விலங்குகளை முதன்முறையாக சர்க்கஸில் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது!வண்ணமயமான இந்த நிகழ்ச்சியில், பிரமாண்ட ஹோலோகிராம் விலங்குகள் தோன்றி மாயவித்தைகள் செய்து மக்களை மகிழ்வித்தன.

பிரதமர் பணம் தருகிறார் என்று நினைத்தேன்!

எஸ்பிஐ வங்கியில் ஒரே பெயரைக் கொண்ட இருவருக்கு அதிகாரிகள் ஒரே கணக்கு எண்ணைக் கொடுத்துள்ளனர். ரோனி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், ஹுக்கும் சிங். சில மாதங்களாக தன் வங்கிக் கணக்கில் பல ஆயிரங்களில் பணம் டெபாசிட்டாவதை கவனித்தார். அந்தப் பணத்தை பிரதமர்தான் அனுப்புகிறார் என்று ஆறு மாதத்தில் ரூ.89,000 வரை எடுத்துள்ளார்.

உண்மையில் பணம் போட்டது ரூராய் என்ற கிராமத்தைச் சேர்ந்த வேறொரு ஹுக்கும் சிங்!ரூ.1,40,000 இருக்க வேண்டிய தன் சேமிப்புக் கணக்கில் வெறும் ரூ.35,000 இருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டவர், வங்கியில் புகார் செய்தபோது இந்தக் குளறுபடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது!

தில்லியில் வாழ்ந்தால் 17 வருட ஆயுசு குறையும்!

மக்களின் ஆயுட்காலத்தைப் பொறுத்து, ஒரு நாடு எவ்வளவு வளர்ந்திருக்கிறது, செழிப்புடனிருக்கிறது என்று கணித்துவிட முடியும்.
சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆய்வு, தில்லி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தில்லியின் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் மோசமாகும் நிலையில், காற்றில் பல நச்சுப்பொருட்களும் கலந்திருக்கின்றன.

இதனால் ஆய்வின் முடிவில், தில்லியில் வாழும் மக்களின் ஆயுட்காலம் 17 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தது. ஏற்கனவே மக்கள் பல சுவாசப் பிரச்னைகளைச் சந்தித்துவரும் நிலையில் இந்தச் செய்தி, மக்களுக்கு இடியாக இறங்கியுள்ளது!

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்