தொல்(லைக்) காப்பியம்



2021ம் ஆண்டின் அதிசயப் பிறவிகள்!

இன்னைக்கு தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்கிறதே தவிர நமக்குத் தெரிந்த வரையில் ‘தலைவர் பஞ்சம்’ இருப்பதாகத் தெரியவில்லை!
இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவர்கள் எல்லாம், 2021ல் நம்மைக் காக்கப் போகும் ரட்சகராக இன்றைக்கு கூறிக்கொள்வதுதான் முள் கத்தாழையை எடுத்து மூக்குக்குள் விடுவது போல எரிச்சலாக இருக்கிறது.

2021ல் முதல்வராக ஏற்கனவே முந்நூறு பேர் கருப்புச் சட்டை முதல் காவிச் சட்டை வரைக்கும் அணிந்துகொண்டு கனவுகளுடன் காத்திருக்கிறார்கள்.
இருப்பவர்கள் இம்சைகள் போதாதென்று புதுசாய் இறங்குபவர்கள் இம்சைகள் வேறு. திரைப்படங்களைப் படைத்தவர்களும் திரைப்படங்களில் நடித்தவர்களும் ஆண்ட மண்தான் தமிழ்நாடு. மறுப்பதற்கில்லை.

தொழிலின் உச்சியிலும், புகழின் உச்சியிலும் அவர்கள் இருக்கும்போதே அரசியலில் பங்கேற்றவர்கள். திரைப்படங்களையும் திரைத்துறையையும் தங்களின் அடையாளத்திற்கு பயன்படுத்தியவர்கள்.ஆனால், இன்றைக்கு இருப்பவர்களோ திரைப்படங்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். நாக்கில் நீர் ஊற நாட்டை ஆளவேண்டும் என நினைப்பவர்கள். அரசியலில் இருந்ததுமில்லை, அரசியல் செய்ததுமில்லை, அவர்களுக்கு அரசியல் புரிந்ததுமில்லை.

அதிசயம் நடக்கும், அற்புதம் நடக்குமென மக்களிடம் ஜிகினா வேலை காட்டுவது, கிட்டத்தட்ட தொப்பிக்குள் இருந்து முயலை எடுப்பது, தொண்டைக்குள் இருந்து ரிப்பன் எடுப்பது போன்ற ஜிம்மிக்ஸ் காட்டுவது போலத்தான்.

தேர்தல் வரும் நேரம் மட்டும் தலையைக் காட்டிவிட்டு மீதி நேரங்களில் டிவிக்குள் ஒளிந்துகொள்கிறார்கள் சிலர். ‘தேர்தல் வரும் போதுதான் கட்சியே அறிவிப்பேன், ஆனா எனக்கு வாக்களித்து முதல்வராக்கணும், மதர் பிராமிஸ் பண்ணு’ என சிரிக்கிறார்கள் சிலர்.

மொழியைக் காக்க, மண்ணைக் காக்க, மக்களைக்காக்க, மாணவர்களை காக்க சிறு துரும்பைக் கூட எடுத்து போராடாதவர்களுக்கு, நினைத்த
வுடனே நாடாள வேண்டுமாம்.

அரசியலில் சேவை செய்வதும், அடுப்படியில் சேவை செய்வதும் அவரவர் உரிமை. ஆனால், காலையில் எழுந்து மூஞ்சியைக் கழுவியவுடன் முதல்வராகணும், பல்லு விளக்குறப்பவே பிரதமராகணும், காபி குடிக்கிறப்ப கவர்னராகணும்னு குப்பைக் கனவுகளுடன் அரசியலுக்கு வருவது கடுப்பாகிறது.  

ஒரு கையில் செருப்பையும் ஒரு கையில் பொறுப்பையும் வைத்துக்கொண்டு காத்திருக்க மக்கள் பரதனும் இல்லை, இந்த நடிகர்கள் எல்லோரும் புனிதர்
களுமில்லை. இதுவரை சம்பாதித்த பணத்தில் தமிழக மக்களுக்கு ஒரு பொரியுருண்டை கூட வாங்கித் தராதவர்களா புது பெயிண்ட் அடித்து பூமி உருண்டையில் தமிழகத்தை தனித்துக் காட்டப்போகிறவர்கள்?  

வீட்டிற்குள் இருக்கும் பிரச்னைகளைக் கூட தீர்க்க இயலாத இந்த நடிகர்களால்தான் நாளை நாட்டில் இருக்கும் பிரச்னைகளைத் தீர்க்கமுடியுமென நம்பும் அளவுக்கா தமிழக மக்கள் முட்டாள்கள்?

மதுரையின் ஹாரி பாட்டர்!மதுரையில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில், மனு கொடுக்க வந்த மக்களைப் பார்த்து, ‘பஞ்சப் பரட்டையாக தலைக்கு எண்ணெய் கூட தேய்க்காமல் கோரிக்கை மனு தர வந்துள்ள உங்களின் ஏழ்மை நிலையைப் பார்க்கும்போது எனக்கே பாவமா இருக்கிறது’ என குரல் உயர்த்தி, கேட்கிறவங்க மிரளும் அளவுக்கு திருவாய் மலர்ந்திருக்கிறார் தமிழக அமைச்சர் ஒருவர்.

யாரோ ஒரு காலில் விழாத அமைச்சர் பேசியிருந்தால், நாம் காதில் விழாத மாதிரி கடந்து விடலாம். ஆனால், இதைச் சொன்னவர், தெர்மாகோல்லையே டேமை மூடுன சயின்டிஸ்ட், டைனாசருங்களுக்கே வைத்தியம் பார்க்கும் தைரியமான டென்டிஸ்ட், முறுக்குனாலும் முள்ளு நகராத ஸ்பீடோமீட்டர், மதுரை மாவட்டம் தந்த ஹாரி பாட்டர்.

அண்ணன் சொல்லும் ஆழமான கருத்துகளுக்கு கமெண்ட் பண்ண ஃபேஸ்புக் உலகமே காத்திருக்கிறது. அவரது அடுத்த ஐடியாவை வைத்து மீம் போட வாட்ஸ் அப் உலகமே வெய்ட் பண்ணுகிறது. முடிந்தவரை பொறுத்து, பிறகு முடியாமல் வாழ்க்கையையே வெறுத்து தற்கொலை செய்ய போறவனிடம், அண்ணன் தெர்மாகோலில் டேப் ஒட்டுன போட்டோவைக் காட்டினால், ‘என்னடா அங்க இரைச்சல்? எனக்கென்னடா வாழறதுக்கு குறைச்சல்’னு, நாலு இன்ச் உள்ளம் முழுக்க, ஏழு டிஎம்சி நம்பிக்கை வெள்ளம் பாய எந்திருச்சு வருவான்.  

போன மாசம் இதே நாள்ல, கர்ப்பிணிப் பெண்கள் சீரியல் பார்க்காம கார்ட்டூன் பார்த்தால் பிறக்கிற குழந்தை சோட்டா பீம் மாதிரி ஆரோக்கியமா பிறக்கும்னு, அறுபது வருஷமா அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்ற விஷயத்தை அஞ்சு நிமிசத்துல உடைச்சுட்டு போன
நீங்களா இப்படி பேசுனீங்க?

சத்தியமா நினைச்சுப் பார்க்கலண்ணே இப்படி ஒரு மாறுதல, அரை பாட்டில் சரக்கும் அஞ்சு முறுக்கும் வச்சுதான் தேடினேன் ஆறுதல.  
ரோட்டுல போற யாரோ சொல்லியிருந்தா பரவாயில்லை, எங்க நெஞ்சில் குடியிருக்கும் ஹீரோ நீங்க இப்படி சொல்லலாமாண்ணே?
நல்லாட்சியும் இல்லாம, நாட்டுல உள்ளாட்சியும் இல்லாம நாலு வருஷம் இருந்தா, தாளிக்கிற எண்ணெய்ல இருந்து  தலைக்கு தேய்க்கிற எண்ணெய் வரைக்கும் ஒரு நொன்னையும் இல்லாமதான் இருப்பாங்க.

வாசலைக் கூட்டச் சொல்லி கொடுத்தாங்களாம் வௌக்குமாறு, அதுல ஒவ்வொரு குச்சியா எடுத்து காது குடைஞ்சானாம் கொழுந்தனாருங்கிற கதையா, கிடைச்ச ரெண்டாவது இன்னிங்ஸ்லயும் மொத்த டீமும் டக் அவுட் ஆகிட்டீங்க.

தன்மானத்தோட வாழ்ந்த மாநிலத்தை அடமானம் வச்ச பிறகு, இங்க எழிலும் இல்ல தொழிலும் இல்ல. இந்த நிலைமைல, மனு கொடுக்க பஞ்சப்  பரட்டையாகத்தான் வந்தாங்க, பிச்சை எடுக்கிற சிரட்டையோட வரலன்னு சந்தோஷப்பட்டுக்கோங்கண்ணே.
யாருண் ணே இவரு..?!

இந்தியப் பிரதமரை விட அதிக ஊர்கள் பார்த்தவர் இவர், இந்திய வாக்காளர் பட்டியலில் இருக்கும் அனைவரையும் நலம் கேட்டவர் இவர்.
கோயில் வாசலில் கையேந்தும் பிச்சைக்காரருக்கு வலது கையையும், கோயிலுக்குள்ளே கோடிகளை உண்டியலில் கொட்டும் கோடீஸ்வரர்களுக்கு இடது கையையும் ஒருசேர தர இவரால்தான் முடியும்.

பல லட்சாதிபதிகளின் விருப்பம் இவர், பல லட்சியவாதிகளோடு நெருக்கம் இவர். மார்பில் சட்டையின்றி மீன்பாடி வண்டி ஓட்டுபவரையும், கோட்டுக்கு மேல் சூட் அணிந்து புது மாடல் கார் ஓட்டுபவரையும் தினம் சந்திக்கும் சிறப்பானவர்.   

நாம திட்டுற திட்டுக்கெல்லாம் தலையாட்டி டாஸ்மாக்கில் சின்னப் பையன் சைடிஷ் கொண்டு வருவதும், நாம கொட்டுற குப்பையெல்லாம் அள்ளிக் கட்டிக்கிட்டு கார்ப்பரேஷன்காரர் எடுத்துப்போவதும் இவரைப் பார்க்கத்தான். அழுக்கு ஆடைகளுடன்  பலரை தரையில் விழ வைப்பவர், அரைகுறை ஆடைகளுடன் சிலரை திரையில் ஆடவைப்பார்.

தங்கம் விற்பவர்கள் முதல் வாழ வழியின்றி தங்கள் உடம்பின் அங்கம் விற்பவர்கள் வரைக்கும், ஊசி பாசி விற்பவர்கள் முதல்  ஊசி போடும் மருத்துவர்கள் வரைக்கும், வீடு வாடகைக்கு விடுபவர்களில் ஆரம்பித்து வயதை வாடகைக்கு விடுபவர்கள் வரைக்கும் எல்லா அடுக்கு மனிதர்களிடமும் இவருக்கு பழக்கம்  உண்டு, தினம் ஒரு முறையேனும் அவர்களைக்கண்டு வரும் வழக்கமும் இவருக்கு உண்டு.  

காய்கறி வியாபாரி முதல் கிரானைட் வியாபாரி வரைக்கும் இவருக்குப் பழக்கம்; அதானி, அம்பானி முதல் அருக்காணி வரை அனைவருக்கும் நெருக்கம். முப்பது லட்ச ரூபாய்க்கு கார் வாங்கணும் என்றாலும் சரி, மூணு ரூபாய்க்கு மோர் வாங்கனும் என்றாலும் சரி, அண்ணன் தயவு வேணும். 

நாட்டுல நடக்குற கொலை கொள்ளை குற்றங்களைச் செய்யத் தூண்டும் மர்ம நபரும் அவர்தான், ஆதரவற்றோர் இல்லங்கள் முதல் முதியோர் இல்லங்கள் வரை வாழ வைக்கும் தர்மப்பிரபுவும் அவர்தான்.

கதர்ச்சட்டை, காக்கிச்சட்டை, கருப்புச்சட்டைன்னு எந்த வித்தியாசமும் இவருக்கு இல்ல, எல்லோருக்கும் இனிமையானவர், யாவருக்கும் பொதுவானவர். சிலபேர் கூப்பிடாமலே போவாரு, பல பேரு கெஞ்சி கூப்பிட்டாலும் போகமாட்டாரு. இவரை மதிக்கிறவங்களிடம் கூட கொஞ்சம் தள்ளி இருப்பாரு, இவரை மதிக்காதவங்களுக்குக் கூட அள்ளி நிறைப்பாரு.யாரு இவருன்னு தானே கேட்கறீங்க; அதான் கண்டுபிடிச்சு இருப்பீங்களே, திருவாளர் ரூபாய் நோட்டுதான் அவரு!

 - தோட்டா ஜெகன்