முகம் மறுமுகம்-டூரிங் டாக்கீஸ் சித்ரா லட்சுமணன்
தமிழ் யூ டியூப் சேனல்களில் சென்சேஷன் ஹிட் அடித்திருப்பது சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ்’தான். ‘சிவாஜியை பல மணிநேரம் கண்ணாடி முன் நிற்க வைத்த இயக்குநர்’, ‘ஜெமினி கணேசன் பட வாய்ப்புகளை இழக்க காரணமான சோ’, ‘கவிஞர் கண்ணதாசனுக்கும் தேவிகாவுக்கும் இடையே இருந்த உறவு’ என சினிமாவுக்குள்ளே ஒரு சினிமாவாக பல அரிய தகவல்களை அதில் கொட்டிக் கொண்டிருக்கிறார் இவர்.
பத்திரிகையாளர், சினிமா பிஆர்ஓ, இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் சித்ரா லட்சுமணன். கமலின் ‘சூரசம்ஹாரம்’, பிரபுவின் ‘பெரியதம்பி’, கார்த்திக்கின் ‘சின்ன ராஜா’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இவர், நடிகர்திலகத்தின் ‘வாழ்க்கை’, ‘ஜல்லிக்கட்டு’, பாரதிராஜாவின் ‘மண்வாசனை’, சத்யராஜின் ‘சின்னப்பதாஸ்’ உட்பட பல படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்.
‘‘இன்னிக்கு உலகம் முழுக்க பார்க்கற விஷயமா சினிமா இருக்கு. நம்ம படம் ஜப்பான், சீனானு எல்லா நாடுகள்லயும் வெளியாகுது. சினிமாவைப் பத்தின சுவாரஸ்யங்களை பக்கம் பக்கமா படிக்கறதை விட அதை விஷுவலா தெரிஞ்சுக்கணும் என்கிற ஆர்வம் அதிகரிச்சிருக்கு.
நாலு வருஷங்களுக்கு முன்னாடி நினைச்ச ஒரு சின்ன ஐடியா, இப்ப சேனல் போல மாறியிருக்கு. ரெண்டரை லட்சம் சப்ஸ்கிரைபர்ஸோட வளர்ந்திருக்கு.
நான் சினிமால நடிக்க ஆரம்பிச்ச பிறகு எந்த ஃபங்ஷனுக்கு போனாலும் என்னை இயக்குநர், தயாரிப்பாளர்னு சொல்றதில்ல. நடிகர் சித்ரா லட்சுமணன்னு மட்டுமே சொல்லிடுவாங்க. இப்படி நடிகனா அடையாளம் காணப்பட்ட நான் இப்ப ‘டூரிங் டாக்கீஸ்’ சித்ரா லட்சுமணனா வெளில தெரிய ஆரம்பிச்சிருக்கேன். எங்க போனாலும் பலரும் என்னை சூழ்ந்துகிட்டு இதைப் பத்திதான் பேசறாங்க.
தனிப்பட்ட என் சந்தோஷத்துக்காக ஆரம்பிச்ச ஒரு விஷயம், இந்தளவுக்கு என்னை உயர்த்தும்னு சத்தியமா நான் நினைச்சுக் கூட பார்க்கலை... ரொம்ப சந்தோஷமா இருக்கு...’’ சிலிர்க்கும் சித்ரா லட்சுமணன், தன் ‘டூரிங் டாக்கீஸை’ ஓர் ஆவணப் பதிவாகக் கொண்டு வருவதை நோக்கிப் பயணிக்கிறார்.
‘‘இந்த சேனல் ஆரம்பிக்கறதுக்கான முயற்சிகளை நாலு வருஷங்களுக்கு முன்னாடி எடுத்தேன். அப்ப அதோட பெயர், ‘சித்ரா சேனல்’. தொடர்ந்து வேலைப்பளு காரணமா உடனடியா அதைச் செயல்படுத்த முடியலை. அப்புறம் நண்பர்கள்கிட்ட பேசிட்டிருக்கறப்ப பெயர் மாத்தற ஐடியா வந்தது. ‘டூரிங் டாக்கீஸ்’னுபெயரை செலக்ட் பண்ணி பதிவு பண்ணிட்டேன்.
முன்னாடி ஒரு தனியார் டிவி சேனல்ல சினிமா கலைஞர்களின் வரலாற்றை சொல்லிட்டிருந்தேன். எம்ஜிஆர், சிவாஜி, வாலி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஏவி.மெய்யப்ப செட்டியார்னு ஒவ்வொரு திரைக் கலைஞர்களைப் பத்தியும் மாசக்கணக்கில் பேசினேன். ஓரளவு அந்தக் கலைஞர்களோட முழு வரலாற்றையும் சொல்ல முயற்சி செஞ்சேன். அந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது.
ஒருத்தரோட முழு வரலாறையும் ஒரே புத்தகத்துல தெரிஞ்சுக்க முடியாது. அதுல சில தரவுகள் தவறா இருக்கவும் சான்ஸ் இருக்கு. சிலது விடுபட்டும் போகலாம். இதை நாம க்ராஸ் செக் பண்ணணும். அப்படித்தான் நான் செய்தேன்; செய்யறேன். ஏன்னா, சொல்ற விஷயத்துல உண்மைத் தன்மை இருக்கணும்னு நினைக்கறேன்.
இதுக்காகவே நிறைய படிக்க ஆரம்பிச்சேன். ரோஜா முத்தையா நூலகத்துக்கு போய் பழைய ‘சித்ராலயா’, ‘பேசும்படம்’, ‘டெய்லி பேப்பர்’னு தேடித் தேடி படிப்பேன். எல்லா திரைக்கலைஞர்களின் வாழ்க்கையும் சுவாரஸ்யமானதுதான். பல சம்பவங்கள் கொண்டதுதான்.
உதாரணமா, எஸ்.எஸ்.வாசன் ‘சந்திரலேகா’ படத்தை முடிக்க முடியாம இருந்தப்ப ‘தி இந்து’ சீனிவாச அய்யங்கார் உதவி செய்திருக்கார்! இப்படி பல சம்பவங்கள் படிச்ச எனக்கு பிரமிப்பூட்டுச்சு. அதை ரசிகர்கள்கிட்ட பகிர்ந்துக்கறப்ப அவங்களும் அதே வியப்பை அடையறாங்க. ‘டூரிங் டாக்கீஸ்’ இந்தளவு பேசப்பட இது மாதிரி ரிசர்ச்தான் காரணம்.
முதல் நிகழ்ச்சியா ‘சினிமாவுக்குள் ஒரு சினிமா’னு ஒரு புரோக்ராம் பண்ணினேன். வெற்றிகரமான நிகழ்ச்சி இது. ஒவ்வொரு எபிசோடையும் பார்த்துட்டு மலேசியா, பின்லாந்து, சுவிட்சர்லாந்து, அரேபிய நாடுகள்னு உலகம் முழுக்க இருந்து போன் வரும். ஆஸ்திரேலியால இருக்கற ஒரு தமிழ்ச்சேனல் முறைப்படி உரிமை வாங்கி இதை ஒளிபரப்பினாங்க.
ரெண்டாவது ஹிட்டா ‘சாய் வித் சித்ரா’ இருக்கு. சினிமால என் மேல பிரியமா இருக்கற பலருடனும் நான் பேசற நிகழ்ச்சி இது. ஒருவகைல பேட்டினு இதை சொல்லலாம். ஆனா, கேள்வி பதில் பாணில இல்லாம கேஷுவலா கலந்துரையாடல் மாதிரி இந்த நிகழ்ச்சி இருக்கும். பிரபலங்களைத்தான் அதிகம் பேச வைப்பேன். கேள்விகள் என்கிற பெயர்ல முழ நீளத்துக்கு நான் பேச மாட்டேன். இதுக்கு பத்திரிகையாளரா நான் இருந்த அனுபவம் கைகொடுக்குது.
‘சாய் வித் சித்ரா’ல ஏவி.எம். சரவணன் சாரை முதல்ல பேட்டி எடுத்தேன். அதுல அவர் யாருக்கும் தெரியாத பல விஷயங்களைப் பகிர்ந்தார். உதாரணமா, ‘அன்பே வா’ படத்தைப்பத்தி சொல்லலாம்.அந்தக் காலத்துல எம்ஜிஆரின் சம்பளம் மூணு லட்ச ரூபாய். இது ஒரு தகவல். இன்னொண்ணு, அவரோட கால்ஷீட் இருக்கற நாள்ல முதல் ஷாட் அவரை வைச்சுதான் எடுக்கணும் என்பது.
ஏவிஎம்ல இருந்தவங்களுக்கு இந்த விஷயம் தெரியாது. ‘அன்பே வா’ ஊட்டில மும்முரமா ஷூட் போயிட்டிருக்கு. மறுநாள் தனக்கு வேலை இருக்குனு சரோஜாதேவி சொன்னதால முதல் நாள் அவரை வைச்சு சில காட்சிகளை ஷூட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.ஸ்பாட்டுக்கு வந்த எம்ஜிஆருக்கு ஷாக். தான், இல்லாம அன்றைய முதல் ஷூட் போயிட்டிருக்குனு தெரிஞ்சதும் அவர் கோபமாகி தன் ரூமுக்கு போயிட்டார்.
எம்ஜிஆர் ஏன் கோபமா ரூமுக்கு போனார்னு யாருக்கும் தெரியல. விசாரிச்சபிறகுதான் காரணம் தெரிஞ்சிருக்கு.உடனே சரவணன் சார் எம்ஜிஆர் ரூமுக்கு போய், ‘எங்களுக்கு இந்த விஷயம் தெரியாது... அதனாலதான் தப்பு நடந்து போச்சு’னு பணிவா சொல்லியிருக்கார்.உடனே, ‘உங்களுக்கு தெரியாது... ஆனா, சரோஜாதேவிக்கு தெரியுமே... அவங்க ஏன் சொல்லலை’னு எம்ஜிஆர் கேட்டிருக்கார்.
இப்படி பல தகவல்களை அந்தப் பேட்டில சரவணன் சார் சொல்லியிருக்கார். அவர்னு இல்லை... ‘சாய் வித் சித்ரா’ல பேசின எல்லாருமே தெரியாத பல விஷயங்களை முதல் முறையா மனம்விட்டு பேசியிருக்காங்க...’’ என்று சொல்லும் சித்ரா லட்சுமணன், முன்னோடிகள்குறித்து ஆவணப்படுத்தவும் தயங்கவில்லை.‘‘நடராஜ முதலியார், சாமிக்கண்ணு வின்சென்ட், சக்தி கிருஷ்ணசாமி, காக்கா ராதாகிருஷ்ணன்னு முன்னோடிகள் பலரையும் நான் பதிவு பண்ண காரணம், சினிமா ஆர்வம் மட்டுமில்ல... தமிழ் சினிமா இந்தளவுக்கு வளர எத்தனை பேர் தங்கள் ரத்தத்தை சிந்தியிருக்காங்கனு இப்ப உள்ளவங்களுக்கு தெரிய வைக்கவும்தான்.
ஒருநாள் ராஜா சாண்டோவின் பேரன் போன் செஞ்சு, ‘எங்க தாத்தா பத்தி எந்த ஆவணமும் இல்ல... நீங்களாவது செய்யுங்க’னு கேட்டுகிட்டார். ஜாம்பவான்களின் வாரிசுகளும் நம்ம சேனலை விரும்பிப் பார்க்கறாங்கனு அப்பதான் எனக்குத் தெரிஞ்சுது...’’ நெகிழும் சித்ரா லட்சுமணன், கலைஞர்களுக்கும் தனக்குமான நட்பே தனது யூ டியூப் சேனல் வெற்றியடைய காரணம் என்கிறார்.
‘‘பேட்டியாளரா பேசினா விலகிதான் இருப்பாங்க. அதுவே ஃப்ரெண்ட்ஸா பேசினா உரிமை எடுத்து பேசுவாங்க. அதே உரிமைலதான் என்னாலயும் கேள்வி கேட்க முடியுது. சமீபத்துல ஆர்.கே.செல்வமணியை பேட்டி எடுத்திருந்தேன். அது டெலிகாஸ்ட் ஆன அடுத்த நாள் அவர் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். ‘என்னுடைய ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘செம்பருத்தி’க்குப் பிறகு ஜூப்ளி ஹிட் ‘சாய் வித் சித்ரா’வுக்கு நான் கொடுத்த பேட்டிதான்’னு மகிழ்ச்சியோடு சொல்லியிருந்தார்.
சேனல் ஹிட் ஆனதால நிறைய விளம்பரங்கள் வருது. நல்ல வருமானமும் எனக்குக் கிடைக்குது. என் டீம்ல பத்து பேர் இருக்காங்க. 3 கேமராமேன்கள், நாலு எடிட்டர்கள், 2 தொகுப்பாளர்கள், தவிர திரையுலகில் அனுபவமிக்க நண்பரான வெங்கட்சினிமா விமர்சனம் பண்றார். அவரும் நானும் சேர்ந்து ‘சினிமா சினிமா’னு அந்தந்த வாரம் நடக்கற திரைப்பட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கறோம்...’’ என்று சொல்லும் சித்ரா லட்சுமணன் விளம்பர நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
அஜித்தின் ‘விஸ்வாசம்’, ‘சிகப்பு மஞ்சள் பச்சை’, ‘தமிழரசன்’ படங்களின் பப்ளிசிட்டியை கவனித்தது, கவனிப்பது இவரது நிறுவனம்தான்! சினிமா தவிர கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விளம்பரப் படங்களையும் இவரது நிறுவனம் எடுத்துக் கொடுக்கிறது!
மை.பாரதிராஜா
ஆ.வின்சென்ட் பால்
|