ரத்த மகுடம்-81



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘என்ன... வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டதா..?’’
கரிகாலனை நெருங்கி அவனுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் சிவகாமி கண்சிமிட்டியபடி முணுமுணுத்தாள்.கண்கொட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த கரிகாலன் தன்னை மீறி புன்னகைத்தான்.

‘‘இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்..?’’‘‘வேதாளம் எந்த முருங்கை மரத்திலும் ஏறவில்லை என்பதுதான்!’’‘‘இது மட்டும் உண்மையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?’’‘‘உண்மையாகத்தானே இருக்கிறது... அதை ஏன் நம்ப மறுக்கிறாய் சிவகாமி..?’’‘‘உங்கள் கண்கள் பேசும் மொழி வேறாக இருக்கிறதே... அதனால்தான்...’’‘‘அந்தளவுக்கு நயன பாஷையிலும் நீ கரை கண்டவளா..?’’‘‘உங்கள் கண்கள் பேசும் மொழியை பிசிறின்றி புரிந்து கொள்ளும் அளவுக்கு கசடற நயன பாஷையைக் கற்றவள்தான் நான்!’’சிவகாமியை உற்றுப் பார்த்தான் கரிகாலன்.

‘‘என்ன... அப்படிப் பார்க்கிறீர்கள்..?’’
‘‘இப்போது மட்டுமல்ல... மதுரைக் கோட்டைக் காவலனிடம் நீ பேசும்போது கூட உன்னை சாதாரணமாகத்தான் பார்த்தேன்... பார்க்கிறேன்... ஏனோ உனக்கு அது அசாதாரணமாகத் தெரிகிறது...’’‘‘என்ன செய்யச் சொல்கிறீர்கள்..? இன்னமும் தங்கள் மனதில் என்னைக் குறித்த சந்தேகங்கள் மேலும் மேலும் முளைத்தபடி இருக்கின்றதே...’’கரிகாலன் எந்த பதிலையும் சொல்லவில்லை. என்ன பதில் சொல்வது என்றும் அவனுக்குத் தெரியவில்லை.

‘‘ஆம்... பார்த்ததுமே மதுரைக் கோட்டைக் காவலர் என்று தெள்ளத் தெளிவாகப் புரியும் வகையில் நடமாடும் அந்த வீரரிடம் என் இரு கரங்களையும் மீனைப் போல் குவித்து சமிக்ஞை காட்டினேன். அது பாண்டியர்களின் அடையாளமேதான்... எனவே, பாண்டியர்களின் ஒற்றர் படைத் தலைவியாகவும் நான் இருக்கலாமோ என்ற சந்தேகம் உங்களுக்குள் எழுந்தது... உங்கள் கண்கள் அதைப் பிரதிபலித்தது...’’
‘‘அதென்ன ‘உம்’ விகுதி..?’’

‘‘என்ன செய்ய..? சாளுக்கியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட காஞ்சி மாநகரத்தில் நாம் இருவரும் நடமாடுகையில் என்னை சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தளபதியாக நினைத்தீர்கள்... அங்கு நடைபெற்ற சம்பவங்களும் உங்களையும் என்னையும் தனித்தனியே சந்தித்த நபர்களும் உங்கள் எண்ணத்துக்கு தூபம் போட்டார்கள். இதை வைத்து பல்லவ இளவரசர் முன்னால் என் மீது விசாரணையும் நடத்தப்பட்டது.

ஏனோ தன்னுடன் இருக்கும் உங்களை எல்லாம் நம்பாமல் ஊர் பெயர் தெரியாத என்னை பல்லவ இளவரசர் நம்பினார்... என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் புறந்தள்ளினார்... ஆனாலும் உங்களுக்குள் இன்னமும் சந்தேகம் தீரவில்லை... மதுரைக்குள் நாம் காலடி எடுத்து வைத்ததுமே பாண்டியர்களின் சமிக்ஞையை வேறு கோட்டைத் தலைவரிடம் நான் காட்டினேனா... முடிவே செய்துவிட்டீர்கள், பாண்டியர்களின் ஒற்றர் படைத் தலைவியாகவும் நான் இருக்கலாமோ என்று! ‘உம்’ விகுதிக்கு காரணம், இப்போதும் உங்கள் மனதின் அடி ஆழத்தில் சாளுக்கியர்களின் ஒற்றர் படையைச் சேர்ந்தவளாக நான் இருக்கலாம் என்ற ஐயம்!’’

வருத்தமோ கோபமோ இல்லாமல் சர்வ சாதாரணமாக இதை தன் கண்களைப் பார்த்தபடி சொன்ன சிவகாமியை அப்படியே அள்ளி அணைக்க வேண்டும் என்று கரிகாலனுக்குத் தோன்றியது!என்ன அழகாக அவளை நம்புவதா வேண்டாமா... அவள் யாராக இருப்பாள்... என்றெல்லாம் தன்னுள், தான் அலைபாய்வதை ஸ்படிகம் போல் தனக்கே காட்டிவிட்டாள்!அவள் கரங்களைப் பற்றி கரிகாலன் அழுத்தினான்.

‘‘ம்... ம்... இது பொது இடம்... சுற்றிலும் மக்கள் நடமாட்டம் இருக்கிறது... உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்! வேண்டுமானால் சத்திரத்துக்குச் சென்று நமக்கான அறையில் நாம் மட்டுமே இருக்கும்போது அதை வெளிப்படுத்துங்கள்! தடையேதும் சொல்ல மாட்டேன்!’’ சிவகாமி கண்களைச் சிமிட்டினாள்.யாரும் அறியாமல் ரகசியமாக அவளை ரகசிய இடத்தில் கரிகாலன் கிள்ளினான்!செல்லமாக அவனை முறைத்தவள், ‘‘வாருங்கள்...’’ என்றபடி நடக்கத் தொடங்கினாள்.

தோளோடு தோள் உரச... கரங்களைப் பற்றியபடி நடந்த அவர்கள் இருவரையும் பார்த்த மதுரை மக்கள் தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டார்கள். காதலர்கள்! புதியதாகத் திருமணமானவர்கள்! இருட்டத் தொடங்கி இருந்ததால் மதுரை வீதிகளில் இருந்த தூண்களில் பாண்டிய வீரர்கள் தீபங்களை ஏற்றியிருந்தார்கள். மக்களுக்கு இடையூறு செய்யாமல், குறிப்பிட்ட இடைவெளியில் வேல்களையும் வாட்களையும் தாங்கியபடி காவலர்கள் நின்றிருந்தார்கள்.

கால்களாலும் கண்களாலும் கரிகாலன் உணர்ந்தான்; அளந்தான். காஞ்சியைப் போலவேதான் மதுரையும் காட்சியளித்தது. அங்காடிகள் இருந்த வீதிகள் அகலமாகவும் அதன் குறுக்கே குறுகிய சந்துகளும் காணப்பட்டன.

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என திசைகளைக் குறி வைத்தே மதுரையின் வேர்களும் சாலைகளாகப் படர்ந்திருந்தன.எனில், மதுரை அரண்மனைக்குள்ளும் சுரங்கங்கள் இருக்கும்! அவையும் காஞ்சி போலவே இருக்கலாம். ஒரே மனையடி சாஸ்திரம்தானே நகரங்களை உருவாக்கப் பயன்படுகிறது? மதுரையை வேடிக்கை பார்த்தபடியே வணிகர் வீதியை அடைந்தார்கள்.

காஞ்சி வணிகர் வீதியில் நம் பெரிய தாயாரைக் கண்டோம்..? அப்படி மதுரை வணிகர் வீதியில் யாரையேனும் காண்போமா..? வாய்ப்பு இருக்கிறது. சாளுக்கியர்கள் ஒன்றும் லேசுப்பட்டவர்கள் அல்ல!சிந்தித்தபடியே வணிகர் வீதியின் நடுவில் கிழக்கு நோக்கிச் சென்ற குறுகிய சந்துக்குள் செல்ல முயன்றான்.‘‘மேற்குப் பக்கம்...’’ அவனைத் தடுத்து எதிரில் இருந்த சந்தினை சிவகாமி சுட்டிக் காட்டினாள்.

‘‘சத்திரம் கிழக்கில் இருப்பதாகத்தானே சொன்னார்கள்..?’’ கரிகாலன் தன் புருவத்தை உயர்த்தினான்.‘‘ஆம், அங்கும் சத்திரம் இருக்கிறது. ஆனால், நம்மை மேற்கில் இருக்கும் சத்திரத்தில் தங்கும்படி கோட்டைக் காவலர் கேட்டுக் கொண்டார்...’’ ‘‘மீன் சமிக்ஞை காட்டி அவனிடம் நீ கேட்டது இதைத்தானா..?’’‘‘ஆம்!’’‘‘யார் நம்மை மேற்கு சத்திரத்தில் தங்கச் சொன்னார்களாம்..?’’‘‘சாளுக்கிய இளவரசர் விநயாதித்தர்!’’ பளிச்சென்று பதில் அளித்தாள் சிவகாமி. ‘‘நாளைக் காலை நம்மை அவர் சந்திக்கிறாராம்!’’கரிகாலன் பதிலேதும் பேசாமல் சிவகாமியைப் பின்தொடர்ந்தான்.

‘‘சிவகாமி ஏதும் சொன்னாளா..?’’ சாளுக்கிய இளவரசர் விநயாதித்தர் சட்டென்று கேட்டார்.‘‘இல்லை இளவரசே... அவர்களுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை... கரிகாலர் எந்நேரமும் அவர்களுடனேயே இருந்தார்...’’ கைகளைக் கட்டியபடி கடிகை பாலகன் பதிலளித்தான்.

படுக்கையில் இருந்து மெல்ல சிவகாமி எழுந்தாள்.அறுசுவை உணவை உண்ட மயக்கத்திலும், நடந்து வந்த களைப்பிலும் கரிகாலன் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

சத்திரத்தின் தீபம் சாளரத்தின் இடைவெளி வழியே ஊடுருவி அவன் முகத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தது.சப்தம் எழுப்பாமல் எழுந்த சிவகாமி, மெல்ல அடியெடுத்து வைத்து அவனை நெருங்கினாள்.சுவாசம் சீராக இருந்தது. அவனது நாசிக்கு அருகில் தன் வலது கை ஆள்காட்டி விரலை வைத்துப் பார்த்தாள்.திருப்தியுடன் தன் இடுப்பில் இருந்து மூலிகைக் குப்பியை எடுத்தாள். அதன் மூடியைத் திறந்து பருத்தித் துணி ஒன்றின் மீது ஐந்து துளிகள் விழும்படி தெளித்தாள்.

பிறகு அந்த பருத்தித் துணியை லாவகமாக கரிகாலனின் நாசிக்கு அருகில் கொண்டு சென்றாள்.அதிலிருந்து கிளம்பிய மணத்தை உறங்கிக் கொண்டிருந்த கரிகாலன் சுவாசித்தான்.தன் மூச்சை அடக்கி அதை சுவாசிக்காதபடி எச்சரிக்கையுடன் சிவகாமி சில கணங்கள் அசைவற்று இருந்தாள்.
கரிகாலன் முகத்தில் புள்ளி புள்ளியாக வியர்க்கத் தொடங்கியதும் கையில் இருந்த பருத்தித் துணியை அறையின் மூலையில் வீசி எறிந்துவிட்டு தங்கள் அறையை விட்டு வெளியே வந்தாள்.

காலை வரை மயக்க மருந்து வேலை செய்யும். கரிகாலன் அசைவில்லாமல் படுத்திருப்பான்!அரசாங்க விருந்தினர்கள் தங்கும் வீதிக்குள் நுழைந்த சிவகாமி, வெளிச்சம் படாமல் நிழலிலேயே நடந்து வலமிருந்து இடமாக இருந்த ஐந்தாவது மாளிகைக்குள் நுழைந்தாள்.‘‘சிவகாமி... நான் இங்கிருக்கிறேன்...’’ குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றாள்.

‘‘பல்லவ இளவரசரையும் நம்ப வைத்துவிட்டாயே..?’’ மகிழ்ச்சியுடன் அவளை வரவேற்றார் சாளுக்கியர்களின் போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர்!‘‘எல்லாம் நீங்கள் கொடுத்த பயிற்சிதான் குருவே!’’ என்றபடி அவரை வணங்கினாள் சிவகாமி.நிழல்படிந்த மாளிகையின் தூணில் சாய்ந்தபடி அவர்கள் இருவரும் உரையாடுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான் கரிகாலன்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்