அமிலத்தில் கரைந்த வினோதினி





நாகப்பட்டினம் அருகேயுள்ள திருக்கடையூரைச் சேர்ந்தவர் வினோதினி. இடையில் முடிந்துபோகத்தானோ என்னவோ, அத்தனை உறவுகளும் கொண்டாடும் பெண்ணாக வளர்ந்தார். தன் ஒரே மகளின் படிப்புக்காக உறவுகளையும், சொத்துக்களையும் விட்டுவிட்டு காரைக்காலில் குடியேறி செக்யூரிட்டி வேலை பார்த்தார் ஜெயபாலன். படிப்பில் நம்பர் 1 மாணவி. நன்றாக வரைவார். பாடுவார். ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே...’ பாடலை வினோதினி பாடினால் கேட்போர் கண்கள் கலங்கி விடுமாம். எல்லோரையும் நினைத்து நினைத்து கலங்கும்படி செய்துவிட்டு மாயமாக மறைந்து விட்டார்.
யாருமே பேசுகிற நிலையில் இல்லை. வினோதினியின் தாய் மாமா ரமேஷ் மட்டும் ஓரளவுக்கு மீண்ட நிலையில் இருக்கிறார்.  

‘‘தேடித் தேடி எல்லாருக்கும் உதவி செய்வா. யாரோட மனசும் பாதிக்காத மாதிரி பேசுவா. வயசுக்கு மீறின பக்குவம் இருந்துச்சு. எங்க குடும்பத்துல யாரும் பத்தாம் வகுப்பைத் தாண்டலே. இவ பி.டெக் படிச்சா. வீடு... வீடு விட்டா கல்லூரி... ரொம்ப செலக்டிவான ஃப்ரண்ட்ஸ்தான்!

இவளை எங்கோ பாத்துருக்கான் அந்த படுபாவி சுரேஷ். பக்கத்து ஊர்க்காரன். கொத்தனார் வேலை செய்யிறான். எங்க சமூகம்தான். மாமாவோட பழகி, அதை சாக்கா வச்சு வீட்டுக்கும் வரத் தொடங்கியிருக்கான். மாமாவுக்கும் அக்காவுக்கும் அவனோட நோக்கம் புரியல. ஒருநாள் மாமாகிட்ட, ‘வினோதினியை எனக்குக் கட்டிக்கொடுங்க’ன்னு கேட்டிருக்கான். ‘அவ சின்னப்பொண்ணு... படிச்சுக்கிட்டிருக்கா. இந்த ஆசையை வளத்துக்காதே’ன்னு சொல்லிட்டு அவன் நட்பை துண்டிச்சிட்டாரு. ஆனா மாமா வேலை செய்யிற இடத்துக்கு போயி டார்ச்சர் பண்றது, சண்டை போடுறதுன்னு தொல்லை பண்ணியிருக்கான். வெளியில சொன்னா பொண்ணுக்குத்தானே அசிங்கம்னு அமைதியா விட்டுட்டாங்க. வினோதினி காலேஜ் போறப்போ பின்னாடியே போய், ‘இவதான் நான் கட்டிக்கப் போற பொண்ணு’ன்னு ஃப்ரண்ட்ஸ்கிட்ட சொல்லி கிண்டல் பண்ணிருக்கான். பொறுக்க முடியாம போலீஸ்ல புகார் கொடுத்தோம். அவங்க சும்மா அதட்டி விட்டுட்டாங்க. அப்பவே அவன் மேல நடவடிக்கை எடுத்திருந்தா எங்க பொண்ணு இப்படி குலைஞ்சு போயிருக்க மாட்டா’’ - கோபமும் குமுறலுமாகப் பேசுகிறார் ரமேஷ்.

‘‘அந்த பாவிப்பயலை ஒருத்தருமே கண்டிக்க முன்வரல. கேம்பஸ் இன்டர்வியூவில வினோதினிக்கு வேலை கிடைச்சுச்சு. சென்னைக்குப் போனா புள்ள பாதுகாப்பா இருக்குமேன்னு அனுப்பி விட்டுட்டேன். மாசா மாசம் வருவா. பை நிறைய எங்களுக்கு வாங்கிட்டு வருவா. ‘சீக்கிரமே சென்னையில ஒரு வீடு வாங்கி உங்களையும் கூட்டிக்கிட்டுப் போயிடுறேம்பா’ன்னு சொன்னா. பெரிய வீடு கட்டி, சுத்திவர மரம் வச்சு, ஜன்னலோரத்துல உக்காந்து பறவைகளுக்கு எல்லாம் இரை போடணும்னு சொல்லுவா... எல்லா வார்த்தையும் காத்தோட போயிருச்சே...’’ - சற்று ஆசுவாசப்பட்ட ஜெயபாலன் திரும்பவும் கதறுகிறார்.

தீபாவளிக்கு எல்லோருக்கும் புத்தாடை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக ஊருக்குப் போயிருக்கிறார் வினோதினி. வினோதினி வந்ததை அறிந்து கொண்ட சுரேஷ், ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் நிறைய ஆசிட் வாங்கி வைத்துக்கொண்டு காத்திருந்தான். ‘கலப்படம் செய்யப்படாத கடும் வீரியமிக்க ஆசிட்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

‘‘தீபாவளிக்கு மறுநாள் நைட்டு பத்து மணியிருக்கும். மாமா, மாமாவோட நண்பர், வினோதினி மூணு பேரும் பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து போயிருக்காங்க. ஒரு சந்துல திரும்பினப்போ, திடீர்னு எதிர்ல வந்து வினோதினி முகத்துல அமிலத்தை ஊத்திட்டான். துடிச்சுப் போயிட்டா. மொத்த உடலும் சிதைஞ்சு போச்சு. மாமாவுக்கும் காயம். 90 நாளா அவபட்ட சிரமத்தை வார்த்தையால சொல்ல முடியாது. ‘என்னை ஏம் மாமா இப்படி செஞ்சான்... நான் என்ன தப்பு செஞ்சேன்?’னு அவ கேட்டப்போ என்னால பதில் சொல்ல முடியலய்யா. முகம் தெரியாதவங்கல்லாம் உதவி செஞ்சாங்க. வெளிநாட்டுல இருந்தெல்லாம் நிதி வந்துச்சு. ஒரு பலனும் இல்லையேய்யா’’ என்று ரமேஷும் கதறுகிறார்.

குணமாகி வந்தபிறகு தன் பெயரிலேயே ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து, அமிலத்தால் முகம் குலைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் மறுவாழ்வுக்கு உதவ வேண்டும் என்று தன்னை சந்திக்க வந்தவர்களிடம் சொல்லியிருக்கிறார் வினோதினி. அவருக்கு நெருக்கமான தோழி, அபிராமி. திருக்கடையூர் அபிராமி கோயில் யானை. இருவருக்கும் அப்படியொரு நட்பு. வினோதினியைப் பார்த்ததும் தும்பிக்கையை வளைத்து குரல் கொடுத்து குதூகலிக்குமாம் அபிராமி. மறுவாழ்வு முகாமில் பங்கேற்று உற்சாகமாகத் திரும்பிய அபிராமி, கடந்த வாரம் திடீரென உணவை மறுத்து சோர்ந்து படுத்துக் கொண்டது. சிலநாட்களில் இறந்தும் போனது. தன் வலிக்கெல்லாம் துடிக்காத வினோதினி, அபிராமியின் மரணத்தைக் கேள்விப்பட்டு துடித்துப் போனாராம்.
வினோதினி மரணத்தின் மூலம் பல கேள்விகளை விதைத்திருக்கிறார்.

கடும் வீரியம்மிக்க அமிலம் சுரேஷ் கைக்கு எப்படிக் கிடைத்தது? பெண்களுக்கு எதிரான கொடும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிற அமிலம், கட்டுப்பாடில்லாமல் விற்கப்படுவதை தடுக்க என்ன செய்திருக்கிறோம்? சிகிச்சைக்காக சுமார் 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், மரணிக்கும் நிமிடத்துக்கு முன்புவரை ‘ஷி ஈஸ் ஆல்ரைட்’ என்று அந்த மருத்துவமனை ஏன் சொன்னது? சுரேஷ் மீது தொடக்கத்திலேயே வினோதினியின் அப்பா புகார் செய்த நிலையில், காவல்துறை ஏன் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை? இன்னொரு வினோதினிக்கு இதுபோன்ற கொடுமை நிகழாமல் இருக்க நாம் என்ன செய்யப்போகிறோம்?
ஒவ்வொருவரின் மனசாட்சியும் இந்தக் கேள்விகளுக்கு பதில் தேட வேண்டும்!
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்