அறிவுரை

‘‘ஏங்க... நம்ம வீட்டுக்குப் பக்கத்துலயே நிறைய பேர் டியூஷன் எடுத்துக்கிட்டு இருக்காங்க. அதையெல்லாம் விட்டுட்டு அவ்வளவு தூரத்துல இருக்கிற கோமதி டீச்சர்கிட்டே நம்ம கோகுலையும் ஹரிணியையும் டியூஷனுக்கு அனுப்பணுமா?’’ - கணவன் குமாரிடம் கேட்டாள் கோகிலா. ‘‘அதுக்கு ஒரு காரணம் இருக்குது’’ என்றான் குமார்.
‘‘என்ன காரணம்... ரிட்டயர் ஆகிட்ட அவங்களுக்கு உதவி செய்யணும்னு அனுப்பறீங்களா? அவங்களுக்குத்தான் பென்ஷன் வருதே. கூடவே ரெண்டு பசங்களும் வெளிநாட்டுல இருந்து சம்பாதிச்சு அனுப்பறாங்க..!’’
‘‘ரெண்டாவது சொன்னியே... அதுதான் காரணம்! கோமதி டீச்சர் நம்ம பசங்களையும் வெளிநாட்டு வேலைக்குப் போற அளவுக்குத் தயார் பண்ணுவாங்க’’ - குமார் சொல்லும்போதே வீட்டுக்குள் நுழைந்தார்கள் கோகுலும் ஹரிணியும். ‘‘டியூஷன் டீச்சர் தினமும் பாடம் நடத்தி முடிச்சிட்டு, அஞ்சு நிமிஷமாவது எங்களுக்கு அறிவுரை சொல்றாங்க டாடி...’’ என்று கோகுல் சொல்ல, ‘‘என்ன அட்வைஸ் சொல்றாங்க..?’’ - ஆர்வத்தில் கேட்டான் குமார்.
‘‘நீங்களும் எங்க பையனுங்க மாதிரி வேலை, சம்பளம்னு வெளிநாட்டுக்குப் போயிடாதீங்க. இந்தியாவுலயே நல்ல வேலையைத் தேடிக்கிட்டு பெத்தவங்களை நல்லாப் பாத்துக்கணும்னு டெய்லி சொல்றாங்க டாடி’’ - கோகுலின் பதிலால் குமாரின் முகம் போன போக்கைப் பார்த்து, கோகிலாவுக்கு சிரிப்பு வந்தது.
|