மூன்று மாதக் குழந்தை பசியில் அழுதிருக்கிறது. அள்ளி எடுத்து தாய்ப்பால் கொடுத்ததைப்தவிர வேறெந்ததவறையும் செய்யவில்லை அந்தத் தாய். சிறிது நேரத்தில் குழந்தையின் மூக்கிலிருந்து பால் வழிய, அது மயங்கி விழுந்திருக்கிறது. அதன்பிறகு அது அழவே இல்லை.
உயிர்ப்பாலான தாய்ப்பாலே மூச்சுக் குழாயில் அடைத்து அந்தக் குழந்தைக்கு எமனாகிவிட்டதாகச் சொல்கிறது பரிசோதனை ரிப்போர்ட். ஒன்றல்ல, இரண்டல்ல... சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் கடந்த சில மாதங்களுக்குள் அச்சு அசலாக இதே மாதிரி எக்கச்சக்க சம்பவங்கள்.
இத்தனை நாள் இல்லாமல் இப்போதென்ன நம் தாய்மார்களுக்கு பாலூட்டுவதில் பிரச்னை? ‘‘எல்லாம் நகரச் சூழலின் விளைவுதான்’’ என்று கவலைப்படுகிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
‘‘நாம தலைகீழ நின்னுக்கிட்டு சாப்பிடுவோமா? இல்ல மல்லாந்து படுத்துக்கிட்டே தண்ணி குடிப்போமா? முடியாது இல்லையா? அப்படித்தான் குழந்தைக்கும். சரியான பொஸிஷன்ல பால் கொடுக்கணும்’’ என்று ஆரம்பித்தார் குழந்தை நல மருத்துவர் ஜெகதீசன்.
‘‘இதுக்குத்தான் கங்காரு நிலையில் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டும் என்பார்கள். கங்காரு பால் கொடுக்கிறபோது குட்டியை தன் மார்போடு அணைத்துக் கொண்டு புகட்டும். அப்படிக் கொடுக்கும்போது குழந்தை வெர்டிகலாக... அதாவது, நேர்க்கோட்டில் இருக்கும். இதனால் புவியீர்ப்புப்படி, பால் நேராக கீழ்நோக்கி வயிற்றுக்குப் போய்விடுகிறது. இது முடியாவிட்டாலும் குழந்தையை சரிவாக செமிஸ்லீப்பர் நிலையில ஒரு கையால் அணைத்துக்கொண்டும் கொடுக்கலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு, நம்ம வசதிக்காக குழந்தையை படுக்க வைத்து பால் கொடுக்கறதும், தாய் படுத்துக் கிட்டு ஃபீட் பண்றதும் ஆபத்தைத் தான் கொண்டுவரும்.
இதேபோல் பால் புட்டிகளில் பால் கொடுப்பதிலும் ஆபத்துகள் வரலாம். சிலர் தங்கள் குழந்தை படு சீக்கிரம் வளர வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில் புட்டிகளின் நிப்பிள்களில் பெரிய ஓட்டை போட்டு பால் கொடுக்கிறார்கள். இதனால் குழந்தைக்கு பால் புரை ஏற வாய்ப்புகள் அதிகம். மனிதர்களுக்கு உணவுக் குழாயும் மூச்சுக் குழாயும் அருகருகே இருக்கின்றன. உணவுக் குழாய்க்கு போகும் உணவு கொஞ்சம் அதிகப்படியாக நுழைந்தால் கூட அது மூச்சுக் குழாய்க்குச் சென்று அடைத்துக் கொள்ளும். நம்மைப் போன்ற பெரியவர்களுக்கு அது புரை ஏறுதல் என்கிற சின்னப் பிரச்னை. ஆனால் குழந்தைகள் இதனால் மூச்சுத் திணறி இறக்கும் அபாயம் உண்டு.

மேலும் மூச்சுக் குழாய் கோளாறுகள், ஆஸ்துமா, இதய நோய் உள்ள குழந்தைகளுக்கு பால் கொடுக்கும்போது கொஞ்சம் கவனமாகப் புகட்ட வேண்டும். புட்டியில் பால் கொடுப்பவர்கள் நிப்பிளில் சிறிய ஓட்டைகளை இட்டுக் கொடுப்பது நல்லது. அதிகமான பாலை ஒரு குழந்தைக்கு கொடுப்பது நீந்தத் தெரியாத ஒருவனை கடலில் மூழ்கடிப்பதற்கு சமம்’’ என்றவர், ‘இன்றைய பெண்களுக்கு இதையெல்லாம் கூட சொல்லித் தர வேண்டியிருக்கிறதே’ என்ற புலம்பலோடு தொடர்ந்தார்.
‘‘அந்தக் காலத்தில் பெண்கள் சம்மணமிட்டுதான் பால் கொடுப்பார்கள். அவர்கள் அமரும் விதத்திலேயே குழந்தையைப் படுக்க வைத்தால், தலை மேலாகவும் கால்கள் கீழாகவும் வந்துவிடும். அம்மாக்கள், மாமியார்கள் கண்காணிப்பில் இது நடக்கும். பால் கொடுக்கும்போது பேசக் கூட விட மாட்டார்கள் அவர்கள். ஒருவேளை அசம்பாவிதமாக குழந்தைக்குப் புரை ஏறிவிட்டாலும், உடனடியாகத் தலை கீழே கவிழ்த்து முதுகில் தட்டி மூச்சுக் குழாய் அடைப்பை நீக்கும் சின்ன முதலுதவியாவது அவர்களுக்குத் தெரிந்திருந்தது.
அப்படிப்பட்ட அம்மாக்களை யும் மாமியார்களையும் இழந்தது தான் இப்போது நம் பிரச்னை. சீரியல் பார்த்துக் கொண்டும், தூங்கிக் கொண்டும் பால் கொடுக்கும் நவீன கால அம்மாக்களுக்கு நாம் இன்னும் நிறைய கிளாஸ் எடுக்க வேண்டியிருக்கிறது’’ என முத்தாய்ப்பாக முடித்தார் அவர்.
இந்த அபார்ட்மென்ட் கலாசாரம் இன்னும் என்னென்ன ஆபத்துகளைக் கொண்டுவரப் போகிறதோ!
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்