பிரமாண்ட மகாபாரதம்





தமிழ் சின்னத்திரை இதுவரை இப்படியொரு பிரமாண்ட ப்ராஜெக்டைக் கண்டதில்லை. தித்திக்கும் தேன் தமிழும் திகைக்க வைக்கும் பிரமாண்ட அரங்குகளுமாக சன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையும் ரசிகர்களை கட்டிப் போடப் போகிறது ‘மகாபாரதம்’ நெடுந்தொடர். கிட்டத்தட்ட இது ஒரு சின்னத்திரை திரைப்படம்!

‘‘பதினைந்து வருடங்களுக்கு முன் இந்தியில் ‘மகாபாரதம்’ தொடர் வந்தது. மெயின் ஸ்டோரியை மட்டும்தான் எடுத்தார்கள். 52 வாரங்களோடு அது முடிந்துவிட்டது. ஆனால், முதல் முறையாக தமிழில் நேரடியாக உருவாகும் இந்த ‘மகாபாரதம்’, அந்த இதிகாசத்தை முழுமையாக சொல்லவிருக்கிறது. இது தமிழ் மக்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும்’’ என்கிறார் தொடரின் இயக்குனர்... அட வேறு யாருமில்லீங்க... ரஜினி, கமல் உள்ளிட்ட மெகா ஸ்டார்களை வைத்து 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய நம்ம சுரேஷ்கிருஷ்ணாதான்.

‘‘பிரபலமான ‘ஜுனூன்’ தொடரைத் தயாரித்த சினி விஸ்டாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த தொடர், வியாசரின் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. எழுத்தாளர் பிரபஞ்சனின் கதை வடிவத்திற்கு நான் திரைக்கதை எழுதுகிறேன். வேட்டை பெருமாள் வசனம் எழுதுகிறார். கணேஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, தேவா இசையமைக்கிறார்.

ஏற்கனவே மகாபாரதம் தெரியும் என்றாலும், இந்தத் தொடரை இயக்க முடிவானதும், மறுபடியும் படித்தேன். ஒரு பக்கம் வியப்பும், இன்னொரு பக்கம் பயமும் தொற்றிக்கொண்டது. ‘நூற்றுக்கணக்கான நடிகர்கள், டெக்னீஷியன்கள் தேவை. கிராபிக்ஸ், செட் உள்ளிட்ட தொழில் நுட்பங்களுக்காகவே கோடிக்கணக்கில் செலவாகும். இதெல்லாம் சாத்தியம்தானா?’ என்ற கேள்வி எழுந்தபோது, எதற்கும் துணிந்த தயாரிப்பாளர்கள் என்னை ஊக்கப்படுத்தினார்கள். களமிறங்கிவிட்டேன்.

கர்நாடகாவில் மைசூர் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அஸ்தினாபுரம் அரண்மனை செட்டில் சில காட்சிகளை எடுத்துள்ளோம். கலை இயக்குனர் குல்கர்னி வடிவமைத்துள்ள செட்டுகளுக்காக மட்டும் கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. சந்தனு மகாராஜா, இளம் வயது பீஷ்மரான தேவ விரதன், கங்காதேவி, கம்சர் என நிறைய கேரக்டர்கள் பற்றி விரிவாகச் சொல்கிறோம். கிருஷ்ணராக அமீத் பார்கவோ நடிக்கிறார். பூவிலங்கு மோகன், இளவரசன், ஓ.ஏ.கே.சுந்தர், தேவிப்ரியா போன்ற தமிழ் நட்சத்திரங்கள் தவிர, கன்னட நடிகர்கள், புதுமுகங்கள் என நடிகர், நடிகைகள் ஏராளம். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது தொடரின் இன்னொரு பெரிய பலம்’’ என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.
- அமலன்