கல்யாணம்





‘‘எனக்கு அடுத்த மாசம் கல்யாணம். கண்டிப்பா குடும்பத்தோட வரணும்’’ என்றபடி சந்தோஷ் பத்திரிகையைக் கொடுத்தான்.
‘‘ரொம்ப சந்தோஷம்டா!’’ என்று வாங்கினேன். என் ஐந்து வயது மகன் கிரிக்கெட் மட்டையோடு குறுக்கில் புகுந்து ஓடினான்.

எனக்கு முன்பிருந்தே சந்தோஷ் வீட்டில் அவனுக்கு பெண் தேட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரே பையன். நல்ல வேலை. வரதட்சணை எதுவும் எதிர்பார்க்காத பெற்றோர்கள். அவனுக்கு எந்தக் குறையுமில்லை. ஆனாலும் எந்த வரனும் அமையவில்லை. நண்பனின் ஏழெட்டு வருடப் போராட்டம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
‘‘இந்த இடம் எப்படி அமைஞ்சதுடா?’’ - உறையை விட்டு பத்திரிகையை வெளியே எடுத்துக்கொண்டே கேட்டேன்.
‘‘மேட்ரிமோனியல் வெப்சைட்...’’
‘‘ஓ... கிரேட்! இப்பெல்லாம் நிறைய பேர் அதுலதான் வரன் பார்த்து முடிக்கிறாங்க’’ என்றேன்.

‘‘என்னை முழுசா சொல்ல விடுடா. ஒரு மேட்ரிமோனியல் வெப்சைட்ல என் விபரங்களை பதிவு செஞ்சு இருந்தேன். பணம் கட்டவும், பெண் தேடுறதுல சந்தேகம் கேட்கவும் அடிக்கடி அந்த ஆபீஸ் போக வேண்டியிருந்தது. அப்போ அங்கே வேலை செஞ்சுட்டு இருந்த பொண்ணோட பேசிப் பழகி, காதலாகி இப்போ கல்யாணத்துல முடிஞ்சிருக்குடா’’ - சந்தோஷ் சந்தோஷமாகச் சொன்னான்.
அது ஒரு வெப்‘சைட்’ கல்யாணம் என்பதை நானும் ஒப்புக்கொண்டேன்!