விடைபெற்ற போப்!





‘‘தேவாலயத்தின் நலனுக்காக முழு சுதந்திரத்தோடு இந்த முடிவை எடுக்கிறேன். நீண்ட காலமாக பிரார்த்தனை செய்து, என் மனசாட்சியை கடவுளின் முன்பாக பரிசோதித்துப் பார்த்தேன். இன்றைய உலகில் பல்வேறு மாற்றங்கள் வேகமாக நடந்து வருகின்றன. வாழ்க்கையின் நம்பிக்கை குறித்த ஆழமான கேள்விகள் உலுக்குகின்றன. இந்தச் சூழலில், உலகமெங்கும் இருக்கும் நூறு கோடி கத்தோலிக்கர்களை வழிநடத்தக்கூடிய சவாலான பணியைச் செய்யும் திறனில் நான் இல்லை. ஆகவே விலகுகிறேன்!’’

- போப் பதினாறாவது பெனடிக்ட் கடந்த திங்கள்கிழமை இதை அறிவித்த சில மணி நேரங்களில், வாடிகனில் போப்பாண்டவர் பிரார்த்தனை செய்யும் புனித பீட்டர் தேவாலய குவிமாடத்தில் ஒரு மின்னல் தாக்கியது. கடவுளின் செய்தியாகவே அது பார்க்கப்படுகிறது.

அதிகாரத்தின் உச்சத்தை அடைகிறவர்கள், அங்கிருந்து தானாக கீழிறங்கும் சம்பவங்கள் அரிது. அதிகாரத்தை அடைவதைவிட, அதைத் துறப்பதற்கு அதிக மனோதிடம் வேண்டும். தன்னிடம் அது இருப்பதை போப்பாண்டவர் நிரூபித்திருக்கிறார். கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்குப் பிறகு பதவி விலகிய போப் இவர்தான். இதற்குமுன்பு 1415ம் ஆண்டில் விலகிய போப் பன்னிரண்டாவது கிரிகோரியும்கூட, தவிர்க்கமுடியாத நிர்ப்பந்தங்களால்தான் பதவியைத் துறந்தார். மனம் உவந்து போப் பதவியை ராஜினாமா செய்தவர், 1294ம் ஆண்டு விலகிய ஐந்தாவது செலாஸ்டின். ஐந்து மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்துவிட்டு ஒதுங்கினார் அவர். அவருக்குப் பிறகு பெனடிக்ட்!

போப்பின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர்களுக்கே அவரது முடிவு அதிர்ச்சி தந்திருக்கிறது. ஆனால் அவரது சகோதரர் மட்டும், ‘‘பல மாதங்களாக இதுபற்றி அவர் யோசித்துக் கொண்டிருந்தார்’’ என்கிறார். 77 வயதில் பதவியேற்ற பெனடிக்ட்டுக்கு இப்போது 85 வயது. அவருக்கு மூட்டுவலியும் பார்க்கின்ஸன் பிரச்னையும் இருப்பதாக நம்பப்படுகிறது.

பொதுவாக கடுமை காட்டாதவர் எனப் பெயர் வாங்கியவர் அவர். ஆனால், சமீபகாலமாக தேவாலயங்கள் சர்ச்சைகளில் சிக்கியபோது அவரது இந்த அணுகுமுறை எடுபடவில்லை. பிஷப்களை விமர்சித்தார்; ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. தேவாலயங்களில் நிகழ்ந்த தவறுகள் அம்பலமானபோது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். உலகெங்கும் இளைய சமுதாயம் மதச் சார்பின்மையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் சூழலில், இறுக்கமான பழைய கோட்பாடுகளைப் பற்றிக்கொண்டிருப்பது அவருக்கு அபத்தமாகப் பட்டிருக்கக்கூடும்.

அடுத்தது யார் என்ற கேள்வி இப்போதே எழுந்துவிட்டது. ‘ஐரோப்பியர்களே ஆதிக்கம் செலுத்தும் பதவியில் இம்முறை ஒரு கறுப்பினத்தவரோ, லத்தீன் அமெரிக்கரோ அமர வேண்டும்’ என்ற கோஷம் எழுந்திருக்கிறது. ஆனால் போப்பை தேர்ந்தெடுக்கும் கார்டினல்கள் சபையில் பெரும்பான்மை ஐரோப்பியர்கள். இந்த கோஷம் என்ன ஆகும் எனத் தெரியவில்லை.
- அகஸ்டஸ்