வேஸ்ட் கப்பில் டேஸ்ட்டி லாபம்





பால் பாக்கெட்டிலிருந்து, ஓட்டலில் பார்சல் வாங்கும் பிளாஸ்டிக் டப்பா வரை, தூக்கி எறிய மனமின்றி சேகரித்து வைக்கிற பழக்கம் பலருக்கும் உண்டு. ‘எதற்காவது, எப்போதாவது உபயோகப்படும்’ என சேர்த்து வைக்கப்படுகிற அத்தகைய பொருட்களை திடீரென ஒரு நல்ல நாளில் ‘எதற்கும் உபயோகப்படாது’ என்கிற ஞானோதயத்தில் தூக்கி எறிவதுண்டு. தினசரி கிழிக்கிற காலண்டர் பேப்பரில் தொடங்கி, காபி, டீ குடிக்கிற பிளாஸ்டிக் கப்புகள், பார்சல் வாங்கும் டப்பாக்கள், பழைய புத்தகங்கள் என எல்லாவற்றிலும் அழகழகான கலைப்பொருட்களை உருவாக்குகிறார் ஹேமாவதி. அவற்றில் வண்ண விளக்குகள் தனிக்கவனம் ஈர்க்கின்றன.

‘‘அடிப்படையில கைவினைக் கலைகள் தெரியும். அத்தனை சுலபத்துல எந்தப் பொருளையும் ‘வேஸ்ட்’னு தூக்கி எறிய மாட்டேன். அதை வித்தியாசமான, உபயோகமான கலைப்பொருளா மாத்திடுவேன். அப்படி முயற்சி பண்ணினதுதான், பிளாஸ்டிக் கப்புகள்ல பண்ற லைட் செட்டிங். உபயோகிச்சு, நல்லா சுத்தப்படுத்தின பிளாஸ்டிக் கப் அல்லது புது கப், செலோடேப், சீரியல் பல்ப் செட், கோல்ட் மற்றும் சில்வர் ஃபாயில் பேப்பர், ஸ்டேப்ளர், விருப்பப்பட்டா ஏதாவது சாமி பொம்மை அல்லது கார்ட்டூன் பொம்மை இருந்தா போதும். உலக உருண்டை வடிவத்துல பல அளவுகள்ல பண்ணலாம். நடுவுல சாமி படம் வச்சு, சுத்தியும் கப் அல்லது பிளாஸ்டிக் டம்ளர் ஒட்டி, வட்ட வடிவத்துலயும் பண்ணலாம். வெள்ளை நிற கப் தவிர டிரான்ஸ்பரன்ட் கப், டம்ளர்களும் கிடைக்குது. அதுல லைட் செட் பண்ணும்போது, இன்னும் அழகா இருக்கும். அரைவட்ட வடிவம், சிலுவை வடிவம், பிறை வடிவம்னு அவங்கவங்க கற்பனைக்கேத்தபடி நிறைய மாடல்கள் பண்ணலாம். பிறந்தநாள் பார்ட்டி, வீட்ல நடக்கிற விசேஷங்களுக்கு தனியே செலவு பண்ணி லைட் செட் பண்ண வேண்டியதில்லை. இந்த லைட்டை மாட்டி வச்சா, வீடே வண்ணச் சிதறல்ல ஜொலிக்கும். அன்பளிப்பாகவும் கொடுக்கலாம். நவராத்திரி சீசன்ல நிறைய விற்பனையாகும். லைட் செட் பண்ண வேண்டாம்னு விரும்பறவங்க, அதையே பேனா, பென்சில், குண்டூசி மாதிரி சின்னச் சின்ன பொருட்கள் போட்டு வைக்கிற ஸ்டாண்டாகவும் உபயோகிக்கலாம்’’ என்கிறார் ஹேமாவதி.
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்