நிழல்கள் நடந்த பாதை



ஒரு மக்கள் பணியாளர்



கடந்த வாரம் பெரம்பலூர் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். அதன் துவக்க நாள் விழாவில் பங்கேற்றுப் பேசியது போலவே நிறைவு நாளும் சென்று உரையாற்றினேன். ஒரு சின்னப் பையன் அருகில் வந்து, ‘அங்கிள், நீங்க யாரு... ஏன் உங்ககூட எல்லோரும் போட்டோ எடுத்துக்கறாங்க..?’’ என்று கேட்டான். நான் திருதிருவென்று விழித்தேன். ‘‘நீங்க சினிமாவில் நடிக்கிறீங்களா..?’’ என்று திரும்பக் கேட்டான். நான் அவனை அணைத்துக்கொண்டேன். அருகில் நின்ற அவனது அப்பா, எனது புத்தகத்தை எடுத்து அதிலிருந்த என் புகைப்படத்தைக் காட்டி ஏதோ விளக்கினார். எங்கு போனாலும், ‘‘டிவில வருவீங்களே?’’ என்று கேட்டார்கள். எனது 25 வருட எழுத்து வாழ்க்கையை எனக்கு நானே ஒரு முறை நினைவூட்டிக்கொண்டேன். இப்போது நிறைய பேருக்கு என் பெயர்கூட சரியாகத் தெரியாது. ஆனால் என்னைத் தெரியும். மீடியா வினோதம்!

நான் சொல்ல வந்தது இதைப் பற்றியல்ல. பெரம்பலூர் போன்ற ஒரு சிறிய நகரத்தில் ஒரு பிரமாண்ட புத்தகக் கண்காட்சியை நடத்திய ஒரு கலெக்டரைப் பற்றியது. முதல் நாள் புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்ததும் திகைத்துப் போனேன். அப்படி ஒரு விழாக் கோலம். பெரும் ஜனத்திரள். தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளர்களையும் பேச்சாளர்களையும் கொண்ட உரை அரங்குகள். கலை நிகழ்ச்சிகள். மாணவ, மாணவிகளின் கூட்டம். என்ன நடந்துகொண்டிருக்கிறது இங்கே என்று ஒரு கணம் திகைத்துப் போனேன். இவை அனைத்தும் ஒரு தனி மனிதனின் கனவு. பெரம்பலூர் கலெக்டர், டாக்டர் தாரேஸ் அகமது என்ற இளைஞரின் கனவு. கேரளத்தைச் சேர்ந்த தாரேஸ் அகமது தமிழகத்தின் ஒரு பின்தங்கிய மாவட்ட மக்களின் இதயங்களில் குடியேறியதன் அடையாளம்தான் இந்தக் கண்காட்சி.

சென்ற ஆண்டு முதல் புத்தகக் கண்காட்சியைத் துவங்கினார். யாரிடமும் கட்டணம் வாங்காமல் இலவசமாக கடைகளை அளித்தார். எதிர்பார்த்ததைவிட சிறந்த வரவேற்பும் விற்பனையும் இருந்தது. இந்த ஆண்டு அதைவிட பிரமாண்டமாக வளர்ந்துவிட்டது கண்காட்சி. இதை எப்படி சாதித்தார் என்று கேட்டேன். கூச்சத்துடன் அவர் விளக்கினார்.

ஒரு பண்பாட்டுரீதியான செயல்பாட்டையோ, மக்கள் நலம்சார்ந்த காரியத்தையோ செய்ய விரும்பும் அதிகாரிக்கு எத்தனையோ விதமான வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வளவு அதிகாரமும் தொடர்புகளும் நமது அமைப்பில் ஒரு கலெக்டருக்கு இருக்கிறது. பலரும் அதை உணர்வதில்லை. பயன்படுத்துவதில்லை. தாரேஸ் அகமது பயன்படுத்தினார்.



சுற்றுலாத் துறை போன்ற பிற அரசுத் துறைகளிலிருந்து எங்கெல்லாம் ஸ்பான்ஸர்கள் பெற முடியுமோ, அதைக் கண்காட்சிக்குக் கொண்டுவருகிறார். மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களை இதில் ஒருங்கிணைக்கிறார். உதாரணமாக, ஒவ்வொரு நாள் புத்தகக் கண்காட்சி பேச்சரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் பொறுப்பிலும் விடப்படுகிறது. ஒரு கல்வி நிறுவனமே எல்லா நாள் செலவுகளையும் ஏற்க முன்வந்தபோதுகூட அதை மறுத்துவிட்டு, ‘ஒருவரை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது’ என்று எல்லோரையும் அதில் ஈடுபடுத்துகிறார். அதேபோல பள்ளிகள், மாணவர்களை கண்காட்சிக்கு அழைத்துவர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கண்காட்சியை உருவாக்க மட்டுமல்ல, புத்தகங்களை விற்கவும் ஏற்பாடு செய்கிறார். எல்லா பஞ்சாயத்து அமைப்புகளும் தலா 5 ஆயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி தங்கள் ஊர் பொது நூலகத்திற்கு அதை அன்பளிப்பாக அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். பேரூராட்சி என்றால் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்க வேண்டும். பல பஞ்சாயத்துத் தலைவர்கள் முறுக்கு மீசையுடன் கடை கடையாய் ஏறி புத்தகங்கள் வாங்கும் காட்சியைக் கண்டேன். தமிழகம் முழுக்க இப்படி ஒரு ஏற்பாடு இருந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். அது அறிவுப் பரவலின் பொற்காலமாக இருக்கும்.

பெரம்பலூர் மக்கள் மன்றம், பயிர் டிரஸ்ட் மற்றும் பபாசியுடன் இணைந்து நடத்திய இந்தப் புத்தகக் கண்காட்சியின் கடைசி தினத்தில், தினமும் புத்தகக் கண்காட்சிக்கு வந்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்கியவர்களுக்குப் பரிசு, மொத்தமாக அதிக ரூபாய்க்கு புத்தகம் வாங்கியவருக்குப் பரிசு என்று என்னென்னவோ உற்சாக ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். கண்காட்சியின் நிறைவு தினத்தன்று ஒவ்வொரு கடையாகச் சென்று தாரேஸ் அகமது நன்றி தெரிவித்தபோது, ஒரு உண்மையான ஈடுபாட்டின் அர்த்தம் தெரிந்தது.

தாரேஸ் அகமதுவுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சிறுமி என்னிடம் கையெழுத்து வாங்கினாள். அவளிடம் ‘‘என்ன படிக்கிறே..?’’ என்று கேட்டார். ‘‘பிளஸ் 2’’ என்றாள். அவள் போனதும் என்னை நோக்கி, ‘‘பிளஸ் 2 படிக்கிற குழந்தை மாதிரியா இருக்கு... இந்த மாவட்டத்துல பெரும்பாலான பிள்ளங்க இப்படித்தான் இருக்காங்க. ஊட்டச்சத்து பற்றாக்குறை’’ என்றார் வருத்தத்துடன். மாவட்டம் முழுக்க அவர் ஆற்றி வரும் மக்கள் நலப் பணிகளைப் பற்றி ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விஷயம் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

‘மக்களைத் தேடி வருவாய்த்துறை’ என்கிற திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் சுற்றி, மக்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான மனுக்களைப் பெற்று, அதில் பெரும்பாலானவற்றின் மீது உடனடி நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்தி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார். 18 வயதிற்குக் கீழே இருந்த ஒரு இஸ்லாமிய சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை சட்ட விரோதம் என்று தடுத்து நிறுத்தினார். இதற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தபோதும் அவர் பின்வாங்கவில்லை.

ஒரு அமைப்பை மாற்ற வேண்டும் என்று சொல்வது எளிது. ஆனால் நல்லெண்ணமும் உறுதியும் கொண்ட ஒரு அதிகாரி தனது அதிகார வரம்பிற்குள் நின்று அந்த அமைப்பை எப்படி மக்கள் நலம்சார்ந்த ஒன்றாக மாற்ற முடியும் என்பதற்கு தாரேஸ் அகமது போன்ற சிலரே சாட்சி. அடிப்படையில் ஒரு மருத்துவரான தாரேஸ் அகமது, இந்திய ஆட்சிப் பணிக்கு வந்ததன் மூலம் ஒரு மருத்துவரின் பணியைத்தான் இங்கும் ஆற்றிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. ஊழல், முறைகேடு, அலட்சியம், மக்கள்விரோதப் போக்கு, ஆட்சியாளர்களுக்கு சேவகம் புரிதல் என எண்ணற்ற நோய்மைகளைக் கொண்ட நமது அதிகார வர்க்க அமைப்பு எப்போதோ உடைந்து சிதறிவிடாமல் இருப்பதற்கு தாரேஸ் அகமது போன்ற சில மக்கள் பணியாளர்கள்தான் காரணம். அவர்கள் காரிருள் நடுவே சிறு அகல் விளக்குபோல போராடிக்கொண்டிருக்கிறார்கள். துயரமும் பொறுப்பும் ஆசிட் வீசப்பட்ட மாணவி வினோதினியின் மரணம் இதை எழுதும் நேரம் பெரும் பாரமாய் நெஞ்சை அழுத்திக் கொண்டிருக்கிறது. டெல்லி மருத்துவ மாணவியைப் போலவே இந்த வாழ்க்கைக்குள் திரும்பி வரவேண்டும் என்று கடுமையாகப் போராடி இறந்து போனார் வினோதினி.

வினோதினி இறப்பதற்கு முன்பு பேசிய ஒரு வீடியோ பதிவு மனம் உருகச்செய்வது. அதில் அவர், ‘குற்றவாளியின் முகத்தில் அதுபோலவே ஆசிட் ஊற்ற வேண்டும்’ என்கிறார். அவர் இறந்த பிறகு அவரது தந்தையும் அதே கருத்தைக் கூறுகிறார். பாதிக்கப்பட்டவர்களின் இடத்திலிருந்து அவர்களது நியாயத்தையும் கோபத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் ஊடகங்களில் அந்தப் பதிவுகள் திரும்பத் திரும்பக் காட்டப்பட்டபோது, அவை உருவாக்கும் பொது கருத்தியல் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. எல்லா பிரச்னைகளுக்கும் கொடும் தண்டனைகளை மட்டும் தீர்வாகச் சொல்லி தப்பித்துக்கொள்ள விரும்பும் அரசாங்கத்திற்கும் நமது மத்தியதர வர்க்க மனசாட்சிக்கும் இது உவப்பானதாக இருக்கலாம். ஆனால் நீதி மிக்க ஒரு நாகரிக சமுதாயத்தை உருவாக்க விரும்புகிற சக்திகளை நாம் இதன் மூலம் தோல்வியடையச் செய்துவிடக் கூடாது.

தகவல்தொடர்புப் புரட்சி

அப்சல் குருவை தூக்கிலிடப் போகும் விஷயத்தை அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் காஷ்மீருக்கு தபாலில் அனுப்பி வைத்ததாம் மத்திய அரசு. கடிதம் கிடைக்காததால் அவர்கள் வர முடியவில்லையாம். இந்தியாவில் 3ஜி புரட்சியை தாண்டி 4ஜி யுகம் வரப்போகிறது. கொலைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு செய்தி சொல்ல மட்டும் இன்னும் இந்திய தபால்துறையைத் தவிர எந்த வழியும் இல்லை போலும்.
(இன்னும் நடக்கலாம்...)