+2 உயிரியல் சென்டம் வாங்க டிப்ஸ்





உயிரியலில் சென்டம் வாங்குவதைத் தொடர்ந்து தடுத்து வரும் வில்லன், ஏழே பாடங்கள் கொண்ட அதன் விலங்கியல் பகுதியே. காரணம், மொத்தம் 270 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் ‘உடற்செயலியல்’ என்ற முதல் பாடம் மட்டும் 120 பக்கம். இந்தப் பாடத்தின் உள்ளே இருந்து எடுக்கப்படும் ஒரு மார்க், மூன்று மார்க் கேள்விகளுக்கு சரியான பதிலை நினைவுபடுத்தி எழுதுவதற்குள் திணறி விடுகிறார்கள் மாணவர்கள். பக்க எண்ணிக்கை பார்த்து மலைத்துப் போகும் சில மாணவர்கள், இந்தப் பாடத்தை சாய்ஸில் விட்டு விட நினைத்து சென்டத்தை இழக்கிறார்கள். ஒரேயொரு பாடத்தால் சென்டம் பறிபோக விடலாமா?

‘‘மனித உடல், அதன் உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள் குறித்துப் பேசுகிற இந்தப் பாடம் மருத்துவப் படிப்பிலும் முக்கியமானதா இருக்கு. செரிமானம், சுவாசம், இனப்பெருக்கம் எல்லாம் எப்படி நடக்குதுன்னு தெரிஞ்சுக்கறதுதான் பாடம். படிக்கறப்ப ஆர்வமா கேக்குறாங்க பசங்க. ஆனா அளவு பெரிசா இருக்கற ஒரே காரணத்தால தான் மனசுல பதிய வைக்க சிரமப்படுறாங்க. தவிர, கேள்விகள் (ஒரு மார்க், சிறு வினாக்கள்) பாடத்துக்குள்ள இருந்து ரொம்ப நுணுக்கமா கேட்கப்படுறதாலயும், பாடத்தை ஏ டூ இசட் வாசிச்சா மட்டுமே பதில் எழுத முடியுது. ஆனா, மருத்துவர் ஆகவேண்டும்ங்கிற கனவோட இருக்கறவங்க எல்லாருமே, இந்தப் பாடத்தை முழுசா புரிஞ்சு படிக்க வேண்டியது அவசியம். பாடங்களுக்கு கொடுக்கற முக்கியத்துவத்தை ஆரம்பத்துலயே பிரிச்சுப் படிக்கலாம். மத்த பாடங்கள்ல 50 சதவீதம் கவனம் செலுத்துனா, மீதி 50 சதவீதத்தை முதல் பாடத்துக்கு ஒதுக்கணும்’’ என்கிறார் சென்னை எம்.சி.டி. முத்தையா செட்டியார் மேல்நிலைப் பள்ளியின் விலங்கியல் ஆசிரியர் இளங்கோவன்.

உயிரியல் வினாத்தாளின் பிற்பகுதியில் இடம்பெறும் விலங்கியல் பிரிவுக்கு மொத்தம் 75 மதிப்பெண்கள். 16 ஒரு மார்க் கேள்விகள், மூன்று மதிப்பெண் கேள்விகள் 8, ஐந்து மார்க் கேள்விகள் 3, பத்து மார்க் கேள்விகள் இரண்டு என விடையளிக்க வேண்டும். ஒரு மதிப்பெண் கேள்விகள் அனைத்துக்கும் பதிலளிக்க வேண்டும். மற்ற அனைத்திலும் சாய்ஸ் உண்டு. வினா எண் 31 கட்டாயக் கேள்வி.
கீழ்க்கண்ட விஷயங்கள் விலங்கியல் வினாக் களை எளிதாகக் கையாள உதவுவதாகச் சொல்கிறார் இளங்கோவன்...

*  ஒரு மார்க், மூன்று மார்க் கேள்விகளுக்கு புளூ பிரின்ட் பார்த்துப் படிப்பது மற்ற பாடங்களுக்கு ஓகே... ஆனால், முதல் பாடத்துக்கு ஒத்து வராது. எனவே, ‘உடற்செயலியல்’ பாடத்திலிருந்து ‘எதிர்பார்க்கப்படலாம்’ என ஆசிரியர் குறித்துக் கொடுத்த வினாக்களைத் தவற விடக்கூடாது. மேலும், பழைய கேள்வித்தாள்கள் அடிப்படையிலும் இந்தப் பாடத்திலிருந்து கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளைத் தொகுத்துப் படித்துச் செல்வது நல்லது. இந்தப் பகுதிகளிலிருந்தே பெரும்பாலும் மதிப்பெண் இழப்பு நேரிடுகிறது.

*  ஐந்து மதிப்பெண் கேள்விகளில் மொத்தம் மூன்று எழுத வேண்டும். ஐந்து கொடுக்கப் பட்டிருக்கும். புளூ பிரின்ட் படி, மொத்தமுள்ள 7 பாடங்களில் ‘சுற்றுச்சூழல் அறிவியல்’ மற்றும் ‘பயன்பாட்டு உயிரியல்’ இரண்டிலிருந்தும் இந்தப் பகுதியில் கேள்விகள் இடம்பெறுவதில்லை. எனவே மீதமுள்ள ஐந்து பாடங்களைப் படித்தாலே போதுமானது.

*  படம் தேவையிருக்கிற வினாக்கள் ‘நுண்ணுயிரியல்’ பாடத்திலிருந்தே கேட்கப்படுகின்றன. எனவே அதிலுள்ள படக் கேள்விகளை நன்கு எழுதிப் பார்த்து பழகிச் செல்ல வேண்டும்.

*  கேட்கப்படும் 4 பத்து மதிப்பெண் கேள்விகள், ‘உடற்செயலியல்’, ‘சுற்றுச்சூழல் உயிரியல்’, ‘பயன்பாட்டு உயிரியல்’ ஆகிய பாடங்களி லிருந்து மட்டுமே தலா 2, 1, 1 எனக் கேட்கப்படுகின்றன. மீதமுள்ள பாடங்களிலிருந்து இடம்பெறுவதில்லை.

*  முதல் பாடத்தை பாகங்களாகப் பிரித்துப் படிப்பது எளிதாக இருக்கும்.

எதிர்பார்க்கப்படுகிற முக்கியக் கேள்விகளின் பட்டியல் பகுதிவாரியாக இங்கே...

மூன்று மதிப்பெண் கேள்விகள்:
*  அவசியமான அமினோ அமிலங்கள் எவை? உதாரணம் தருக.
*  திறந்த முறிவு ஆபத்தானது ஏன்?
*  மரண விறைப்பு என்றால் என்ன?
*  ஹெரிங்-புரூயர் செயல் என்றால் என்ன?
*  பார்வைக் கணக்கீடு என்றால் என்ன?
*  கார்பஸ் லூட்டியம் என்பது என்ன?
*  மிக்ஸிடிமாவின் அறிகுறிகள் யாவை?
*  அமீபியாசிஸ் என்றால் என்ன?
*  சூனோசிஸ் என்பது என்ன?
*  சிந்தி, காங்கேயம் மாடுகளின் பால்மடி மற்றும் காம்புகளை ஒப்பிடுக
*  வெளிநாட்டு நன்னீர் மீன் எது? அதன் பண்புகள் யாவை?
*  ஹிமோசைட்டோ மீட்டரின் மருத்துவப் பயன்கள் யாவை?
*  பால் காய்ச்சல் நோய்க்கான முன்னெச்சரிக்கையும் முதலுதவியும் யாது?
*  குருதியாக்கம் என்றால் என்ன?
*  ஹாப்டென் என்றால் என்ன?
*  மண்ணீரலின் பணிகள் யாவை?

ஐந்து மதிப்பெண் கேள்விகள்:
*  எய்ட்ஸ் நோயின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை பற்றி எழுது.
*  வைரஸ் வளர்ப்பின் பல்வேறு வகைகளை விளக்குக.
*  பாக்டீரியா நோய்கள் ஏதேனும் நான்கினை விளக்குக.
*  வேதிப்பொருள் மருந்து சிகிச்சை என்றால் என்ன? அதன் பண்புகளைக் குறிப்பிடுக.
*  வேர்க்கால்வாய் சிகிச்சை பற்றி விளக்குக.
*  நினைவாற்றலின் வகைகளை விளக்குக.
*  மூளை தண்டுவட திரவம் பற்றி குறிப்பெழுதுக.
*  சோதனை குழாய் குழந்தைக் உருவாகும் முறையை விவரி.
*  அல்பினிசம் பற்றி எழுதுக.

பத்து மதிப்பெண் கேள்விகள்:
*  உலகளாவிய வெப்ப உயர்வு என்றால் என்ன? அதன் காரணங்கள், விளைவுகள் மற்றும் கட்டுப்பாடு பற்றி விவரி.
*  ஓசோன் - ஓர் இயற்கையான சூரியத்தடை - விளக்குக.
*  இடர்பாடு தரும் கழிவுகளின் மேலாண்மை பற்றி எழுதுக.
*  சிறுநீர் உற்பத்தியாகும் முறையை விவரி.
*  வைட்டமின் குறைபாட்டு நோய்கள் பற்றி விளக்குக.
*  எலும்பு முறிவு என்றால் என்ன?
*  மனித ரத்தத்தின் இயைபை விவரி.
*  அட்ரீனல் மெடுல்லாவின் ஹார்மோன் பணிகளைக் குறிப்பிடுக.
மருத்துவம், பொறியியல் படிப்புக்கு உதவும் அறிவியல் பாடங்களை இதுவரை பார்த்தோம். மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு மட்டுமே செல்ல முடியுமென்கிற ‘ப்யூர் சயின்ஸ்’ குரூப்பின் தாவரவியல், விலங்கியல் பாடங் களை அடுத்தடுத்த இதழ்களில் பார்க்கலாம்.
- தொகுப்பு: அய்யனார் ராஜன்
படங்கள்:புதூர் சரவணன், ஏ.டி.தமிழ்வாணன்
மாடல்: ஸ்வாதி